எழுதியவர் : மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
மனிதன் மலக்குகள் போன்று தவறே செய்யாதவனாக வாழ முடியாது! ஆசாபாசங்களும், உலகியல் தேவைகளும் உணர்ச்சிகளும் நிறைந்த சமூகப் பிராணியான மனிதன் தெரிந்தோ தெரியாமலோ, திட்டமிட்டோ திட்டமிடாமலோ பல்வேறு தவறுகளைச் செய்யலாம். ஆதி பிதா ஆதம்(அலை) அவர்களும், முதல் தாய் ஹவ்வா(அலை) அவர்களும் ஷைத்தானின் தூண்டுதலால் அல்லாஹ்வின் கட்டளையை மீறியமையை குர்ஆன் மூலம் நாம் அறிகின்றோம்.
இவ்வாறே, ஆதமுக்கு சுஜுது செய்ய வேண்டும் என்ற அல்லாஹ்வின் கட்டளையை ஷைத்தான் மீறினான். இதில் ஆதம் நபி மறதியாக மீறினார்கள். ஷைத்தான் கர்வத்தால் மீறினான். ஆதம் நபி தவறை உணர்ந்து தவ்பா செய்தார்கள். ஷைத்தான் தன் தவறை நியாயப்படுத்தி வாதிட்டான். இந்திகழ்ச்சியிலிருந்து மனிதன் தவறு செய்யும் இயல்பு உள்ளவன். ஆனால், குற்றம் புரிந்தவர்கள் தமது தவறுகளுக்காகத் தவ்பா செய்யும் போது ஆன்மீக ஈடேற்றத்தைப் பெறுகின்றனர். இவ்வகையில் குற்றம் புரிந்தவன் குற்ற உணர்வுடன் வாழ்வைப் பாழாக்கிக் கொள்ளாது தன்னைப் பக்குவப்படுத்தி திருந்துவதற்கான வாய்ப்பைத் தவ்பாவழங்குகின்றது. இந்த தவ்பா குறித்தும் அதன் ஆன்மீக, லௌஹீக பயன்பாடு குறித்தும் சுருக்கமாக நோக்குவோம்.
தவ்பாவின் நிபந்தனைகள்:
தவ்பா நிறைவேறவும், அதன் பயன்களைப் பெறவும் சில அடிப்படையான நிபந்தனை கள் இருக்கின்றன. அவற்றை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
1- தவறை அல்லாஹ்வுக்காக விடுதல்:
தான் செய்த தவறை விட்டும் ஒதுங்கிய ஒருவனால் மட்டுமேதவ்பாச் செய்ய முடியும். குறித்த தவறைச் செய்துகொண்டே நான்தவ்பா செய்கின்றேன் எனக் கூற முடியாது. அதேவேளை, தவறை அல்லாஹ்வுக்காக விட வேண்டும் என்பதும் கவனத்திற்குரியதாகும்.
2- செய்த தவறுக்காக வருந்துதல்:
தான் செய்த தவறு குறித்து வருத்தம் ஏற்பட வேண்டும். அந்த வருத்தமும் அல்லாஹ்வுக்காக ஏற்பட வேண்டும். நான் என் இரட்சகனுக்கு மாறு செய்து விட்டேனே! இப்படி செய்திருக்கக் கூடாதே என்றெல்லாம் வருத்தம் ஏற்பட வேண்டும். இந்தத் தவறைச் செய்ததால் இவ்வளவு செலவாகிவிட்டதே! டைம் வேஷ்ட்டாகி விட்டதே என்றெல்லாம் எண்ணம் வந்தால் அது தவ்பாவிற்குரிய வருத்தமாக இருக்காது!
“தவ்பா என்பதே (செய்த தவறைக் குறித்து) கவலை கொள்வதே என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்” (இப்னு மாஜா).
3- இந்தத் தவறை இனிச் செய்வதில்லை என்று உறுதி கொள்ளல்:
தான் செய்த தவறை மீண்டும் செய்வதில்லை என்று உறுதிகொள்ள வேண்டும். ஏதேனும் பலவீனத்தால் அதே தவறை மீண்டும் செய்து விட்டால் அவர் தவ்பாவைப் புதுப்பித்து தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும்.
4- மரணத்தறுவாய் வரை தாமதிக்காதிருத்தல்:
சிலர் கடைசி நேரத்தில் தவ்பா செய்து கொள்ளலாம் என எண்ணலாம். இது சாத்தியப்படுமா என்பது ஒரு பிரச்சினை; அடுத்து ஸகராத் ஹாலில் தவ்பா செய்தால் அது அங்கீகரிக்கப் படாது என்பது கவனிக்கத்தக்கதாகும்.
“இன்னும் எவர்கள் தீவினைகளைத் (தொடர்ந்து) செய்து கொண்டேயிருந்து, முடிவில் அவர்களை மரணம் நெருங்கிய போது, “நிச்சயமாக இப்பொழுது நான் (பாவங்களுக்காக வருந்தி) மன்னிப்புத் தேடுகிறேன்” என்று கூறுகின்றார்களோ, அவர்களுக்கும், எவர் காஃபிர்களாகவே மரிக்கிறார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்பு இல்லை, இத்தகையோருக்குத் துன்பம் கொடுக்கும் வேதனையையே நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்” (4:18).
“தொண்டைக் குழியில் உயிர் ஊசலா டாதவரையில் அடியானிடமிருந்து தவ்பாவை அல்லாஹ் அங்கீகரிக்கின்றான் என நபி (ஸல்) கூறியுள்ளார்கள்” (திர்மிதி).
எனவே, அந்த நிலைக்கு முன்னரே ஒவ்வொருவரும் தவ்பா செய்து கொள்ளவேண்டும்.
5- சூரியன் மேற்கில் உதிக்கும் முன்னர்:
உலக அழிவின் பெரிய அடையாளங் களில் சூரியன் மேற்கில் உதிப்பதும் ஒன்றா கும். இந்த அடையாளம் நிகழ்ந்த பின்னர் செய்யப்படும் தவ்பா பயனளிக்காது.
“யார் சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதற்கு முன்னர் தவ்பா செய்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் மன்னிப்பளிப்பான்” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்)
6- உரியவரிடம் மன்னிப்புக் கோரல்:
இவை பொதுவாக எல்லாவகை பாவங்களும் மன்னிக்கப்படுவதற்கான நிபந்தனைகளாகும். ஆனால், புரியப்பட்ட குற்றம் அல்லாஹ்வுடன் சம்பந்தப்பட்டதாக இருந்தால் இந்த நிபந்தனைகளே போதுமானதாகும். ஆனால், மற்ற மனிதர்களுக்குப் புரிந்த குற்றத்தை குறித்த பாதிக்கப்பட்ட நபரின் மன்னிப்பின் பின்பே அல்லாஹ் மன்னிப்பான். இந்த வகையில் மனி தன் மனிதனுக்குச் செய்த குற்றமாக இருந்தால் பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்புக்கோர வேண்டும். அடுத்தவருக்கு அநீதியிழைத்திருந்தால் அதற்குப் பரிகாரம் காணவேண்டும். பொருட்களை அபகரித்திருந்தால் அதனை உரியவரிடம் திருப்பிக்கொடுக்க வேண்டும். இது சாத்தியம் இல்லையெனில் அதிகமதிகம் பாவமன்னிப்புக் கோரி, புரிந்த குற்றத்திற்குப் பரிகாரம் காணும் விதத்தில் நல்லறங்களை அதிகரிக்க வேண்டும்.
ஆன்மீகப் பயன்கள்:
தவ்பாவின் மூலம் பல்வேறு பட்ட ஆன்மீகப் பயன்களை நாம் பெறுகின்றோம். அவற்றையும் அறிந்து கொள்ள முயல்வோம்.
1- பாவமீட்சி:
குற்றம் புரிந்தவன் பாவ மன்னிப்புப் பெற்று மீட்சி பெறுகின்றான். அவன் குற்றவுணர்விலிருந்து விடுபடுகின்றான். இது மிகப்பெரும் ஆன்மீக ஆதாயமாகும்.
2- அல்லாஹ்வின் நேசம்:
” … பாவங்களை விட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான். இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்” (2:222).
அல்லாஹ்வின் நேசம் என்பது சாதாரணமானதல்ல. அல்லாஹ்வின் நேசம் மலக்குகளினதும் நல்லடியார்களினதும் நேசத்தைப் பெற்றுத் தருகின்றது.
“அல்லாஹ் ஒரு அடியானை நேசித்தால் ஜிப் ரீலை அழைத்து நான் இன்ன நபரை நேசிக்கின்றேன். நீரும் அவரை நேசிப்பீராக என்பான். எனவே, ஜிப்ரீல்(அலை) அவரை நேசிப்பார். பின்னர் ஜிப்ரீல்(அலை) வானவர்களை அழைத்து அல்லாஹ் இந்நபரை நேசிக்கின்றான். எனவே, நீங்களும் அவனை நேசியுங்கள் என்பார். வானவர்களும் அவரை நேசிப்பார்கள். பின்னர் பூமியில் அவருக்கு (பிற மக்களின்) அங்கீகாரம் கிடைக்கும்” (புகாரி).
எனவே, அல்லாஹ்வின் நேசத்தைப் பெறவும் தூயமனதுடன் தவ்பா செய்ய வேண்டும்.
அடுத்து இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்ட “தவ்வாபீன்” என்ற பதம் அடிக்கடி தவ்பா செய்வோர் என்பதைக் குறிக்கும். எனவே, அதிகமதிகம் தவ்பா, இஸ்திஃபார் புரிதல் ஏற்றம் மிக்கதாகும்.
அடுத்து இந்த வசனத்தில் கவனிக்கத் தக்க மற்றுமொரு அம்சமும் உள்ளது. அல்லாஹ் தவ்பா செய்பவர்களையும் பரிசுத்தவான் களையும் நேசிப்பதாக இவ்வசனம் கூறுகின்றது. இந்த இடத்தில் பரிசுத்தவான்கள் எனக்கூறப்படுவது குற்றங்களை விட்டும் பரிசுத்தமானவர்களைக் குறிக்கும் என்பது அறிஞர்களின் அபிப்பிராயமாகும். அவ்வாறெனில் அல்லாஹ்வின் நேசத்திற்கு தவ்பா செய்பவர்கள் முற்படுத்தப்பட் டிருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கதாகும்.
இது குறித்து இமாம் குர்தூபி பேசும் போது “பாவம் செய்துவிட்டு மன்னிப்புக் கேட்பவனை பாவமே செய்யாதவனை விட தனது நேசத்திற்கு அல்லாஹ் ஏன் முற்படுத்தினான் எனில், குற்றமிழைத்தவன் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடக்கூடாது! குற்றமிழைக்காதவன் நான் தான் சுத்தவாளி என மமதை கொண்டுவிடக்கூடாது என்பதற்காகும்” எனக் குறிப்பிடுகின்றார்கள் (தப்ஸீர் குர்தூபி).
3- அல்லாஹ்வின் புகழ்ச்சி:
தவ்பா செய்பவர்களை அல்குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் புகழ்ந்து கூறுகின் றான்.
“மன்னிப்புக்கோரி மீண்டவர்கள், (அவனை) வணங்கு பவர்கள், (அவனைப்) புகழ்பவர்கள், நோன்பு நோற்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜுது செய்பவர்கள் (தொழுபவர்கள்), நன்மை செய்ய ஏவுபவர்கள், தீமையை விட்டு விலக்குபவர்கள், அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணிப் பாதுகாப்பவர்கள் – இத்தகைய (உண்மை) முஃமீன்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக!” (9:112).
மேற்படி வசனத்தில் முஃமீன்களின் பண்புகளில் முதல் தரமானதான இப் பண்பு குறிப்பிடப்பட்டிருப்பது அவதானிக்கத் தக்க தாகும்.
4- மலக்குகளின் பிரார்த்தனை:
தவ்பா செய்பவர்களுக்காக மலக்குகள் அதிலும் குறிப்பாக அல்லாஹ்வின் அர்ஷை சுமந்து கொண்டிருக்கும் வானவர்களும், அல்லாஹ்வைச் சூழ இருப்பவர்களும் பிரார்த்திக்கின்றனர்.
“அர்ஷை சுமந்துகொண்டிருப்பவர்களும், அதைச் சுற்றியுள்ளவர்களும் தங்கள் இறைவனின் புகழைக் கொண்டு அவனைத் தஸ்பீஹ் செய்து கொண்டும் இருக்கிறார்கள். அவன் மேல் ஈமான் கொண்டவர்களாக மற்ற ஈமான் கொண்டவர்களுக்காக மன்னிப்புக் கோருகின்றனர். “எங்கள் இறைவனே! நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்து இருக்கிறாய்! எனவே, பாவமீட்சி கோரி உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு, நீ மன்னிப் பளிப்பாயாக. இன்னும் அவர்களை நரக வேதனையி லிருந்தும் காத்தருள்வாயாக!” (40:7).
“எங்கள் இறைவனே! நீ அவர்களுக்கு வாக்களித்திருக்கும், நிலையான சுவர்க்கத்தில், அவர்களையும், அவர்கள் மூதாதையர்களிலும், அவர்கள் மனைவியர்களிலும், அவர்கள் சந்ததியார்களிலும் நன்மை செய்தோரையும் பிரவேசிக்கச் செய்வாயாக. நிச்சயமாக நீ தான் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.”(40:8)
மேற்படி வசனத்தில் தவ்பா செய்பவர் களுக்காக பின்வரும் விடயங்களை வேண்டி மலக்குகள் பிரார்த்திப்பதாகக் கூறப்படுகின்றது.
(1) அல்லாஹ்வின் வழிமுறையைப் பின்பற்றி வாழும் தவ்பாதாரிகளுக்கு பாவமன்னிப்பை நல்குவாயாக!
(2) நரகத்தை விட்டும் அவர்களைக் காப்பாற்றுவாயாக!
(3) அவர்களையும், அவர்களது பெற்றோர்கள், மனைவிகள், சந்ததிகளில் நல்லவர்களையும் சுவனத்தில் நுழையச் செய்வாயாக!
(4) பாவங்களையும் தீங்குகளையும் விட்டும் அவர்களை நீ பாதுகாப்பாயாக!
மலக்குகளின் மேற்படி துஆ மூலமாக தவ்பாவின் மகத்துவத்தையும் உணர்ந்துகொள்ளலாம். தவ்பாவின் மூலம் தவ்பாச் செய்பவர் மட்டுமன்றி அவரின் பெற்றோர், சந்ததிகள், மனைவியர்களில் நல்லோர்களும் இந்தப் பாக்கியத்தைப் பெறுகின்றனர்.
5- நன்மைகளாக மாறும் தீமைகள்:
“ஆனால், (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ – அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றி விடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்” (25:70).
அர்ரஹ்மானின் அடியார்கள் பற்றிப் பேசும் போது அவர்கள் இணை வைக்க மாட்டார்கள். கொலை, விபச்சாரம் புரியமாட்டார் கள் என்றெல்லாம் கூறிய பின்னரே இந்த வசனம் இடம்பெற்றுள்ளது. இத்தகைய பாவங்கள் செய்தவர்கள் கூட தூய முறையில் தவ்பா செய்து அதன் பிறகு நல்லறங்களில் ஈடுபட்டால் அவர்களின் பாவங்களே நன்மைகளாக மாற்றப்படுகின்றன. இது மாபெரும் அருளாகும். அல்லாஹ்வின் அளவற்ற அன்பையும், அருளையும் வெளிப்படுத்தும் இத்தன்மை குறித்து சுவாரஸ்யமான ஒரு நிகழ்ச்சியை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
“மறுமையில் ஒரு மனிதர் கொண்டுவரப்படுவார். அவரின் சின்னச் சின்னப் பாவங்களை அவருக்கு எடுத்துக் காட்டுங்கள். பெரிய குற்றங்களை உயர்த்திவிடுங்கள் என்று கூறப்படும். அவரிடம் “நீ இன்னின்ன நாளில் இப்படி இப்படியெல்லாம் செய்தாய்” என்று சின்னச் சின்ன குற்றங்கள் எடுத்துக்காட்டப்படும். அவன் அதை மறுக்கமுடியாது. அவற்றை ஒப்புக் கொள்வான். அதே வேளை தனது பெரும் குற்றங்கள் எடுத்துக் காட்டப்படுமோ என்று அஞ்சியவனாக இருப்பான். சிறிய பாவங்கள் காட்டப்பட்ட பின் “உனது ஒவ்வொரு பாவத்திற்கும் ஒரு நன்மை பதியப்படும்” என்று கூறப்படும். உடனே அவன் “எனது இரட்சகனே! நான் இன்னும் பல பாவங்கள் செய்துள்ளேன். அவற்றை நான் காணவில்லையே” என்று கூறுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு தனது கடைவாய்ப் பற்கள் தெரியுமளவுக்கு சிரித்தார்கள்” என அபூதர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்).
6- அமல்கள் அங்கீகரிக்கப்படல்:
“அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும், “இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருட்கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக்கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என் னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன் பக்கமே திரும்புகிறேன். அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்” என்று கூறுவான்.
“சுவனவாசிகளான இ(த்தகைய)வர்கள் செய்தவற்றில் அழகான – நன்மையானவற்றை நாம் அங்கீகரித்துக் கொண்டு, இவர்களின் தீவினைகளைப் பொறுப்போம். இவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதி உண்மை யான வாக்குறுதியாகும்” (46:15-16)
மேற்படி வசனம் தவ்பா செய்பவர்களின் அமல்கள் அங்கீகரிக்கப்படும் என்றும், அவர்கள் புரிந்த குற்றங்கள் விஷயத்தில் விட்டுக் கொடுத்து நடத்தப்படுவார்கள் என்றும் அவர்கள் சுவனவாசிகளைச் சேர்ந்தவர்களென்றும் கூறப் படுகின்றது.
7- சுவனம் செல்லல்:
அடியான் அடையும் அனைத்து அருள் களிலும் மேலானது சுவனமே! தவ்பாதாரிகள் அதனை அடைவார்கள் எனக் குர்ஆன் குறிப்பிடுகின்றது.
“ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ் விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப்போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான், அவற்றின் கீழே ஆறுகள் (சதா) ஓடிக்கொண்டே இருக்கும். (தன்) நபியையும், அவருடன் ஈமான் கொண்டார்களே அவர்களையும் அந்நாளில் அல்லாஹ் இழிவு படுத்தமாட்டான். (அன்று ஈடேற்றம் பெற்ற) அவர்களுடைய பிரகாசம் (ஒளி) அவர்களுக்கு முன்னும், அவர்களுடைய வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும், அவர்கள் “எங்கள் இறைவா! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்” என்று கூறி(ப் பிரார்த்தனை செய்து) கொண்டு இருப்பார்கள்” (66:8).
மேற்படி வசனத்தில் தவ்பா செய்பவர் களது பாவங்கள் மன்னிக்கப்படுவதுடன் அவர்களுக்கு “ஒளி” வழங்கப்படும் என்றும் அவர்கள் சுவனத்தில் நுழைவிக்கப்படுவர் என்றும் கூறப்படுகிறது!
8- சுவனம் அருகில் கொண்டுவரப்படல்:
தவ்பாதாரிகள் சுவனம் செல்வதுடன் மிகுந்த கண்ணியத்தையும் இது விடயத்தில் பெறுவர். இது குறித்து இமாம் குஷைரி (ரஹ்) விளக்கம் கூறும் போது “மனிதர்கள் மூன்று வகையினர்.
(1) சுவனத்தை நோக்கி நடந்தவர்களாக செல்பவர்கள். தமது இரட்சகனை அஞ்சி நடந்தோர் கூட்டம் கூட்டமாக சுவனத்தை நோக்கி கொண்டு வரப்படுவார்கள்.
(2) கண்ணியமாக ஒன்றுசேர்க்கப்படுவோர்
“அர்ரஹ்மானாகிய நம்மிடத்தில் பயபக்தியுடையவர்களை நாம் கூட்டமாக ஒன்று சேர்க்கும் நாளில்;” (19:85)
(3) விசாரனை செய்யப்படும் இடத்திற்கே இவர்களை நோக்கி சுவனம் கொண்டுவரப்படும்.
“(அன்றியும் அந்நாளில்) பயபக்தியுடையவர் களுக்கு சுவர்க்கம் தொலைவில்லாத நிலையில் மிகவும் சமீபமாக்கப்படும்.”
“இது தான் உங்களுக்கு வாக்களிக்கப் பட்டதா(ன சுவர்க்கமா)கும்; எப்பொழுதும் இறைவனையே நோக்கி, (பாவத்தை தவிர்த்துப்) பேணி நடந்த ஒவ்வொருவருக்கும் (இது உரியது).” (50:31-32)
இவர்களுக்கு சிறப்பளிக்கும் விதத்தில் இப்படிக் கூறப்படுகின்றது. இவர்கள் மிக உயர்ந்தவர்கள் என்று தனது “லதாயிபுல் இஷாராத்” என்ற நூலில் குறிப்பிடுகின்றார்கள். இது தவ்பா தாரிகளின் சிறப்பைத் தெளிவுபடுத்துகின்றது.
லௌஹீக பயன்கள்
தவ்பா செய்வதனால் பல் வேறுபட்ட உலகியல் நலன்களும் கிடைக்கப்பெறுகின்றன என குர்ஆன் குறிப்பிடுகின்றது!
1- அழகிய வாழ்க்கை:
“நீங்கள் உங்கள் இறைவனிடம் மன்னிப்பைத் தேடி (பாவங்களை விட்டு) அவனிடம் திரும்புங்கள்; (நீங்கள் அவ்வாறு செய்தால்) அவன் ஒரு குறித்த தவணைவரை உங்களுக்கு வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்துவான்; இன்னும், அருளுடைய ஒவ்வொருவருக்கும் (மறுமையில்) தன் அருளை (அதிகமாகவே) கொடுப்பான்;. ஆனால் நீங்கள் (ஈமான் கொள்வதைப்) புறக்கணித்தால், மாபெரும் நாளின் வேதனை குறித்து நிச்சயமாக உங்களுக்காக நான் பயப்படுகிறேன் ” (11:03)
இந்த வசனம் தவ்பா கேட்பவர்களுக்கு இவ்வுலகில் நல்வாழ்வு வழங்கப்படும் என்றும் மறுமையில் நற்கூலி நல்கப்படும் என்றும் கூறுகின்றது.
மேற்படி வசனங்கள் தவ்பாவின் மூலம் மழை பொழியும் என்றும், உற்பத்தி அதிகரிக்கும் என்றும், குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்றும் உணர்த்தப்படுகின்றது.
இந்த வசனம் தௌபாவின் மூலம் தொடரான மழையைப் பெறலாம் என்றும் அதன் மூலம் எமது சக்தி சகல விதங்களிலும் அதிகரிக்கப்படும் என்பதையும் அறியலாம்.
உலகியல், மறுமை வெற்றி:
“ஆனால், எவர் தவ்பா செய்து நன்னம்பிக்கை கொண்டு, நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்கள் சித்தியடைந்தோரில் ஆகுவார்கள்” (28:67).
மேற்படி வசனங்கள் வெற்றியைப் பெற் றுத்தரும் என அறிவுறுத்துகின்றன. இவ்வாறான எண்ணற்ற பலன்களை தவ்பா மூலம் நாம் பெறலாம். எனவே, உரிய முறையில் தவ்பா செய்து உயரிய பயனை அடைய முயற்சிப் போமாக!
உண்மை உதயம் மாதஇதழ் 2007
No comments:
Post a Comment