Sunday, October 4, 2009

மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (தொடர் 03)

எழுதியவர்: மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி on Tuesday, April 14th, 2009

அன்பின் நண்பர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்.

சூனியம் என்றால் வெறும் தந்திர வித்தைதான் என்ற கருத்துத் தவறானது என்பது குறித்தும், ‘(நபியே) மனிதர்களிலிருந்து உம்மை அல்லாஹ் பாதுகாப்பான்’ என்ற குர்ஆன் வசனத்திற்கு நபியவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகச் கூறும் ஹதீஸ் முரண்படுகின்றது என்ற வாதம் போலியானது என்பது குறித்தும் இந்தொடரில் ஆராயப்படுகின்றது.

கடந்த இரு தொடர்களில்…

குர்ஆனுக்கு முரண்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுக்க வேண்டும் என்ற ஆய்வாளர் PJ-யின் நிலைப்பாடு, முன்னர் சூனியம் இருக்கிறது, நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்ற ஹதீஸை சரிகண்டேன். எனினும், மறு ஆய்வில் அது தவறு என்பதைப் புரிந்துகொண்டேன் என்ற விபரம் சொல்லப்படவேண்டும்.’ ஆனால், அப்படி எதையுமே சொல்லாமல் பில்லி-சூனியம் என்ற இரு புத்தகங்களும் ஒன்றுக்கு ஒன்று நேர்-முரணான கருத்தைத் தருகின்றன. இது நியாயம்தானா? மார்க்கத்தைத் தெளிவாகவும், துணிவாகவும், ஒழிவு-மறைவின்றியும் சொல்கிறார் என்பதற்காகத்தானே இவர் மீது பாசம் வைத்தோம்ள, அவரை நேசித்தோம். இவர் மீதுள்ள பாசத்தால் பலரைக் கோபித்தோம்.

நோன்பு துறக்கும் போது “தஹபல்லமஉ” துஆ ஓதவேண்டும் என ஆரம்பத்தில் கூறினோம். பின்னர், அந்த ஹதீஸ் பலவீனமானது என்று தெரிந்ததும் நாம் முன்னர் கூறியது தவறு என்று PJ பகிரங்கமாக அறிவித்தது போன்று சூனியம் பற்றி அறிவிக்காமல் ஏன் மாற்றம் மட்டும் கொண்டுவரப்பட்டது!

PJ-இன் இரண்டாவது சூனிய நூல், PJ அவர்களின் அல்குர்ஆன் தர்ஜமா விளக்கக் குறிப்பு இல-357 இன் மறுவடிவமாகும். தற்போது நாம் கையில் வைத்திருக்கும் நூல் 2005 ஆகஸ்டில் வெளியான மூன்றாவது பதிப்பாகும். தர்ஜமா குறிப்புடன் சில பின்னிணைப்புக்களைச் சேர்த்துள்ளார். (அந்த இணைப்பில் பல அகீதா ரீதியான தவறுகள் இருக்கின்றன. இந்த மறுப்பின் இறுதியில் அது பற்றியும் இன்ஷா அல்லாஹ்-விபரிக்கப்படும்.)

இந்த நூலில் PJ அவர்கள் 51:52, 7:107-109, 10:75-77, 26:31-35, 28:36, 51:38-39, 27:12-14, 40:24, 5:110, 61:6, 6:7, 10:2, 21:3, 28:48, 34:43, 37:14-15, 38:4, 43:30, 46:7, 54:2, 7:116, 20:66, 20:69 ஆகிய வசனங்களின் மொழிபெயர்ப்புக்களைப் போட்டுக்கொண்டு வருகிறார். இது PJ அவர்களின் வழமையான எழுத்து-நடைக்கு மாற்றமான முறையாகும். அவர் ஒரு வசனம் எழுதினால் இரண்டு பக்கங்களாவது விளக்கம் எழுதுவார். ஆனால், இங்கு வசனங்களாகவே எழுதிக்கொண்டு வருகின்றார்.

நிறைய வசனங்களை வைத்துத்தான் PJ இந்த முடிவுக்கு வந்துள்ளார் என்ற ஒரு மாயையை ஏற்படுத்தும் ஒரு தந்திரமாகவே இதைக் கொள்ள வேண்டியுள்ளது.

இவ்வளவு வசனங்கள் மூலமும் அவர் வைக்கும் ஒரே வாதம்: நபிமார்கள் செய்த அற்புதங்களை, சூனியம் என்று மக்கள் கூறியுள்ளனர். இதிலிருந்து சூனியம் என்றால் தந்திரத்தின் மூலம், வித்தையின் மூலம் மக்களை ஏமாற்றுவது என்பதுதான் அர்த்தம் என்பது உறுதியாகின்றது என்பதேயாகும்.

மக்கள் நபிமார்களின் அற்புதங்களை மட்டும் சூனியம் என்று கூறவில்லை. அவர்கள் கொண்டுவந்த வேதத்தையும் கூட சூனியம் என்றுதான் கூறினர்.

நம்மிடமிருந்து அவர்களிடம் உண்மை வந்த போது ”மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டது போன்றது இவருக்கும் கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதா?” எனக் கூறுகின்றனர். இதற்கு முன் மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டதை அவர்கள் மறுக்கவில்லையா? ”இரண்டும் ஒன்றையொன்று மிஞ்சும் சூனியங்களே” என்று கூறுகின்றனர். ”அனைத்தையும் நாங்கள் மறுக்கிறோம்” எனவும் கூறுகின்றனர். (28:48)

அவர்களிடம் உண்மை வந்த போது ”இது சூனியம். இதை நாங்கள் மறுப்பவர்கள்” எனக் கூறினர். (43:30)

இவர்களுக்கு நமது தெளிவான வசனங்கள் கூறப்பட்டால் தம்மிடம் வந்த சத்தியத்தை மறுப்போர், ”இது தெளிவான சூனியம்” என்று கூறுகின்றனர். (46:7)

எனவே, அற்புதம் அல்லாத விடயங்களையும் அவர்கள் சூனியம் என்று கூறியதிலிருந்து “சூனியம் என்றால் தந்திர வித்தை என்று மக்கள் விளங்கியிருந்தார்கள்” என்ற PJ-யின் வாதம் வலிமையற்றுப் போகின்றது. இதற்கு மற்றுமொரு சான்றையும் கூறலாம்.

”மர்யமின் மகன் ஈஸாவே! உம் மீதும், உமது தாய் மீதும் உள்ள எனது அருட்கொடையை நினைத்துப் பார்ப்பீராக! (ஜிப்ரீல் எனும்) ரூஹுல் குத்ஸைக் கொண்டு உம்மை நான் வலுவூட்டியபோது. தொட்டில் பருவத்திலும் வாலிபப் பருவத்திலும் நீர் மனிதர்களுடன் பேசியதையும், வேதத்தையும், ஞானத்தையும், தவ்றாத்தையும், இன்ஜீலையும் உமக்கு நான் கற்றுத் தந்ததையும் (எண்ணிப்பார்ப்பீராக.) களிமண்ணால் ஒரு பறவையின் தோற்றத்தைப் போல் என் அனுமதிப்படி நீர் உருவாக்கி, பின்னர் அதில் நீர் ஊதினீர். அப்போது, அது எனது உத்தரவுப் பிரகாரம் (உயிர் உள்ள) பறவையாக மாறியதையும், எனது உத்தரவுப் பிரகாரம் பிறவிக் குருடனையும் குஷ்டரோகியையும் நீர் குணப்படுத்தியதையும், என் உத்தரவுப் பிரகாரம் இறந்தோரை (மண்ணறைகளிலிருந்து உயிருடன்) நீர் வெளிப்படுத்தியதையும் (எண்ணிப்பார்ப்பீராக). தெளிவான சான்றுகளை நீர் அவர்களிடம் கொண்டுவந்த நேரத்தில், அவர்களில் நிராகரித்தோர், ‘இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறில்லை’ என்று கூறியபோது, உம்மை விட்டும் இஸ்ராஈலின் சந்ததியினரை நான் தடுத்ததையும் (எண்ணிப் பார்ப்பீராக!) என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நீர் எண்ணிப்பார்ப்பீராக!) (5:110)

இங்கே பிறவிக் குருடனையும், வெண்குஷ்டவாளிகளையும் ஈஸா(அலை) அவர்கள் குணப்படுத்துகின்றார்கள். அதைப் பார்த்த மக்கள் இது சூனியம் என்று கூறுகின்றனர். அவர்கள் இதை Magic என்றோ, வித்தை என்றோ கருதி கூறியிருக்க முடியுமா? கண் முன்னால் பார்வையிழந்தவன் பார்க்கிறான், தீர்க்க முடியாத வியாதி எனக் கருதப்பட்ட குஷ்டரோகம் குணம் பெறுகின்றது. இது எப்படி வித்தையாகும்? சூனியத்தை வித்தை என்று அவர்களோ குர்ஆனோ, ஹதீஸோ இஸ்லாமிய உலகமோ கூறவில்லை. அவர்கள் சூனியம் என்பது தீய சக்திகளின் உதவியால் செய்யப்படும் அறிவுக்குப் புலப்படாத ஒரு கலை என்றுதான் புரிந்திருந்தனர். இந்த அடிப்படையில்தான் நபிமார்கள் செய்த அற்புதங்கள், அவர்கள் கொண்டுவந்த வேதம் அனைத்தும் அல்லாஹ்விடமிருந்து வந்ததல்ல ஷைத்தானிடமிருந்து இவர்கள் பெற்றது. இவர்கள் ஷைத்தானிய சக்தி மூலம் தம்மை இறைத்தூதர்கள் என சாதிக்க முற்படுகின்றனர் என்ற கருத்தில்தான் நபிமார்கள், ரசூல்மார்கள் கொண்டுவந்த வேதமும் சூனியம் என்று விமர்சிக்கப்பட்டது.

இதனைப் பின்வரும் வசனமும் ஹதீஸும் உறுதி செய்கின்றன.

(குர்ஆனாகிய) இதைக்கொண்டு ஷைத்தான்கள் இறங்கவில்லை. அது அவர்களுக்குத் தகுதியுடையதுமன்று, அதற்கு அவர்கள் சக்திபெறவும் மாட்டார்கள். நிச்சயமாக அவர்கள் (இதை ஒட்டுக்) கேட்பதை விட்டும் தடுக்கப்பட்டுள்ளனர். (26:210-212)

நபி(ஸல்) அவர்கள் சுகயீனமுற்று ஓர் இரவு அல்லது இரண்டு இரவுகள் நின்று வணங்காதிருந்த போது ஒரு பெண் நபியவர்களிடம், ‘முஹம்மதே! உமது ஷைத்தான் உம்மைக் கை விட்டு விட்டான் எனக் கருதுகிறேன்.’ எனக் கூறினாள். அப்போதுதான் “உமது இரட்சகன் உம்மைக் கை விடவில்லை” எனக் கூறும் 93 ஆம் அத்தியாயம் அருளப்பட்டது. (புகாரி-4983)

குர்ஆனைக் கூட நபி(ஸல்) அவர்கள் ஷைத்தானிடமிருந்து பெற்று அறிவிப்பதாகவே காபிர்கள் எண்ணியுள்ளனர். இந்த அடிப்படையில்தான் வேதங்களையும் சூனியம் என்றனர் என்பதை இதன்மூலம் அறியலாம்.

நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம்

லஃபீத் இப்னுல் அஃஸம் என்ற பனூ ஸுரைக் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு மனிதன் நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்தான். ஒன்றைச் செய்யாமலேயே செய்ததாக நபி(ஸல்) அவர்களுக்கு மாயத் தோற்றம் இதனால் ஏற்பட்டது. ஒரு நாள் அல்லது ஒரு இரவு அவர்கள் என்னிடம் இருக்கும் போது பிரார்த்திக் கொண்டே இருந்தார்கள். பின்னர்,’ஆயிஷாவே! நான் தீர்வு கேட்டுக்கொண்டிருந்த விடயத்தில் அல்லாஹ் எனக்குத் தீர்வு சொல்லி விட்டான். இரண்டு மனிதர்கள் என்னிடம் வந்து ஒருவர் என் தலையருகிலும், மற்றவர் என் காலுக்கு அருகிலும் அமர்ந்தனர். அவர்களில் ஒருவர் மற்றவரிடம் ‘இவருக்கு என்ன?’ என்று கேட்க, மற்றவர் ‘இவர் சூனியம் செய்யப்பட்டுள்ளார்’ என்றார். ‘யார் செய்தது?’ எனக் கேட்ட போது, ‘லபீதிப்னுல் அஃஸம்’ எனக் கூறினார். ‘எதில் சூனியம் செய்யப்பட்டுள்ளது?’ எனக் கேட்ட போது ஆண் ஈத்தமரப் பாளையிலே சீப்பு, முடி என்பவற்றில்’ என மற்றவர் பதில் கூறினார். ‘எங்கே?’ எனக் கேட்ட போது, ‘தஃலான் கோத்திரக் கிணற்றில்’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் தனது தோழர்கள் சிலருடன் அங்கே வந்தார்கள்.

பின்னர், (என்னிடம்) வந்த போது ‘ஆயிஷாவே! அந்தக் கிணற்றின் நீர் மருதோண்டி கலந்தது போன்று அல்லது அந்தக் கிணற்றருகில் இருந்த ஈத்த மரங்களின் கிளைகள் ஷைத்தானின் தலைபோன்று இருந்தது’ என்றார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே! அதை நீங்கள் வெளிப்படுத்திருக்கக் கூடாதா?’ என நான் கேட்டேன். அதற்கவர்கள், ‘அல்லாஹ் எனக்கு சுகமளித்துவிட்டான். இதன் மூலம் மக்கள் மத்தியில் தீமை பரவுவதை நான் வெறுத்தேன்’ எனக் கூறினார்கள். அந்தக் கிணற்றை மூடி விடுமாறு ஏவினார்கள் அது மூடப்பட்டது’ என ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்.

(குறிப்பு:- நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரும் ஏனைய நபிமொழிகள் அனைத்தையும் “ஹதீஸ்களுக்கிடையே முரண்பாடு இருக்கின்றது” என்ற PJ-யின் வாதத்திற்கு மறுப்புக் கூறும் போது தரப்படும்.) இந்த ஹதீஸை மறுக்கப் பல வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த வாதங்களுக்குரிய தெளிவான விளக்கங்களைத் தொடராக நோக்குவோம்.

பாதுகாக்கப்பட்ட நபி:

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்ற ஆதாரபூர்வமான ஹதீஸை மறுப்போர் பின்வருமாறு வாதம் செய்கின்றனர்.

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஹதீஸ் பல குர்ஆன் வசனங்களுக்கு முரண்படுகின்றது.

தூதரே! உமது இரட்சகனிடமிருந்து உமக்கு இறக்கிவைக்கப்பட்டதை எடுத்துரைப்பீராக! (அவ்வாறு) நீர் செய்யாவிட்டால் அவனது தூதுத்துவத்தை நீர் எடுத்துரைத்தவராகமாட்டீர். அல்லாஹ் உம்மை மனிதர்களிலிருந்து பாதுகாப்பான். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களான கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான். (5:67)

இந்த வசனம் மனிதர்களிடமிருந்து நபியை அல்லாஹ் பாதுகாப்பான் என்று உத்தரவாதப் படுத்துகின்றது. நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்றால் நபிக்கு அல்லாஹ் கொடுத்த பாதுகாப்பு எங்கே? அல்லாஹ் பாதுகாப்பான் எனும் போது நபிக்கு சூனியம் செய்ய முடியுமா? என்ற அடிப்படையில் வாதம் செய்கின்றனர்.

PJ அவர்களது தர்ஜுமா முதலாம் பதிப்பில் 357 ஆம் குறிப்பில் இந்த வசனத்தை முக்கிய சான்றாக அவர் முன்வைக்கின்றார். ஆரம்பத்தில் இந்த வசனம்தான் சூனிய ஹதீஸை மறுப்பதற்கு வலுவான வாதமாக முன்வைக்கப்பட்டது. இந்த வசனத்திற்கு இந்த ஹதீஸ் எங்கே முரண்படுகின்றது?

இந்த வாதத்திற்கு ஒரு வரியில் விடை கூறலாம்! அல்லாஹ் கூறியது போன்று நபி (ஸல்) அவர்கள் சூனியத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார்கள் என்றுதானே இந்த ஹதீஸ் கூறுகின்றது? இந்த வசனமும், ஹதீஸும் முரண்படவில்லையே! என்று கூறி விடலாம்.

உஹதுப் போரில் நபி (ஸல்) அவர்கள் தாக்கப்படவில்லையா? அவரது முகத்தில் இரத்தம் தோயவில்லையா?

கைபரில் யூதப் பெண், நபி (ஸல்) அவர்களுக்கு விஷம் கலந்த ஆட்டிறைச்சியை வழங்கினாள். நபி (ஸல்) அவர்கள் அதில் சிறிது சாப்பிட்டு விட்டார்கள். பின்னர், விஷம் கலக்கப்பட்ட செய்தி வஹீ மூலம் கிடைத்தது. அல்லாஹ் அவர்களைக் காத்தான்.

நபியவர்கள் தனது மரண வேளையில்,
நான் கைபரில் சாப்பிட்ட (விஷம் கலந்த) உணவின் வேதனையை இப்போது உணர்கிறேன். (புகாரி) என்றார்களே! அப்படியாயின் இந்த ஹதீஸ் 5:67 வசனத்திற்கு முரண்படுகின்றதா?

உண்மையில் 5:67 வசனத்தில் நபியைப் பாதுகாப்பதாக அல்லாஹ் உத்தரவாதம் அளிக்கின்றான். அந்த உத்தரவாதத்தின் அர்த்தம் என்னவென்றால் நபியை யாரும் கொல்;ல முடியாது என்பதுதான். எனவே, கொல்ல முடியாது எனக் கூறும் குர்ஆன் வசனத்திற்குச் சூனியம் செய்யப்பட்டுப் பின்னர் பாதுகாக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் எந்த வகையில் முரண்படுகின்றது? என்று சிந்தித்துப் பாருங்கள்.

கொல்ல முடியாது என்பதுதான் 5:67 வசனத்தின் கருத்து என நாம் கூறவில்லை. அந்த வசனத்தின் அர்த்தமும் அதுதான். அந்த வசனம் குறித்த பின்வரும் PJ அவர்களின் விளக்கத்தைப் பொறுமையுடன் படித்துப் பாருங்கள்.

யாராலும் கொல்ல முடியாத தலைவர்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்றைய சமுதாயத்தில் இருந்த அனைத்துத் தீமைகளையும் தைரியமாக எதிர்த்ததால் ஏராளமான எதிரிகளைச் சம்பாதித்து வைத்திருந்தனர். அவர்களை எப்படியாவது கொன்று விட வேண்டும் என்று பல வகையிலும் முயற்சிகள் நடந்தன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கோட்டை, கொத்தளங்களில் ஒளிந்து கொண்டிருக்கவில்லை. குடிசையில் தான் வசித்தார்கள். வாயிற்காப்போன் யாரும் இருக்கவில்லை. வீதியில் சாதாரணமாக நடமாடினார்கள். உயிரைக் காக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. எந்தக் கொள்கையிலும் சமரசம் செய்து கொள்ளவில்லை.

போர்க் களங்களிலும் பங்கெடுத்து கொல்லப்படுவதற்கான வாய்ப்பை தாமாகவே எதிரிகளுக்கு வழங்கினார்கள். ஆனாலும் அவர்களை யாரும் கொல்ல முடியவில்லை. ‘உம்மை இறைவன் காப்பான்’ என்ற இந்த முன்னறிவிப்பு நிறைவேறியது. (திருக்குர்ஆன் 5:67)

இப்படி அறை கூவல் விட்டதை முறியடிப்பதற்காகவாவது எதிரிகள் அவரைக் கொன்றிருந்தால் இது பொய்யான மார்க்கம் என்று நிரூபித்திருப்பார்கள். ஆனாலும் இயலவில்லை.

இது இறைவனது வார்த்தையாகவும், உத்தரவாதமாகவும் இல்லாதிருந்தால் அவர்கள் என்றோ கொல்லப்பட்டிருப்பார்கள். அவர்கள் கொல்லப்படாதது திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கான நிரூபணம்.

என்னை எவரும் கொல்ல முடியாது என்று அறிவித்து விட்டு, சர்வ சாதாரணமாக இன்றைய உலகில் எவரும் நடமாட முடியாது. அதுவும் தீய சக்திகளை எதிர்த்துப் போரிடுபவர் இப்படி அறிவித்தால் அடுத்த நாளே அவரது கதை முடிக்கப்பட்டு விடும்.

அன்றைய நிலையில் இவரைப் போல் சர்வ சாதாரணமாக எவ்விதப் பாதுகாப்பு ஏற்பாடுமின்றி மக்களோடு மக்களாக பழகும் ஒருவரை எளிதாகக் கொல்ல முடியும். ஆனாலும் தன்னைக் கொல்ல முடியாது என்று அறிவித்து தாம் கூறுவது இறை வாக்கு என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிரூபித்தார்கள்.’

இது ஆய்வாளர் PJ அவர்களின் தர்ஜுமா விளக்கக் குறிப்பின் 145 ஆவது இலக்கத்தில் இடம்பெறும் விளக்கமாகும். இந்த விளக்கத்தில் எத்தனை இடங்களில் கொல்ல முடியாது என்ற கருத்து கூறப்பட்டுள்ளது?

ஆய்வாளர் PJ அவர்கள் 5:67 வசனம் நபி(ஸல்) அவர்களைக் கொல்ல முடியாது என்றுதான் கூறுகின்றது என்பதை மிக மிகத் தெளிவாகத் தெரிந்துகொண்டே அந்த வசனத்திற்கு நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்று கூறும் ஹதீஸ் முரண்படுகின்றது என்று கூறியது நியாயமா? மார்க்கத்தில் பேணுதலைக் கடைப்பிடிக்கும் வழிமுறையாகுமா? வசனத்தின் அர்த்தத்திற்கே மாற்றமாக பேசலாமா? அல்லாஹ்வின் வார்த்தைக்கு அவன் நாடாத அர்த்தத்தைக் கற்பிக்கலாமா? என்பதை நடுநிலையோடு சிந்தித்துப் பாருங்கள்.

5:67 வசனம் சூனியம் பற்றிய கருத்தைக் கூறவில்லை என்று தெரிந்துகொண்டே அந்த வசனத்தை மக்கள் முன்வைத்துத் தன் மீது மக்களுக்கிருக்கும் நம்பிக்கை, தனக்கிருக்கும் வாதத்திறமை, பேச்சு ஆற்றல் மூலம் நபியவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஹதீஸிற்கு இது முரண்படுகின்றது என்று வாதிடுவது எந்த வகையில் நியாயம்?

இப்போது சூனியத்தை மறுப்பதற்கு இவர் வைக்கும் ஆயத்துக்களின் உண்மையான அர்த்தம், வாதங்களில் கூட இது ஐயத்தை ஏற்படுத்துகின்றதல்லவா?

சத்தியத்தைத் தேடும் எண்ணத்துடன் நடுநிலையோடு சிந்தித்தால் சூனியம் என்பது வெறும் தந்திர வித்தை என்ற தனது தவறான வாதத்தை வலுவூட்ட அவர் கையாளும் வசனங்களும் இதே அடிப்படையில்தான் தவறாகக் கையாளப்படுகின்றது என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.

அடுத்து, நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது என்ற ஹதீஸ் குர்ஆனிலேயே சந்தேகத்தை உண்டுபண்ணுமா? என்பது குறித்து விரிவாக நோக்குவோம். இன்ஷா அல்லாஹ்!

No comments:

Post a Comment