எழுதியவர்: மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (பகுதி 2, தொடர் 2)
மூஸா நபியும், மலக்குல் மவ்த்தும் சம்பந்தப்பட்ட ஹதீஸைப் பல்வேறுபட்ட வழிகெட்ட பிரிவினரும் ஆரம்ப காலத்தில் மறுத்து வந்துள்ளனர். இந்த ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுகின்றது என்று கூறி மறுக்கப்படுவது தவறு என்பதை நாம் தெளிவுபடுத்தி வருகின்றோம்.
சென்ற தொடர்களில்
நபிமார்களின் மரணம் சாதாரண மனிதர்களின் மரணத்துடன் மாறுபட்டது;
மலக்குகள் மனித ரூபத்தில் நபிமார்களிடம் வருகை தந்துள்ளனர்;
தன்னிடம் மனித ரூபத்தில் வந்த மலக்கை (மூஸா நபி அடித்ததைத்) திடிரென நடந்த ஒரு நிகழ்வு என்ற அடிப்படையில் மறுக்க வேண்டிய அவசியமில்லை;
மூஸா நபி மரணத்தை வெறுத்தார் என்று காரணம் கூறியும் இந்த ஹதீஸை மறுக்க முடியாது;
ஆதம்(அலை) அவர்கள் மரணமேயற்ற வாழ்வுக்கு ஆசைப்பட்டுள்ளார்;
மூஸா நபி உயிருக்குப் பயந்து ஊரை விட்டும் ஓடியுள்ளார்;
அல்லாஹ்விடம் பேசும் போதே தனது கைத் தடி பாம்பு போன்று நெளிந்ததும் திரும்பிப் பார்க்காமல் ஓடியுள்ளார்;
சூனியக்காரர்களின் கயிறுகளும், தடிகளும் பாம்புகள் போல் தோற்றமளித்ததைக் கண்டு பயந்துள்ளார்;
ஃபிர்அவ்னிடம் சென்று பிரச்சாரம் செய்யுமாறு அல்லாஹ் கட்டளையிட்ட போது அவன் தன்னைக் கொலை செய்து விடுவான் என்ற தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள் என்றெல்லாம் குர்ஆன் கூறுகின்றது.
இந்த ஹதீஸை மறுப்பவர்கள் எடுத்து வைக்கும் வாதங்களையேற்றால் மேலே குறிப்பிட்டவை போன்ற குர்ஆன் கூறும் வரலாறுகளையும் மறுக்கும் நிலை தோன்றும்.
எனவே, ஆதாரபூர்வமான ஹதீஸையும் தவறான வாதத்தின் அடிப்படையில் மறுத்துக் குர்ஆனையும் மறுக்கும் மனநிலைக்குச் செல்லாமல் ஹதீஸையும் ஏற்றுக் குர்ஆனையும் ஏற்று இரண்டுக்கும் மத்தியில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதே நேரிய வழியாகும் என்பதைப் பார்த்தோம். தொடர்ந்தும் இந்த ஹதீஸை மறுக்கும் சகோதரர் பீஜே அவர்கள் கூறுவது போல் மூஸா நபி மரணத்தை வெறுத்தார்களா? என்பது பற்றி ஆராய்வோம்!
மூஸா நபி மரணத்தை வெறுத்தார்களா?
இந்த ஹதீஸ் மூஸா நபி மரணத்தை வெறுத்ததாகக் கூறுகின்றது. ஒரு நபி மரணத்தை வெறுக்க மாட்டார். மரணம் வந்தால் உடனே அதற்குத் தயாராகி விடுவார்கள் என்ற அடிப்படையில் கேள்வி எழுப்புகின்றார்.
இந்த ஹதீஸ் மூஸா நபி மரணத்தை வெறுக்கவில்லை என்பதைத்தான் தெளிவாகக் கூறுகின்றது. தான் இப்போது மரணிப்பதா? அல்லது தாமதித்து மரணிப்பதா? என்று தீர்மானிக்கும் அதிகாரத்தை அல்லாஹ் நபிமார்களுக்கு வழங்கியுள்ளான். ஏனையோர் அறியாமல் மரணிப்பது போன்று நபிமார்கள் மரணம் பற்றி அறியாமல் மரணிப்பதில்லை. இந்த அனுமதியைத்தான் மூஸா நபி பயன்படுத்தினார்கள்.
மூஸா நபி மலக்கைத் தாக்கிய போது அவர் அல்லாஹ்விடம் சென்று மரணத்தை விரும்பாத ஒரு அடியானிடம் என்னை நீ அனுப்பி விட்டாய் என்று கூறுகின்றார்கள். இந்த வாசகம் மூஸா நபி மரணத்தை விரும்பவில்லை என்றுதான் கூறுகின்றது. இதன் பின் மூஸா நபிக்கு நீண்ட காலம் வாழும் வாய்ப்பை அல்லாஹ் அளிக்கின்றான். ஒரு மாட்டில் கை வைத்தால், பல்லாயிரம் முடிகள் கைக்குள் அடங்கலாம். அத்தனை ஆண்டுகள் வாழ விரும்பினால் வாழலாம் என்ற நிலை வந்த போதும் மூஸா நபி மரணத்தைத் தேர்ந்தெடுக்கின்றார்கள் என்றால், அவர் மரணத்தை வெறுத்தார் என்று கூற முடியுமா?
நடந்த ஒரு நிகழ்ச்சி பற்றி முடிவு செய்யும் போது இறுதிச் செய்திதான் முக்கியத்துவம் பெறும்.
உதாரணமாக, ஒருவரிடம் ஒரு பெண் கடன் கேட்கிறாள். அவர் கடன் தருவதாகவும், அந்தப் பெண் தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும் நிபந்தனையிடுகின்றார். இவரைப் பற்றி இந்தச் செய்தியை மட்டும் படித்தால் இவர் மிக மோசமான கீழ்த் தரமான மனிதராகவே இருப்பார் என்றுதான் கூற வேண்டும். எனினும் இந்த மனிதர் தவறுக்கு நெருங்கும் போது, அந்தப் பெண் “அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்!” என்று கூறியதும் தவறிலிருந்து ஒதுங்கிக்கொள்கின்றார். இவரை இஸ்லாம் நல்ல மனிதர் என்றுதான் கூறுகின்றது. இந்த ஹதீஸைப் போன்று மூஸா நபி மலக்கை அடித்திருந்தாலும் அவர் மரணத்தை வெறுத்தார் என்று கூற முடியாது. பல்லாயிரம் ஆண்டுகள் வாழ அவகாசம் கிடைத்தும் கூட “இப்போதே மரணிக்கத் தயார்!” என்று கூறி மரணத்தை நேசித்துள்ளார்கள் என்றுதான் ஹதீஸ் கூறுகின்றது.
மூஸா நபியின் ஆசை என்ன?
நபிமார்கள் மரணிக்கும் இடத்தில்தான் அடக்கம் செய்யப்படுவார்கள். மூஸா நபி மரணத்தை வெறுக்கவில்லை. எனினும் பைத்துல் முகத்திஸுக்கு அருகில் புனித பூமியில் மரணிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். ஃபிர்அவ்னின் ஆட்சியில் அடிமைகளாக இருந்த மக்களை மீட்டுப் பலஸ்தீனுக்கு அழைத்துச் செல்லும் போராட்டத்தை முன்னெடுத்த அவர்கள் தன் இலட்சியக் கனவான புனித பூமியை அடைந்து, அந்தப் புனித பூமியிலேயே மரணிக்க ஆசைப்பட்டது சராசரி போராளியின் நியாயமான ஆசை என்பதை எவரும் அறியலாம்.
இப்போதே என் உயிரை எடுத்துக்கொள்! எனினும் (பைத்துல் முகத்திஸ் எனும்) புனித பூமிக்கு நெருக்கமாக அதிலிருந்து கல்லெறியும் தூரத்தில் தன் அடக்கஸ்தலம் அமைந்திடச் செய்யுமாறு அல்லாஹ்விடம் வேண்டினார்கள்.
(இந்தப் பகுதியைத்தான் பீஜே தனது தர்ஜமாவில் தமிழாக்கம் செய்யாது விட்டுள்ளார்).
எனவே மூஸா நபி நீண்ட காலம் வாழ ஆசைப்படவில்லை. பைத்துல் முகத்திஸ் அருகில் மரணிக்கவே விரும்பினார்கள். இந்த ஹதீஸின் முக்கிய பகுதியே இதுதான். இமாம் புகாரி(ரஹ்) அவர்கள்
“யார் இரவில் புனித பூமியில் அடக்கம் செய்யப்படுவதை அல்லது அது போன்றதை விரும்புகின்றாரோ…” என்ற தலைப்பில்தான் இந்த ஹதீஸை இடம்பெறச் செய்துள்ளார்கள்.
(இதே ஹதீஸ் மற்றும் சில தலைப்புக்களிலும் இடம்பெற்றுள்ளது).
இந்தப் பகுதி எப்படித் தர்ஜமாவில் தவிர்க்கப்பட்டது என்பது ஆச்சரியமாகவே உள்ளது.
மூஸா நபியின் இந்த ஆசையை அல்லாஹ் நிவர்த்தி செய்தான். அவர்கள் புனித பூமியில்தான் மரணித்தார்கள் என்பதை ஹதீஸின் இறுதிப் பகுதி உறுதி செய்கின்றது.
நான் அங்கு (பைத்துல் மக்திஸில்) இருந்திருந்தால் சாலையோரமாகச் செம்மணற் குன்றின் கீழே அவரது மண்ணறை இருப்பதை உங்களுக்குக் காட்டியிருப்பேன் என நபி(ஸல்) அவர்கள் கூறியது இதைத் தெளிவுபடுத்துகின்றது.
மூஸா நபி மரணத்தை அறியாதிருந்தாரா?
இந்த நிகழ்ச்சி நடக்கும் வரை மரணத்தைப் பற்றி மூஸா நபி அறிந்திருக்கவில்லை என இந்த ஹதீஸ் கூறுகின்றது. எனவே இந்த ஹதீஸை ஏற்க முடியாது என பீஜே வாதிடுகின்றார்.
இது பற்றிக் கூறும் போது;
“ஒவ்வொரு மனிதனும் மரணித்தே ஆக வேண்டும் என்பது ஒட்டு மொத்த மனிதரும் அறிந்து வைத்துள்ள உண்மை. இந்த உண்மை ஒரு நபிக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஒரு முஸ்லிம் நம்ப வேண்டிய அடிப்படைகளில் ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைக்க வேண்டும் என்பதும் முக்கியமானது. ஆனால் மூஸா நபி அவர்கள் மரணத்தை நெருங்கும் வரை இந்தச் சாதாரண உண்மையை அறியாதவராக இருந்துள்ளார் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது. மனிதன் மரணித்தே ஆக வேண்டும் என்ற அடிப்படையான விஷயம் கூட கடைசி நேரத்தில் அல்லாஹ் சொல்லிக் கொடுத்த பிறகு தான் அவருக்குத் தெரிய வந்துள்ளது என்றால் தனது சமுதாயத்துக்கு அவர்கள் மரணம் பற்றியோ மரணத்துக்குப் பின்னுள்ள வாழ்க்கை பற்றியோ எதுவும் சொல்லித் தரவில்லை என்பதும் இந்த ஹதீஸுக்குள் அடங்கியுள்ளது. – பீஜே”
பீஜே எந்த ஆதாரத்தை முன்வைத்து இப்படி எழுதியுள்ளார் என்பதை முதலில் நாம் விளங்கிக் கொண்டு அதன் பின் அந்த விளக்கம் எவ்வளவு கேலிக்குரியது என்று பார்ப்போம்.
“நீ மீண்டும் அவரிடம் செல். காளை மாட்டின் முதுகில் அவரது கையை வைக்கச் சொல். அவரது கையின் அடியில் உள்ள ஒவ்வொரு முடிக்கும் ஒரு வருடம் என்ற அடிப்படையில் அவருக்கு வாழ்நாள் கொடுக்கப்பட்டதாகக் கூறு” என அல்லாஹ் மலக்குல் மவ்த்திடம் கூறுகின்றான். அதை அவர் கூறியதும் மூஸா நபி அல்லாஹ்விடம், (தும்ம மாதா) “அதன் பின்னர் என்ன?” என்று கேட்கிறார்கள். அல்லாஹ் “மரணம்தான்!” என்றதும், “அப்படியென்றால் இப்போதே (மரணிக்கிறேன்!)” என்று கூறித்தான் தனது புனித பூமியில் மரணிக்க வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைக்கின்றார்கள்.
“பிறகு என்ன?” என மூஸா நபி கேட்டதை வைத்துத்தான் அவர் அது வரை மரணத்தைப் பற்றி அறியாமலேயே இருந்ததாக இந்த ஹதீஸ் கூறுகின்றது எனப் பீஜே வாதிட்டு ஹதீஸை மறுக்கின்றார்.
ஒரு ஹதீஸை இப்படித்தான் புரிந்துகொள்வதா? இப்படி விளங்க முற்பட்டால் பல குர்ஆன் வசனங்களும் அல்லாஹ்வின் அறிவு ஆற்றல் அனைத்தும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அமைந்து விடும். அல்லாஹ் சோதித்து அறிவதாகக் கூறும் வசனங்கள், அல்லாஹ் வானவர்களிடம் கேட்கும் கேள்விகள் அனைத்தையும் பீஜே விளங்குவது போல் விளங்க முற்பட்டால் குஃப்ரில்தான் விழ நேரிடும். எனவே, “பிறகு என்ன?” என மூஸா நபி கேட்ட கேள்வியை வைத்து அது வரை மரணத்தைப் பற்றி அவர் அறியாமல் இருந்ததாக இந்த ஹதீஸ் கூறுவதாக பீஜே வாதிப்பது தவறாகும்.
அல்லது ஒரு கிராமத்தின் முகடுகள் தலைகீழாகக் கவிழ்ந்திருக்கும் போது அதனைக் கடந்து சென்ற ஒருவரின் நிலையை நீர் கவனிக்கவில்லையா? “இது அழிந்த பின் இதனை எவ்வாறு அல்லாஹ் உயிர்ப்பிப்பான்” என (வியப்போடு) அவர் கேட்டதும் அல்லாஹ் அவரை நூறு ஆண்டுகள் உயிரற்றவராக ஆக்கி, பின்னர் அவரை உயிர்ப்பித்து “எவ்வளவு காலம் நீர் (இந் நிலையில்) இருந்தீர்?” என்று கேட்டான். அ(தற்க)வர், “நான் ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறு பகுதியைக் கழித்திருப்பேன்” என்றார். (அதற்கு அல்லாஹ்) “இல்லை! நீர் நூறு ஆண்டுகளைக் கழித்துள்ளீர். உமது உணவையும், உமது பானத்தையும் பார்ப்பீராக! அவை கெட்டு விடவில்லை. (இறந்து உக்கிப் போன) உமது கழுதையையும் பார்ப்பீராக! என்றான். மனிதர்களுக்கு உம்மை ஓர் அத்தாட்சியாக ஆக்குவதற்காக (இவ்வாறு நாம் செய்தோம்). மேலும் (அதன்) எலும்புகளை எவ்வாறு நாம் ஒன்று திரட்டிப் பின்னர் அதற்கு எவ்வாறு சதையைப் போர்த்துகின்றோம் என்பதையும் பார்ப்பீராக! அவருக்குத் தெளிவு ஏற்பட்ட போது, “நிச்சயமாக அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் என்பதை நான் அறிவேன்” என்று கூறினார். (2:259)
இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர் “உஸைர்” என்று கூறப்படுகின்றது. அவர் யார் என்பதில் உடன்படாவிட்டாலும் அவர் ஒரு நல்ல மனிதர் என்ற விடயத்தில் பீஜே முரண்பட மாட்டார் என்று உறுதியாக நம்புகின்றேன். இந்த வசனத்தில் அழிந்து போன ஒரு ஊரைப் பற்றி ஒரு நபி அல்லது நல்ல மனிதர் கூறும் போது இது அழிந்த பின் இதை அல்லாஹ் எவ்வாறு உயிர்ப்பிப்பான்? என்று கேட்கின்றார்.
நீண்ட காலம் வாழ அவகாசம் அளிக்கப்பட்ட போது, “மூஸா நபி அதன் பின் என்ன?” எனக் கேட்டார். இதை வைத்து அது வரை அவர் மரணத்தைப் பற்றி அறிந்தே இருக்கவில்லை என இந்த ஹதீஸ் கூறுகின்றது என்று பீஜே வாதிப்பது போல் இந்த வசனத்தை வைத்து;
“அழிந்த ஊரை அல்லாஹ் எப்படி உயிர்ப்பிப்பான்?” என்று இவர் கேட்டுள்ளார். இவர் அல்லாஹ்வின் ஆற்றலில் சந்தேகம் கொண்டதாக இந்தச் சம்பவம் தெரிவிக்கின்றது. ஊர் என்ன! உலகமே அழிந்த பின் அல்லாஹ் அனைவரையும் உயிர் கொடுத்து எழுப்புவான் என்று நம்ப வேண்டியது முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்று. மறுமையை நம்பும் ஒருவர் இறந்த ஊரை எப்படி அல்லாஹ் உயிர்ப்பிப்பான் என்று கேட்க மாட்டான். ஒரு நபி (அல்லது பீஜே தனது தர்ஜமாவின் 79 ஆம் குறிப்பில் குறிப்பிடுவது போன்று “மிகச் சிறந்த நல்லடியார்”) மறுமையைப் பற்றியும் அல்லாஹ்வின் உயிர் கொடுக்கும் ஆற்றலைப் பற்றியும் அறியாது இருந்தார் என்று இந்த ஆயத்துக் கூறுகின்றது. எனவே இந்த ஆயத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறப் போகின்றார்களா? அல்லது ஹதீஸையும், குர்ஆனையும் மறுக்காமல் இரண்டையும் இணக்கப்பாடாகப் புரிந்து கொண்டு நேர்வழி செல்வதா? என்று சகோதரர்கள் சிந்திக்க வேண்டும்.
அல்லாஹ்வின் ஆற்றலை அறியாத, அப்படி இல்லை என்றால் அல்லாஹ்வின் ஆற்றலில் சந்தேகம் கொண்டு விட்டார். எனவே இவர் காஃபிர் எனக் கூற வேண்டும். ஆனால் அந்தக் கருத்து குர்ஆனின் கூற்றுக்கு முரணானதாகும். இதற்கு மாற்றமாக அவர் அல்லாஹ்வின் ஆற்றலை அறிந்திருந்தார் என ஏற்றுக் கொள்வதென்றால் மூஸா நபியின் இந்தக் கேள்வி அவர் மரணத்தை அறியாதிருந்ததாகக் கூறுகின்றது என எப்படி மறுக்க முடியும்? இந்த வசனத்தை ஏற்க முடியுமானால் ஹதீஸையும் ஏற்கலாம்; ஹதீஸை மறுப்பதாயின் இந்த வசனத்தையும் மறுக்க நேரிடும். இந்த வசனத்தை ஏற்று மூஸா நபி பற்றிய ஹதீஸை மறுப்பது முரண்பாடாகும். இரண்டையும் மறுத்துக் குப்ருக்குச் செல்வதா? ஒன்றை மறுத்து மற்றதை ஏற்று முரண்பாட்டில் வாழ்வதா? இரண்டையும் ஏற்று நேர்வழி செல்வதா?
இதற்கு மற்றுமொரு சம்பவத்தைக் கூற முடியும்,
ஸகரிய்யா நபி முதுமையை அடைந்த நிலையில், குழந்தைப் பாக்கியம் அற்ற நிலையில் அல்லாஹ்விடம் துஆச் செய்கின்றார்கள்.
அல்லாஹ் அவருக்கு நற்செய்தி கூறும் போது;
“உனக்கு ஒரு ஆண் குழந்தை கிடைக்கும். அதற்கு யஹ்யா என்பது பெயர். இதற்கு முன் இந்தப் பெயரில் எவரும் வாழ்ந்து இல்லை. அந்த மகன் நபியாகவும், தலைவராகவும், கற்பொழுக்கமுள்ளவராகவும் இருப்பார்” என்று முழுமையான ஒரு விளக்கம் அளிக்கின்றான்.
இந்த விளக்கத்தின் பின்னரும் அவர்;
அ(தற்க)வர், “எனது இரட்சகனே! எனது மனைவியோ மலடியாகவும் ஆகி, நானும் முதுமையின் எல்லையை அடைந்திருக்க எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?” எனக் கேட்டார். (19:8)
அல்லாஹ் அதற்கு;
“அது அவ்வாறுதான். அது எனக்கு மிக இலகுவானதாகும். நீ எப்பொருளாகவும் இல்லாதிருந்த நிலையில் இதற்கு முன் உன்னை நான் படைத்திருக்கிறேன்” என்று உமது இரட்சகன் கூறினான் என (வானவர்) கூறினார்.
அதன் பின்னர் கூட “என் இரட்சகனே! எனக்கொரு அடையாளத்தைக் காட்டு!” என்று கேட்கின்றார். (பார்க்க: அல்குர்ஆன் 19:1-11)
மூஸா நபி கேட்ட கேள்வியை பீஜே விளக்கியது போன்று இந்தச் சம்பவத்தை நோக்கினால் நிலை என்ன? ஒரு நபி அல்லாஹ்வின் ஆற்றலில் நம்பிக்கையிழந்துள்ளார். அல்லாஹ்வே “உனக்குக் குழந்தை பிறக்கும்!” என்று முழு விபரத்தையும் கூறிய பின்னர் கூட “அது எப்படி முடியும்!? நான் முதுமையின் முடிவில் இருக்கின்றேன்; என் மனைவி மலடியாக இருக்கின்றாள்” என்று கேட்கின்றார். அல்லாஹ் அனைத்துக்கும் ஆற்றல் உள்ளவன் என்று நம்புவது ஒரு முஸ்லிமின் அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்று. அந்த நம்பிக்கை இல்லாதவராக ஸகரிய்யா நபி இருந்துள்ளார். எப்பொருளும் இல்லாமலேயே அல்லாஹ் உலகத்தைப் படைத்தான். முதல் மனிதர் ஆதம்(அலை) அவர்களைத் தாய்-தந்தை இல்லாமலேயே படைத்தான் என்று எல்லா இறைத் தூதர்களும் போதித்திருக்க ஒரு நபி முதியவருக்கும், மலடிக்கும் குழந்தை எப்படிக் கிடைக்கும் என்று அல்லாஹ் கூறிய பின் அவனிடமே எதிர்த்துக் கேள்வி கேட்பதா? அது எனக்கு எளிது. ஒன்றுமே இல்லாத நிலையிலிருந்து உன்னை நான் படைக்கவில்லையா? என அல்லாஹ் கேட்ட பின்னர் அல்லாஹ்வின் வாக்குறுதியில் ஒரு நபி நம்பிக்கை வைக்காமல் அத்தாட்சி காட்டு எனக் கேட்டதாக இந்தச் சம்பவம் கூறுகின்றது என்று கூறிக் குர்ஆனையும் மறுப்பதா? அல்லது ஸகரிய்யா நபியின் ஈமானை மறுத்து அவரைக் காஃபிராக்குவதா?
பீஜே கூறுவது போன்று ஹதீஸ்களைத் தவறான வாதங்களை இத்தகைய நம்பி மக்கள் மறுத்து வந்தால் காலப் போக்கில் இதே அடிப்படையில் குர்ஆன் வசனங்களையும் மறுப்பார்கள். அதைத்தான் பீஜே தனது திர்மிதி முன்னுரையில் ஹதீஸ்களை மறுப்போர் முன்வைக்கும் வாதங்களைக் குர்ஆன் விடயத்திலும் முன்வைக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். எனவே பீஜே அவர்களின் தவறான போக்கில் சென்று ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுத்துத் தொடர்ந்து குர்ஆனையும் மறுக்கும் மனோநிலைக்குச் சென்று அல்லது குர்ஆன் மீது நம்பிக்கையும், பற்றும் அற்ற சமூகமாக வாழும் நிலைக்குச் சென்றிடாமல் எம்மை நாம் தற்காத்துக்கொள்ள வேண்டும்.
பீஜேயின் வாதங்களை ஏற்றால் நாம் குறிப்பிட்டவை போன்ற குர்ஆனியச் சம்பவங்களையும், வசனங்களையும் மறுக்க நேரிடும். இந்தக் குர்ஆன் கூறும் சம்பவங்களை ஏற்க முடியும் என்றால், “மூஸா நபியும், மலக்குல் மவ்த்தும்” குறித்த இந்த ஹதீஸையும் ஏற்க முடியும். குர்ஆனியச் சம்பவத்தை ஏற்போம். ஆதாரபூர்வமான இந்த ஹதீஸைப் பொறுத்த வரை பொறுத்தமற்ற காரணங்களைக் கூறி மறுப்போம் என்பது முரண்பாடான நிலையாகும்.
மூஸா நபியின் கேள்வியின் அர்த்தம் என்ன?
“பிறகு என்ன?” என மூஸா நபி கேட்டது, மரணத்தைப் பற்றி அவர் அறிந்தே இருக்கவில்லை என்பதைக் காட்டவில்லை. தான் விரும்பியது என்ன என்பதை இந்தக் கேள்வி மூலம் உணர்த்துகின்றார்கள். 1000 வருடம் வாழ்ந்தாலும் அதன் பின்னர் நான் மரணிக்கத்தானே போகின்றேன். நான் மரணத்தை வெறுக்கவில்லை. மரணிக்க இப்போதே நான் தயாராகத்தான் இருக்கின்றேன். எனது ஆசையெல்லாம் புனித பூமியில் மரணிக்க வேண்டும் என்பதுதான் என்று தெளிவுபடுத்துகின்றார்கள். அல்லாஹ்விடம் “மரணத்தை விரும்பாத ஒருவரிடம் என்னை அனுப்பி விட்டாய்!” என்று மலக்கு கூறினார். அது தவறு என்று அவருக்கு உணர்த்த அல்லாஹ் விரும்புகின்றான். மூஸா நபிக்கு நீண்ட ஆயுளை அளிக்கின்றான். அவரும் “தான் தற்போதே மரணிக்கத் தயார்; ஆனால், தன் மரணம் பைத்துல் முகத்தஸுக்கு அருகில் இடம்பெற வேண்டும். இதுதான் என் வேண்டுதல்” என்று கூறுகின்றார். இதன் மூலம் மூஸா நபி மரணத்தை வெறுக்கிறார் என்ற மலக்குல் மவ்த்தின் கூற்று தவறானது என்பதை அல்லாஹ் அவருக்கு உணர்த்தி விடுகின்றான்.
பல விவாதங்கள் புரிந்த பீஜே அவர்களுக்கு மூஸா நபியின் இந்தக் கேள்வி தன்னிலை விளக்கத்திற்காகக் கேட்கப்பட்டது என்ற உண்மை எப்படித் தெரியாமல் போனது என்பது ஆச்சரியம்தான்.
இது வரை நாம் கூறியதிலிருந்து மூஸா நபி மரணத்தை வெறுத்தார் என்பதும், அவர் இந்த நிகழ்ச்சி வரை மரணம் பற்றி அறியாமல் இருந்தார் என்றும் இந்த ஹதீஸ் கூறுகின்றது என்றும் பீஜே வாதிடுவது தவறானது. இந்த வாதத்தை முன்வைத்து இந்த ஹதீஸை மறுப்பதென்றால் ஏராளமான அல்குர்ஆன் வசனங்களையும் மறுக்க நேரிடும் அளவுக்கு ஆபத்தான வாதங்கள் இவை என்பதை நீங்கள் தெளிவாக அறிந்திருப்பீர்கள்.
இது தொடர்பான மற்றும் சில ஐயங்களை அடுத்து நோக்குவோம். இன்ஷா அல்லாஹ்
assalamu alikum i saw ur article it is very nice grow up
ReplyDelete