எழுதியவர்: மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
ஹதீஸில் முரண்பாடா?
‘நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது’ என்ற ஆதாரபூர்வமான அறிவிப்பை ‘அல்குர்ஆனுக்கு முரண்படுகின்றது’ என்று கூறி, சகோதரர் மறுத்து வருகின்றார். இவர் கூறும் காரணம் தவறானது என்பதை இதுவரை நாம் ஆராய்ந்தோம். ‘குறித்த இந்த ஹதீஸிற்குள்ளேயே முரண்பாடு இருக்கின்றது’ என்ற மற்றுமொரு வாதத்தையும் இந்த ஹதீஸை மறுப்பதற்குத் துணையாக முன்வைக்கின்றார்.
‘மேற்கண்ட செய்திகளின் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்று அறியப்பட்டாலும், அதில் கூறப்படும் கருத்துக்கள் குர்ஆனுக்கு எதிராக அமைந்துள்ளதாலும், அந்த அறிவிப்புக்களில் முரண்பாடு இருப்பதாலும் இதை நாம் ஏற்கக்கூடாது.’ (பிஜே தர்ஜமா பக்:1311)
இந்த அறிவிப்பில் காணப்படும் முரண்பாடுகள் என்ன என்பதை அவர் விவரிக்கும் போது ‘அப்புறப்படுத்தல்’ என்ற தலைப்பில் பின்வருமாறு கூறுகின்றார்.
அப்புறப்படுத்தல்
எந்தப் பொருட்களில் சூனியம் வைக்கப்பட்டதோ அந்தப் பொருட்களை அக்கிணற்றிலிருந்து அப்புறப்படுத்தி விட்டீர்களா என்று ஆயிஷா (ரலி) கேட்ட போது ‘அப்புறப்படுத்தவில்லை, அதனால் மக்களிடையே கேடுகள் ஏற்படும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக புகாரியின் 3268, 5763, 5766 ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.
‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உடனடியாக அக்கிணற்றுக்குச் சென்று அப்பொருளை அப்புறப்படுத்தினார்கள்’ என்று புகாரியின் 5765, 6063 வது ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.
அப்பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டதாகக் கூறும் அறிவிப்பிலும் முரண்பாடு காணப்படுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றுக்குச் சென்று அப்பொருளை அப்புறப்படுத்தியதாக, அப்புறப்படுத்தக் கட்டளையிட்டதாக புகாரியின் 5765, 6063 ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் நஸயீயின் 4012 வது ஹதீஸில் ஆட்களை அனுப்பி வைத்து அதை அப்புறப்படுத்தியதாகவும், அப்புறப்படுத்திய பொருட்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்ததாகவும் உடனே அவர்கள் குணமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அஹ்மத் 18467 வது ஹதீஸிலும் இந்தக் கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அருகில் இரண்டு வானவர்கள் அமர்ந்து தமக்கிடையே பேசிக் கொண்டதாகவும் அதன் மூலம் தனக்குச்சூனியம் செய்யப்பட்டதை அறிந்து கொண்டதாகவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக புகாரி 6391வது ஹதீஸ் கூறுகிறது.
நஸயீயின் 4012வது ஹதீஸில் ஜிப்ரீல் (அலை) வந்து ‘உமக்கு யூதன் ஒருவன் சூனியம் வைத்துள்ளான்’ என்று நேரடியாகக் கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
(பிஜே தர்ஜமா – பக்:1310)
மேற்படி விளக்கத்தில் ஹதீஸில் இடம்பெற்றுள்ளதாக சகோதரர் பிஜே கூறும் முரண்பாடுகளை ஒரு முறை தொகுத்துப் புரிந்துகொண்டதன் பின்னர் அவற்றிற்கான விளக்கத்திற்குச் செல்வது நல்லது எனக் கருதுகின்றேன்.
(1) சூனியம் வைக்கப்பட்ட பொருட்களைக் கிணற்றிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டதாகவும், அப்புறப்படுத்தப்படவில்லை என்றும் ஹதீஸ் கூறுகின்றது. இது ஒரு முரண்பாடு. (என்பது அவர் வாதம்.)
(2) சூனியம் செய்யப்பட்ட செய்தியை இரண்டு வானவர்கள் வந்து தமக்குள் பேசியதன் மூலமாக நபியவர்கள் அறிந்துகொண்டதாகவும், ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்து, ‘ஒரு யூதன் உமக்குச் சூனியம் செய்துள்ளான்’ என்று கூறியதாகவும் வருகின்றது.
(3) நபி(ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் கிணற்றிற்குச் சென்று அந்தப் பொருட்களை எடுத்ததாகவும், நபியவர்கள் ஆள் அனுப்பி, அவர்கள் அப்பொருளை நபியவர்களிடம் எடுத்து வந்ததாகவும் இரு விதமான கருத்துக்கள் கூறப்படுகின்றன.
இந்த முரண்பாடுகளுக்குள் இணக்கம் காண்பது எப்படி? கூறப்பட்ட அனைத்து முரண்பாடுகளும் ஆதாரபூர்வமானவைதாமா? என்பதை ஆராய்வதற்கு முன்னர் இப்படி ஆய்வு செய்து ஹதீஸ்களை நிராகரிப்பது சரியான ஆய்வு அனுகுமுறை அல்ல என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியமாகும்.
பிழையான ஆய்வு:
ஹதீஸ்களை அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் சில போது தாம் கேட்டவற்றில் முக்கிய பகுதியை மட்டும் கூறினார்கள். சிலர் தாம் கேட்ட அதே வாசகத்தை அறிவிக்காமல் அந்தக் கருத்தைத் தனது வாசகத்தின் மூலம் அறிவிப்பர். இவ்வாறு அறிவிக்கும் போது சின்னச் சின்ன வார்த்தை வேறுபாடுகள் பெரும்பாலான, அதிலும் குறிப்பாக பெரிய ஹதீஸ்களில் இடம்பெறும் வாய்ப்புக்கள் உள்ளன. இந்த முரண்பாடுகள் ஹதீஸை மறுப்பதற்கான காரணமாக அமையக்கூடாது. அப்படியாயின் ஏராளமான ஹதீஸ்களை மறுக்க நேரிடும். இந்த சூனியம் குறித்த ஹதீஸை ஆயிஷா(ரலி) அவர்களிடமிருந்து உர்வா அவரிடமிருந்து ஹிஸாம் அவரிடமிருந்து 12 மாணவர்கள் செவிமடுத்து அறிவிக்கின்றனர். இந்தப் பன்னிரெண்டு பேரின் வார்த்தைப் பிரயோகத்தில் ஏற்படும் வித்தியாசங்கள் நியாயமானவை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
அடுத்து ஏற்கனவே நாம் குறிப்பிட்ட முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டி ஒன்றுக்கொன்று முரண்பட்டால் இரண்டுமே (ஆதாரமாக எடுக்க முடியாமல்) விழுந்து விடும் எனக் கூறி இரண்டையும் ஏற்கக் கூடாது என சகோதரர் வாதிக்கின்றார். இந்த வாதமும் தவறாகும்.
ஏனெனில் அனைத்து ஹதீஸ்களும் நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது என்றே கூறுகின்றன. அதில் முரண்பாடு இல்லை. இவரின் வாதப்படி சூனியம் செய்யப்பட்ட பொருட்கள் எடுக்கப்பட்டதா? இல்லையா? எப்படி எடுக்கப்பட்டது? என்பதில்தானே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதை வைத்து முரண்பாடே ஏற்படாத சூனியம் செய்யப்பட்டது என்ற தகவலை எப்படி நிராகரிக்க முடியும்? சூனியம் செய்யப்பட்டது என்பது உறுதி. ஆனால், அது எடுக்கப்பட்டதா? இல்லையா? என்பதைத்தான் உறுதியாகக் கூறமுடியாது என்றல்லவா முடிவு செய்ய வேண்டும்?
இவரின் இந்த அனுகுமுறை மூலம் தவறான வழியில் ஆய்வு செய்து பிழையான முடிவை நோக்கிச் சென்றிருப்பது தெளிவாகின்றது.
குர்ஆனில் முரண்பாடா?
இது போன்ற முரண்பாடுகள் தோன்றும் போது உடன்பாடு காண முயற்சிக்க வேண்டும். எதிலும் குறை காணும் குணத்துடன் செயல்பட்டால் எல்லாமே பிழையாகத்தான் தென்படும். குர்ஆனில் முரண்பாடு இருப்பதாகத் தோன்றும். இதற்கு இவர் இந்த ஆய்வுக்குப் பயன்படுத்தியிருக்கும் சில வசனங்களையே உதாரணமாகத் தர விரும்புகின்றேன்.
‘அ(தற்க)வன், ”நீர் அத்தாட்சியைக் கொண்டு வந்திருப்ப(தாகக் கூறுவ)தில் உண்மையாளர்களில் உள்ளவராக இருந்தால் அதைக் கொண்டு வாரும்” என்றான்.
அப்போது மூஸா தனது கைத்தடியைப் போட்டார். உடனே அது தெளிவான பெரியதொரு பாம்பாகி விட்டது.
மேலும், தனது கையை (சட்டைப் பையிலிருந்து) வெளியில் எடுத்தார். உடனே அது பார்ப்பவர்களுக்கு (பளிச் சிடும்) வெண்மையாக இருந்தது.
பிர்அவ்னின் சமூகத்திலுள்ள பிரமுகர்கள், ”நிச்சயமாக இவர் கற்றறிந்த சூனியக்காரர்” என்று கூறினர்.
உங்களை, உங்களது நாட்டை விட்டும் வெளியேற்ற இவர் விரும்புகிறார். எனவே, நீங்கள் எதை ஆலோசனையாகக் கூறுகின்றீர்கள்? (என பிர்அவ்ன் கேட்டான்.)’ (7:106-110)
மேற்படி வசனங்கள் மூஸா நபி அற்புதங்களைச் செய்த போது இவர் கைதேர்ந்த சூனியக்காரர். இந்தச் சூனியத்தின் மூலம் உங்களது பூமியை விட்டும் உங்களை வெளியேற்ற இவர் விரும்புகிறார் என பிர்அவ்னின் சமுகத்தின் பிரமுகர்கள் கூறியதாகக் கூறுகின்றது.
அ(தற்க)வன், ”நீர் உண்மையாளர்களில் இருந்தால் அதைக் கொண்டுவாரும்” எனக் கூறினான்.
அப்போது அவர் தனது கைத்தடியைப் போட்டார். உடனே அது தெளிவான பெரியதோர் பாம்பாகி விட்டது.
மேலும், தனது கையை (சட்டையிலிருந்து) வெளியில் எடுத்தார். உடனே அது பார்ப்பவர்களுக்குப் பளிச்சிடும் வெண்மையாக இருந்தது.
அ(தற்க)வன், தன்னைச் சூழ இருந்த பிரமுகர்களிடம், ”நிச்சயமாக இவர் கற்றறிந்த ஒரு சூனியக்காரர்” என்று கூறினான்.
தனது சூனியத்தின் மூலம் உங்களை உங்களது நாட்டை விட்டும் வெளியேற்ற இவர் விரும்புகின்றார். எனவே, நீங்கள் எதை ஆலோசனையாகக் கூறுகின்றீர்கள்? (என்றும் கேட்டான்.)’ (26:31-35)
மேற்படி வசனங்களில் இவர் சூனியக்காரர்; உங்களை உங்கள் பூமியிலிருந்து வெளியேற்ற விரும்புகின்றார் என்ன கட்டடையிடுகின்றீர்கள் என பிர்அவ்ன் கூறியதாகக் கூறுகின்றன.
இந்த வாசகங்களை பிர்அவ்ன் கூறினானா? பிர்அவ்னினது சமூகப் பிரமுகர்கள் கூறினார்களா? என்று கேள்வி எழுப்பி இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றது என்று கூறுவதா? அல்லது உடன்பாடு காணும் முயற்சியில் ஈடுபடுவதா? எது இஸ்லாமிய ஆய்வாக இருக்கும்? அல்லாஹ்வின் மீது நம்பிக்கையில்லாத குர்ஆனை நிராகரிக்கும் குணம் கொண்டவர்கள் இதை முரண்பாடாகப் பார்க்கலாம். முஃமின்கள் முரண்பாடாகப் பார்க்க மாட்டார்கள். அதே போன்று ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுக்கும் குணம் கொண்டவர்கள்தான் வார்த்தை வித்தியாசங்களை வைத்து ஹதீஸை மறுக்கும் மனோநிலைக்கு வருகின்றனர்.
‘அ(தற்க)வர், ”இல்லை, நீங்கள் போடுங்கள்” என்றார். அப்போது அவர்களது கயிறுகளும், அவர்களது தடிகளும் அவர்களுடைய சூனியத்தின் காரணமாக ஊர்ந்து வருவதைப் போல அவருக்குத் தோற்றமளித்தன.
அப்போது மூஸா தனக்குள் அச்சத்தை உணர்ந்தார்.
”அச்சம் கொள்ளாதீர். நிச்சயமாக நீர்தான் மேலோங்கி நிற்பீர்” என நாம் கூறினோம்.’ (20:66-68)
மேற்படி வசனங்கள் சூனியக்காரர்கள் கயிற்றையும், தடியையும் போட்டபோது அவை பாம்புகள் போன்று தென்பட்டன. அதைப் பார்த்து மூஸா நபி பயந்தார் என்று கூறுகின்றன.
‘அவர்கள் போட்ட போது, ”நீங்கள் கொண்டு வந்தது சூனியமே! நிச்சயமாக அல்லாஹ் அதை அழித்து விடுவான். நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் விளைவிப்போரின் செயலைச் சீர்செய்ய மாட்டான்’ என்று மூஸா கூறினார்.
குற்றவாளிகள் வெறுத்த போதும் அல்லாஹ் தன் வார்த்தைகளைக் கொண்டு சத்தியத்தை நிலை நாட்டியே தீருவான்.’ (10:81-82)
அவர்கள் மேற்படி வசனங்கள் கயிறுகளையும், தடிகளையும் சூனியக்காரர்கள் போட்ட போது மூஸா நபி துணிச்சலுடன், ‘இது சூனியம்; அல்லாஹ் இதை அழிப்பான்’ என்று கூறியதாகக் கூறுகின்றன.
சூனியக்காரர்கள் கயிறுகளையும், தடிகளையும் போட்ட போது மூஸா நபி பயந்தாரா? துணிச்சலுடன் பேசினாரா? என்ற கேள்விகளை எழுப்பி இந்த வசனங்களுக்கிடையில் முரண்பாடு கண்டால் குர்ஆனின் நிலை என்னவாகும்? என்று சிந்திக்க வேண்டும். எனவே, இந்தக் கோணத்தில் ஆய்வு செய்வது தவறு என்பதை நாம் அறிய முடிகின்றது. உடன்பாடு காணும் எண்ணமும், அதற்கான முயற்சியும் இருக்க வேண்டுமே தவிர முரண்பாடுகளைத் தேடி நிராகரிப்பதற்கான வழிகளைத் தேட முடியாது! நிராகரிப்பு நிலையிலிருந்து பார்த்தால் இது சரியாகத் தென்பட்டாலும், ஈமானிய மனநிலையிலிருந்து பார்க்கும் போது இது தவறாகத் தெரியும்.
தொடர்ந்து அவர் கூறும் முரண்பாடுகளின் உண்மை நிலை குறித்து ஆராய்வோம்!
சூனியம் செய்யப்பட்ட பொருட்கள் எடுக்கப்பட்டதா? இல்லையா?
கடந்த கால அறிஞர்கள் பலரும் இந்த முரண்பாட்டிற்கு(?) உடன்பாடு காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக ஸஹீஹுல் புகாரிக்கு விளக்கவுரை எழுதிய இமாம் இப்னு ஹஜர் அவர்கள் இது குறித்து எழுதியுள்ளார்கள்! அவர் அளித்த விளக்கத்தை நிச்சயமாக பிஜே அவர்கள் பார்த்திருப்பார்கள் என்றே எண்ணுகின்றேன். எனினும் ஹதீஸில் இல்லாத, ஆயிஷா(ரலி) அவர்கள் பயன்படுத்தாத வாசகங்களை இணைத்து, பிஜே எழுதி உடன்பாடு காண முடியாத வகையில் ஹதீஸின் மொழிபெயர்ப்பை அமைத்துள்ளார். இதுதான் பிரச்சினையைப் பூதாகரமாக்கியுள்ளது.
‘எந்தப் பொருட்களில் சூனியம் வைக்கப்பட்டதோ, அந்தப் பொருட்களை அக்கிணற்றிலிருந்து அப்புறப்படுத்தி விட்டீர்களா? என்று ஆயிஷா(ரலி) அவர்கள் கேட்ட போது, ‘அப்புறப்படுத்தவில்லை; அதனால் மக்களிடையே கேடுகள் ஏற்படும்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக புகாரியின் 3268, 5763, 5766 ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது எனக் குறிப்பிடுகின்றார்.’ ஆயிஷா(ரலி) அவர்களின் கேள்வியில் ‘கிணற்றிலிருந்து அப்புறப்படுத்தி விட்டீர்களா?’ என்ற வாசகம் இடம்பெறவில்லை. ஆனால், உடன்பாடு காண முடியாத சிக்கலையுண்டாக்குவதற்காகவே ‘கிணற்றிலிருந்து’ என்ற இல்லாத வாசகத்தை வேண்டுமென்றே இணைத்துள்ளார்.
இந்த வாசகம் ஹதீஸில் இல்லாத வாசகம் என்பதற்கு வேறு ஆதாரம் தேவையில்லை. அவரே இந்த ஹதீஸை இதே பகுதியின் முற்பகுதியில் மொழிபெயர்க்கும் போது
‘அதை அப்புறப்படுத்தி விட்டீர்களா?’ என நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘இல்லை. எனக்கு அல்லாஹ் நிவாரணம் அளித்து விட்டான். மக்கள் மத்தியில் தீமையைப் பரப்பக் கூடாது என்று நான் அஞ்சுகிறேன்’ என்று கூறினார்கள். பின்னர் அந்தக் கிணறு மூடப்பட்டது.’
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), நூல்: புகாரி 3268, (தர்ஜமா பக்கம் 1295)
அவரே செய்த இந்த மொழிபெயர்ப்பில் ‘கிணற்றிலிருந்து அப்புறப்படுத்தி விட்டீர்களா?’ என்ற வாசகம் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ளவும். ஹதீஸில் இல்லாத அவர் மேலதிகமாகச் சேர்த்த ‘கிணற்றிலிருந்து’ என்ற வாசகத்தை நீக்கி விட்டு நாம் இந்த முரண்பாட்டுக்கு உடன்பாடு காணும் முயற்சியில் இறங்குவோம்.
நபி(ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் சென்று சூனியம் செய்யப்பட்ட பொருட்களை எடுத்துப் பார்க்கின்றார்கள். பின்னர் ஆயிஷா(ரலி) அவர்களிடம் வந்து, தாம் கண்ட காட்சியை விபரிக்கின்றார்கள். ‘நீங்கள் அதை வெளிப்படுத்தவில்லையா?’ எனக் கேட்ட போது, ‘இல்லை. அல்லாஹ் எனக்கு சுகமளித்து விட்டான். மக்கள் மத்தியில் தீமை பரவுவதை நான் அஞ்சுகின்றேன்’ என்கின்றார்கள்.
‘நீங்கள் அதை வெளிப்படுத்தவில்லையா?’ என ஆயிஷா(ரலி) அவர்கள் கேட்டது, ‘கிணற்றிலிருந்து வெளியே எடுக்கவில்லையா?’ என்ற அர்த்தத்தில் கேட்கவில்லை. ‘இதை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தவில்லையா?’ என்பதே அந்தக் கேள்வியின் அர்த்தமாகும்.
ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸிலேயே
கிணற்றுக்குச் சென்று அதை வெளியில் எடுத்தார்கள் என்று கூறி விட்டு, ‘நீங்கள் வெளிப்படுத்தவில்லையா?’ எனக் கேட்கின்றார்கள் என்றால், ‘கிணற்றிலிருந்து வெளியில் எடுக்கவில்லையா?’ என்று கேட்க முடியாது. காரணம், எடுத்ததாக அவர்களே கூறுகின்றார்கள்.
அஹ்மதில் இடம்பெற்ற அறிவிப்பில்,
‘நீங்கள் அதை மனிதர்களுக்காக வெளிப்படுத்த வேண்டாமா?’ என்று கேட்டதாக இடம்பெற்றுள்ளது. எனவே, ‘வெளிப்படுத்தினார்கள்’ என்று வருவது கிணற்றிலிருந்து வெளியில் எடுத்ததைக் கூறுகின்றது; ‘வெளிப்படுத்தவில்லை’ என்பது மக்களுக்கு வெளிப்படுத்தவில்லை என்பதைக் கூறுகின்றது. இரண்டும் வேறு வேறு அம்சங்களாகும். இந்த வேறுபாடு குறித்து அறிஞர்கள் பேசியுள்ளனர். இதை அறிந்ததனால் இந்த வேறுபாட்டை மக்கள் புரிந்து உண்மையை உணர்ந்துகொள்ள இடமளிக்காத வகையில் ஆயிஷா(ரலி) அவர்களின் கேள்வியில் ‘கிணற்றிலிருந்து’ என்ற இல்லாத வாசகத்தை நுழைத்துள்ளார். இதன் மூலம் ‘எடுக்கப்பட்டது; எடுக்கப்படவில்லை’ என்ற இரு செய்தியும் ‘கிணற்றிலிருந்து எடுக்கப்பட்டது; கிணற்றிலிருந்து எடுக்கப்படவில்லை’ என ஹதீஸ் கூறுவதாகச் சித்தரித்துள்ளார். முரண்பாட்டைத் தானாக உண்டுபண்ணியுள்ளார்.
எந்தப் பொருட்களில் சூனியம் செய்யப்பட்டதோ, அந்தப் பொருட்களைக் கிணற்றிலிருந்து அப்புறப்படுத்தி விட்டீர்களா? என்று ஆயிஷா(ரலி) கேட்காத வாசகத்தை அவர்களது ஹதீஸில் நுழைத்தது பகிரங்க மோசடியாகும். இந்த இவரது மோசடியை நீக்கி விட்டால் ஹதீஸில் முரண்பாடு இல்லை என்பது புரிந்து விடும்.
அல்குர்ஆனின் 22:47, 32:5 ஆகிய வசனங்கள் அல்லாஹ்விடத்தில் ஒரு நாள் எமது கணிப்பின் படி ஆயிரம் வருடங்களுக்குச் சமனானது என்று கூறுகின்றது. 70:4 ஆம் வசனம் 50 ஆயிரம் வருடங்களுக்குச் சமனானது என்கின்றது. இது குறித்து பிஜே விரிவாக விளக்கமளிக்கும் போது விளக்கக் குறிப்பு 293 இல்;
‘ஆயிரமும், ஐம்பதாயிரமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இரண்டும் வேறு வேறு செய்திகளைக் கூறும் வசனங்கள் என்பதை விளங்கிக்கொண்டால் இதில் எந்த முரண்பாடும் இல்லை’ (பக்கம் 1249) என்று குறிப்பிடுகின்றார்.
இதே போன்று ‘வெளிப்படுத்தப்பட்டது’ என்பதும், ‘வெளிப்படுத்தப்படவில்லை’ என்பதும் முரண்பட்டது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ‘வெளிப்படுத்தப் பட்டது’ என்பது கிணற்றிலிருந்து வெளிப்படுத்தப்பட்டது என்பதைக் கூறுகின்றது; ‘வெளிப்படுத்தப்படவில்லை’ என்பது அதை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தப்படவில்லை என்பதைக் கூறுகின்றது என்பதை விளங்கிக்கொண்டால் இதில் எந்த முரண்பாடும் இல்லை என்பது தெளிவாகி விடும்.
அடுத்து, நஸஈ அஹ்மதில் இடம்பெற்றுள்ள ஒரு அறிவிப்பு நேரடியாக இந்த ஹதீஸுடன் முரண்படுகின்றது.
ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ், இரண்டு மலக்குகள் வந்து உரையாடிய உரையாடல் மூலம் சூனியம் பற்றி நபி(ஸல்) அவர்கள் அறிந்ததாகக் கூற, ஸைத் இப்னு அர்கம்(ரலி) அவர்களது அறிவிப்பு, ஜிப்ரீல் வந்து நேரடியாகக் கூறியதாகக் கூறுகின்றது. அடுத்தது, ஏனைய ஹதீஸ்கள் நபி(ஸல்) அவர்கள் கிணற்றுக்குச் சென்று அப்பொருட்களை எடுத்ததாகக் கூற, நஸஈ அறிவிப்பு நபி(ஸல்) அவர்கள் ஆள் அனுப்பி அந்தப் பொருட்கள் அவரிடம் எடுத்து வரப்பட்டதாகக் கூறுகின்றது.
இவை முரண்பாடுகள்தான். இப்படி முரண்பட்டால் இரண்டில் எது உறுதியான அறிவிப்பு என்று ஆய்வு செய்ய வேண்டும். ஹதீஸ் துறையில் அறிவும், அனுபவமுமுள்ள சகோதரர் அதைச் செய்யாமல் இரண்டு ஹதீஸ்களையும் மோத விட்டு இரண்டையும் நிராகரிப்பது விசித்திரமானதாகும்.
பலவீனமான ஹதீஸை எடுத்து, பலமான அறிவிப்புடன் மோத விட்டு, பலமான ஹதீஸை மறுக்க முற்பட்டது அதை விட ஆச்சரியமாகும்.
அவர் குறிப்பிட்டுள்ள நஸஈ, அஹ்மத் அறிவிப்பில் இரண்டு குறைகள் உள்ளன.
(1) ‘அல் அஃமஸ்’ என்ற அறிவிப்பாளர் இதில் இடம்பெறுகின்றார். இவர் ஹதீஸ்களை அறிவிக்கும் போது அறிவிப்பாளர்களில் இருட்டடிப்புச் செய்யக் கூடிய முதல்லிஸ் ஆவார். இவர், ‘இன்னாரிடம் நான் கேட்டேன்’ என்று தெளிவாக அறிவிக்காமல் ‘அன் அனா’ என்று கூறப்படக் கூடிய விதத்தில் ‘அவர் மூலம்’ என அறிவித்தால் அவர் நேரடியாகக் கேட்காமலேயே அறிவித்திருக்க வாய்ப்பு உள்ளது. இந்த அடிப்படையில் அறிவிப்பாளரில் ஒருவரோ, இருவரோ விடுபட்டிருக்க வாய்ப்பு உள்ளது. இந்த அறிவிப்பில் இது ஒரு குறைபாடாகும். இவர் அறிவிப்பாளர் தொடரில் மோசடி செய்பவர் என்றாலும் மிக மோசமான அறிவிப்பாளர்களிடம் செய்தியைக் கேட்டு மோசடி செய்யும் குணம் கொண்டவரல்ல என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். ‘அஃமஸ்’ மூலம் அபூ முஆவியா அறிவிக்கும் ஹதீஸ்கள் ஏற்கப்படும். எனினும் இதில் மற்றுமொரு குறைபாடும் உள்ளது.
(2) அடுத்ததாக, யசீத் இப்னு ஹய்யான் என்பவர் இடம்பெறுகின்றார். இவர் தவறு விடக் கூடியவர்; முரண்பாடாக அறிவிக்கக் கூடியவர் என இப்னு ஹிப்பான்(ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
இந்த இரண்டு குறைபாடுகளால் இந்த ஹதீஸ் பலவீனமாகின்றது.
அது போக, சூனியம் பற்றிய ஹதீஸுடன் ஆயிஷா(ரலி) அவர்கள் நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்கள். ஆனால், இதன் அறிவிப்பாளர் யஸீத் இப்னு அர்கம் அவர்கள் அதனுடன் நேரடியாகச் சம்பந்தப்படாதவர்.
அடுத்ததாக நஸஈ, அஹ்மத் ஹதீஸ் ஆதாரபூர்வமான அறிவிப்பாளர்களின் ஹதீஸிற்கு முரணாக அமைந்துள்ளது. இப்படி இருக்க, பலவீனமான ஹதீஸின் கருத்தை முன்வைத்து சூனியம் ஹதீஸில் முரண்பாடு உள்ளது என சகோதரர் பிஜே வாதிப்பது எந்த வகையிலும் நியாயமற்றதாகும். இந்த ஹதீஸ் பலவீனமானது என்பதை அறியாமல் பிஜே இந்த வாதத்தை முன்வைத்திருக்கலாம் எனப் பிஜே மீது நல்லெண்ணம் வைக்கலாம். ஏனெனில், எத்தகைய அறிஞர்களுக்கும் தவறு நேரலாம். அல்லாஹ்வின் தூதரைத் தவிர மற்ற எவரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களல்ல. அந்த அடிப்படையில் நல்லெண்ணம் வைப்பதற்குக் கூடப் பிஜே செய்துள்ள ‘திருவிளையாடல்’ இடந்தராமல் போகின்றது.
‘113, 114 வது அத்தியாயங்கள்’ என்ற தலைப்பில் சூறதுன்னாஸ்-பலக் அத்தியாயங்கள் நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்ட போது அருளப்பட்டன என்ற கருத்தில் அமைந்த பலவீனமான அறிவிப்பை விமர்சனம் செய்யும் போது;
ஹதீஸை விமர்சனம் செய்வதற்கு அறிவிப்பாளர் தொடர் பற்றிப் பேசாமல், அப்துல் ஹமீத் பாகவி-நிஜாமுதீன் மன்பயீ இருவருக்கும் இடையிலுள்ள முரண்பாட்டை ஏன் கூறுகின்றார்? என்று ஆய்வு செய்த போது ஒரு உண்மை புலப்பட்டது.
ஹதீஸ்களுக்கிடையில் அதிக முரண்பாடுகள் இருக்கின்றன எனக் காட்டுவதற்காகப் பிஜே எடுத்து வைத்த நஸஈ-அஹ்மத் அறிப்பாளர் தொடரும், நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்ட போது இவ்விரு சூறாக்களும் அருளப்பட்டன எனக் கூறும் ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரும் ஒரே தொடராகும்.
அபூ முஆவியா, அஃமஸ், யசீதிப்னு ஹய்யான், ஸைத் இப்னு அர்கம் – இந்தத் தொடரில்தான் இரண்டு ஹதீஸ்களும் அறிவிக்கப்படுகின்றன. (ஒரேயொரு அறிவிப்பாளர் மட்டும் வேறுபடுகின்றார்.)
இதில் ஒன்றை ஏற்று பார்த்தீர்களா? ஹதீஸிற்கிடையில் முரண்பாடு இருக்கிறது. எனவே இரண்டு ஹதீஸ்களையும் ஏற்க முடியாது என வாதிட்டவர் அதே அறிவிப்பாளர் தொடரில் வந்த நாஸ்-பலக் அத்தியாயங்கள் அருளப்பட்டன என்ற ஹதீஸை மறுக்கின்றார். இரண்டுமே பலவீனமான அறிவிப்புகளாகும். தனது வாதத்துக்கு வலு சேர்க்க வேண்டுமென்றால் பலவீனமான ஹதீஸையும் எடுப்பேன் என்ற நிலைப்பாட்டை இதில் முன்வைக்கின்றார். தேவைப்பட்டால் ஹதீஸில் இல்லாததைச் சேர்த்து மக்கள் மனதில் ஐயத்தை ஏற்படுத்துவேன். தேவைப்பட்டால் குர்ஆனில் கூடச் சில வார்த்தைகளுக்கு அர்த்தம் செய்யாமல் விடுவேன் என்ற அவரது நிலைப்பாடும் உறுதி செய்யப்பட்டு விட்டது. இவர் சொல்லும் கருத்தை விட இவர் செல்லும் இந்தப் போக்குத்தான் ஆபத்தானது என்பதைப் பொது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த இவரது போக்கு சமூகத்தை எங்கே கொண்டு போய் நிறுத்தப் போகின்றதோ என்ற அச்சம் கலந்த ஐயம்தான் இது குறித்து எழுதும் எண்ணத்தை ஏற்படுத்தியது.
இன்ஷா அல்லாஹ்! முடிவுரையுடன் இந்தத் தொடர் முற்றுப் பெறுகின்றது. தர்ஜமாவில் அவர் குறிப்பிட்டுள்ள ஏனைய சில ஹதீஸ்களுக்கான விளக்கங்களையும் சுருக்கமாக முன்வைப்போம். இன்ஷா அல்லாஹ்! வாசகர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்ட ஹதீஸை ஏற்பதற்குத் தடையாக அமையக் கூடிய தமது சந்தேகங்களை எழுதி அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக எழுதி அனுப்புங்கள். இன்ஷா அல்லாஹ்! அடுத்தடுத்த இதழ்களில் பதிலளிக்கப்படும்.
No comments:
Post a Comment