Sunday, November 29, 2009

மூஸா நபியும் மலக்குல் மௌத்தும் (தொடர்-2)

எழுதியவர்: மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (பகுதி 2, தொடர் 2)

சென்ற இதழின் கவாரிஜ்கள், ஷீஆக்கள், முஃதஸிலாக்கள் போன்ற வழிகெட்ட பிரிவினர் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஹதீஸ்களை மறுத்திருப்பது பற்றியும் மூஸா நபியும், மலக்குல் மவ்த்தும் சம்பந்தப்பட்ட ஸஹீஹான ஹதீஸ் அறிஞர் பீஜே அவர்களால் மறுக்கப்படுவது பற்றியும் தெளிவுபடுத்தினோம்.

மரணத்தைப் பொறுத்த வரையில் சாதாரண மனிதர்களின் மரணத்திற்கும், நபிமார்களின் மரணத்திற்குமிடையில் வித்தியாசம் இருப்பதையும், நபிமார்கள் மரணத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெற்றுள்ளனர் என்பதையும் ஆதாரத்துடன் தெளிவுபடுத்தினோம். இந்த உண்மையை உணராமல்தான் சிலர் இந்த ஹதீஸை மறுக்கின்றனர்.

அத்துடன் மலக்குகள் மனித ரூபத்தில் வருவர் என்பதையும் தன்னிடம் திடீரென மனித ரூபத்தில் வந்த மலக்கை மூஸா நபி அறைந்தது ஒரு சாதாரண நிகழ்வு. மறுக்கப்படவேண்டிய அம்சம் அல்ல என்பதையும் தெளிவுபடுத்தினோம். இந்த உண்மையை உணராத பல வழிகெட்ட பிரிவினர் வரலாற்று ஓட்டத்தில் இந்த ஹதீஸை மறுத்துள்ளனர். இதனை அஹ்லுஸ் ஸுன்னாவுடைய பல அறிஞர்களும், ஹதீஸ் கலை மேதைகளும் வன்மையாகக் கண்டித்துமுள்ளனர்.

அல்லாஹுத்தஆலா இரவின் இறுதிப் பகுதியில் உலகத்தின் வானத்திற்கு இறங்குகின்றான் என்ற ஹதீஸை நீங்கள் கூறுகின்றீர்கள் அல்லவா? அவ்வாறே சுவனத்தில் முஃமின்கள் அவனைப் பார்ப்பார்கள் என்றும், முகத்தைக் கேவலப்படுத்தாதீர்கள்! ஏனெனில், அல்லாஹ் ஆதம்(அலை) அவர்களைத் தனது சூறத்தில் படைத்தான் என்ற ஹதீஸையும், நரகம் முறையிடும் போது அல்லாஹ் அதில் தனது காலை வைப்பான் என்றும், மூஸா(அலை) அவர்கள் மலக்குல் மவ்த்தின் கண்ணைப் பழுதாக்கினார் என்றும் ஹதீஸ்களைக் கூறுகின்றீர்களே என்று இமாம் அஹ்மத்(ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது;

كل هدا صحيح

“இவை அனைத்தும் ஆதாரபூர்வமானவைதான்” என்று கூறினார்கள்.

இமாம் இஸ்ஹாக்(ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸ் பற்றிக் கூறும் போது;

لا يدعه الا مبتدع او ضعيف الرأي

“இதனை வழிகேடன் அல்லது பலவீனமான பார்வையுடையவனைத் தவிர வேறு எவரும் விட்டு விட மாட்டார்கள்” என்று குறிப்பிடுகின்றார்கள்.

இந்த ஹதீஸைக் கடந்த காலங்களில் பல பிரிவினரும் மறுத்து வந்துள்ளனர். இது குறித்து இமாம் இப்னு குஸைமா(ரஹ்) அவர்கள் குறிப்பிடும் போது;

قَالَ اِبْنُ خُزَيْمَةَ : أَنْكَرَ بَعْضُ الْمُبْتَدَعَةِ هَذَا الْحَدِيثَ

சில பித்அத்வாதிகள் இந்த ஹதீஸை மறுத்துள்ளனர்” என்று குறிப்பிடுகின்றார்கள்.
(ஸஹீஹுல் புகாரியின் விரிவுரை பத்ஹுல் பாரீ 10/24)

இமாம் அல்மாஸிரிய்(ரஹ்) அவர்கள் குறிப்பிடும் போது;

قَالَ الْمَازِرِيّ : وَقَدْ أَنْكَرَ بَعْض الْمَلَاحِدَة هَذَا الْحَدِيث

“சில நாஸ்திகர்கள் இந்த ஹதீஸை மறுக்கின்றனர்” என்று குறிப்பிடுகின்றார்கள்.
(பார்க்க: ஸஹீஹ் முஸ்லிமின் விளக்கவுரை 8/103)

சில அறிஞர்கள் இந்த ஹதீஸை நம்புவதை அகீதாவில் ஒரு பகுதியாகக் குறிப்பிடுகின்றனர்.

இது குறித்து அறிஞர் ஸாலிஹ் அல் உதைமீன்(ரஹ்) அவர்கள் குறிப்பிடும் போது;

وهذا الحديث ثابت في الصحيحين وإنما أثبته المؤلف في العقيدة لأن بعض المبتدعة أنكره

“இந்த ஹதீஸ் புகாரி-முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சில பித்அத்வாதிகள் இதை மறுப்பதால் இந்த நூலாசிரியர் அகீதாவில் ஒரு அம்சமாக இந்த ஹதீஸை இடம்பெறச் செய்துள்ளார்கள்” என்று குறிப்பிடுகின்றார்கள்.
(பார்க்க: மஜ்மூஉ பதாவா வரஸாயில் இப்னு உதைமீன் 5/31)

நவீன கொள்கைவாதிகள் எனும் பித்அத்வாதிகள் மறுத்துள்ளது போன்றே “ராபிழாக்கள்” எனும் வழிகெட்ட ஷீஆக்களும் inth ஹதீஸை மறுத்துள்ளனர்.

அபூ ஸுலைமான் அல்ஹத்தாபி(ரஹ்) அவர்கள் குறிப்பிடும் போது;

قَالَ أَبُو سُلَيْمَانَ الْخَطَّابِيُّ هَذَا حَدِيثٌ يَطْعَنُ فِيهِ الْمُلْحِدُونَ وَأَهْلُ الْبِدَعِ

“நிராகரிப்பாளர்களும், பித்அத்வாதிகளும் இந்த ஹதீஸில் குறை கூறுகின்றனர்” எனக் குறிப்பிடுகின்றனர்.
(அல்அஸ்மாஉ வஸ்ஸிபாத் லில்பைஹகீ 2/449)

அல்ஹாபிழ் அப்துல் கனீ அல்முகத்தஸி இது குறித்துக் குறிப்பிடும் போது;

لا ينكره إلا ضال مبتدع راد على الله ورسوله

“வழிகேடனும், பித்அத்வாதியும் அல்லாஹ்வினதும் அவனது தூதரினதும் செய்தியை மறுப்பவனும் மட்டுமே இந்த ஹதீஸை மறுப்பான்” என்று குறிப்பிடுகின்றார்.
(தத்கிரதுல் முஃதஸி ஷரஹு அகீததுல் ஹாபிழ் அப்துல் கனீ அல்முகத்தஸி)

இவ்வாறு பல்வேறுபட்ட வழிகெட்ட பிரிவினரால் மறுக்கப்பட்ட இந்த ஹதீஸை அவர்கள் கூறிய அதே காரணங்களை முன்வைத்து சகோதரர் பீஜே அவர்களும் மறுக்கின்றார்கள். இவர் இந்த ஹதீஸை மறுப்பதற்காக முன்வைக்கும் வாதங்களைப் பின்வருமாறு சுருக்கி நோக்கலாம்.

- மூஸா நபி மரணத்தை வெறுத்துள்ளார் என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது.

- ஒரு நபி வானவரைத் தாக்குவாரா? இது நபிமார்களின் பண்புக்குச் சரி தானா?

- மலக்கு தோல்வியுடன் திரும்பிச் செல்வாரா?

இவைதான் இந்த ஹதீஸை மறுப்போர் எடுத்து வைக்கும் பிரதானமான வாதங்களாகும். இந்த ஒவ்வொரு வாதங்களுக்குள்ளும் மற்றும் சில சின்னச் சின்னக் கேள்விகள் அடங்கியுள்ளன. அவை அத்தனைக்கும் இன்ஷா அல்லாஹ் விரிவான விளக்கங்களை இத்தொடரில் நாம் பார்க்கலாம்.

அந்த விளக்கத்திற்குச் செல்ல முன்னர் பொதுவான நடுநிலையான ஒரு சிந்தனையை உங்கள் முன்வைப்பது பொருத்தம் என்று நினைக்கின்றேன்.

ஒரு ஹதீஸில் ஏதேனும் ஒரு சின்ன குறை இருந்தால் பல அறிஞர்களின் பார்வைக்கு அது படாமல் போக வாய்ப்பு உள்ளது என்றாவது கூறலாம். எனினும் கடந்த காலத்தில் வாழ்ந்த எந்த ஹதீஸ் கலை மேதைக்கும் அந்தக் குறை தென்படாமல் போய் விட்டது என்று கூற முடியாது. ஆயினும் பீஜே கூறுவது போல் ஒரு நபியுடையதும், ஒரு மலக்குடையதும் ஏன்! அல்லாஹ்வுடையதும் அந்தஸ்த்தைக் குறைத்துக் காட்டும் ஹதீஸாக இது இருந்திருந்தால் நிச்சயமாக ஹதீஸ் கலை மேதைகள் அனைவரின் பார்வையிலிருந்து அது தப்பியிருக்காது! பீஜே-யை விட இமாம் புகாரி, முஸ்லிம் போன்ற இமாம்கள் மார்க்க அறிவோ, உணர்வோ, ஆய்வோ, அற்றிருந்தார்கள் என்று கற்பனையும் பண்ண முடியாது. இப்படி இருக்கக் குர்ஆனின் பல வசனங்களுக்கு முரணாக அமைந்த(?) ஒரு ஹதீஸை அவர்கள் அனைவரும் “சரியானது!” என்று கூறியிருப்பார்களா? என்று சிந்தித்தால், குறை ஹதீஸில் இல்லை; இந்த ஹதீஸை மறுப்போரின் அறிவிலும், மார்க்கத்தை ஆய்வு செய்யும் முறையிலும்தான் உள்ளது என்பது புலப்படுகின்றது. எனவேதான் வழிகெட்ட பிரிவினரைத் தவிர வேறு எந்த அறிஞர்களும் கடந்த காலங்களில் இந்த ஹதீஸை மறுத்ததில்லை. பீஜேயை விடக் கடந்த கால அறிஞர்கள் அனைவரும் ஆய்வறிவற்றவர்களாக இருந்தனர் என்று எண்ணுவது இஸ்லாமிய வரலாற்றையும், ஹதீஸ் கலை வரலாற்றையும் அறியாதவர்களின் பார்வையாகவே இருக்கும். இந்தச் சிந்தனையுடன் இந்த ஹதீஸை மறுப்பதற்காக முன்வைக்கப்படும் வாதங்களைப் பார்ப்போம்.

மூஸா நபி மரணத்தை வெறுத்தார்களா?

இந்த வாதத்தைப் பீஜே பின்வருமாறு முன்வைக்கின்றார்;

“இவ்வுலக வாழ்க்கை அற்பமானது; மறுமை வாழ்வுதான் நிலையானது” என்பது எல்லா இறைத் தூதர்களினதும் போதனையாக இருந்தது. தமக்கு மரணம் வந்து விட்டது என்பதை மூஸா நபியவர்கள் அறிந்து கொண்டால் அதற்குத் தம்மைத் தயார்படுத்திக்கொள்வார்களே தவிர, அதை எதிர்த்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள மாட்டார்கள்.”
(பீஜேயின் தர்ஜமா – நான்காம் பதிப்பு, பக்கம் 1309)

நாம் ஏற்கனவே நபிமார்களின் மரணத்திற்கும், சாதாரண மக்களின் மரணத்திற்குமிடையிலிருக்கும் வேறுபாட்டை விபரித்துள்ளோம். அந்த ஹதீஸே இந்த வாதத்தை வலிமையிழக்கச் செய்து விடும். நபிமார்களுக்கு மரணத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அல்லாஹ் வழங்கியுள்ளான். அதை மூஸா நபி பயன்படுத்தினார் என்றால் அது அவரது உரிமை. அதனால் அவரது கண்ணியத்தில் எந்தக் குறையும் ஏற்படாது.

அடுத்து வானவர் மனித ரூபத்தில் வந்துள்ளார். மனிதன் ஒருவர் மூலம் தனக்கு ஆபத்து வருமென்றால், அதை எதிர்த்து நடவடிக்கை மேற்கொள்வது மார்க்கம் வலியுறுத்தும் அம்சமேயல்லாது தடுத்த அம்சம் அல்ல. அடுத்து மூஸா(அலை) அவர்கள் – அவர்களின் உண்மையான நாட்டம் என்ன? என்பது ஹதீஸின் இறுதிப் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. (அதைத்தான் பீஜே தர்ஜமாவில் மொழி பெயர்க்காமல் இருட்டடிப்புச் செய்திருந்தார்.) இது குறித்துப் பின்னர் விளக்கமாக நோக்கலாம்.

இந்த ஹதீஸை மறுப்போர் கூறுவது போல மூஸா நபி மரணத்தை வெறுத்திருந்தால் கூட அது அவரது அந்தஸ்தைக் குறைக்காது.

மரணமற்ற வாழ்வை விரும்பிய ஆதம் நபி:

அல்லாஹுதஆலா ஆதம்(அலை) அவர்களைப் படைத்து சுவனத்தில் சுகமாக வாழ விட்டான். ஒரேயொரு மரத்தின் கனியை மட்டும் உண்ணக் கூடாது எனத் தடுத்திருந்தான். ஆதம்(அலை) அவர்கள் அந்தக் கனியை ஷைத்தானின் தூண்டுதலால் சாப்பிட்டார்கள்.

ஷைத்தான் எப்படி அவர்களை வழிகெடுத்தான்? என்பது பற்றிக் குர்ஆன் கூறும் போது;

அவரிடம் ஷைத்தான் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். “ஆதமே! நிலையான (வாழ்வளிக்கும்) மரத்தைப் பற்றியும் உமக்கு நான் அறிவிக்கட்டுமா?” என்றான். (20:120)
(இது பீஜே அவர்களின் மொழியாக்கம்தான்)

மரணமில்லாத வாழ்வு கிடைக்கும் என்று ஷைத்தான் தூண்டியதால் அல்லாஹ்வின் கட்டளையையும் மீறி ஆதம்(அலை) அவர்கள் அந்த மரத்தின் கனியைப் புசித்தார்கள். ஆதம்(அலை) அவர்களும் ஒரு நபிதான். மரணமேயில்லாத வாழ்க்கையின் மீது அவர்கள் கொண்ட மோகம் அல்லாஹ் போட்ட ஒரேயொரு தடையைக் கூட மீறும் அளவுக்கு அவர்களை இட்டுச் சென்றுள்ளது என்று குர்ஆன் கூறுகின்றது.

மூஸா நபி மரணத்தை வெறுத்ததாகக் காரணம் காட்டி மூஸா நபியும், மலக்குல் மவ்த்தும் சம்பந்தப்பட்ட ஹதீஸை மறுப்பது போல், ஆதம்(அலை) அவர்கள் மரணமே இல்லாத வாழ்வுக்கு ஆசைப்பட்டு, ஷைத்தானுக்குக் கட்டுப்பட்டு, அல்லாஹ்வின் கட்டளையை மீறுவதாகக் கூறும் குர்ஆனின் வசனங்களையும் நிராகரிக்கப் போகின்றார்களா? முரட்டுத்தனமான பிடிவாதமும், விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற மனோநிலையும் ஹதீஸை மட்டுமல்ல; குர்ஆனையும் நிராகரிக்கும் நிலைக்கு இவர்களை அழைத்துச் செல்லுமா?

இது ஆதம்(அலை) அவர்களுடன் சம்பந்தப்பட்டது. மூஸா நபி சம்பந்தப்பட்ட சில நிகழ்ச்சிகளையே இங்கே தர விரும்புகின்றோம்.

உயிருக்குப் பயந்து ஊரை விட்டு ஓடியவர்(?)

மூஸா(அலை) அவர்கள் தவறுதலாக ஒரு கொலை செய்தார்கள். அந்த செய்தி தெரிய வந்த போது, மூஸா(அலை) அவர்களைக் கொலை செய்ய அதிகாரிகள் முடிவு செய்ததாகத் தகவல் மூஸா நபிக்குக் கிடைக்கின்றது. எனவே தனது உயிரைக் காத்துக்கொள்வதற்காக பயத்துடன் கவனமாக எவரும் அறியாத வண்ணம் ஊரை விட்டும் மூஸா நபி ஓடுகின்றார். (பார்க்க: 28:15-21)

மூஸா நபி உயிருக்குப் பயந்து ஊரை விட்டும் ஓடியதாக இந்தக் குர்ஆனிய வசனங்கள் கூறுகின்றனவே! இதையும் மறுக்கப் போகின்றார்களா? அல்லது தவறுதலாக ஒரு கொலை நடந்து விட்டால் சட்டப்படி அதை அணுகி, பிரச்சினையைத் தீர்க்காமல் கொலையை மூஸா நபி மறைத்துள்ளார்கள். இந்தச் சம்பவம் கொலை செய்வதையும், அதை மறைப்பதையும் தேவைப்பட்டால் சட்டத்தின் பிடியில் சிக்காமல் ஓடி ஒழிப்பதையும் ஆதரிக்கின்றது என்று கூறி, (நூறு கொலைகள் செய்த மனிதனை அல்லாஹ் மன்னித்த ஹதீஸை மறுத்தது போன்று) இந்தக் குர்ஆன் வசனங்களையும் மறுக்கப் போகின்றார்களா? அல்லது இந்தச் சம்பவம் கொலை செய்யத் தூண்டுகின்றது என்று கூறி மறுக்க முன்வருவார்களா?

இந்தச் சம்பவத்திற்கு வேண்டுமானால் சில சமாளிப்புப் பதில்களை அவர்கள் கூறலாம்.

பாம்புக்குப் பயந்து ஓடியவர்:

மூஸா நபியுடன் தூர் மலையடிவாரத்தில் அல்லாஹ் நேரடியாகப் பேசுகின்றான்; “மூஸாவே! நான்தான் அகிலத்தின் இரட்சகனாகிய அல்லாஹ்!” என்று நேரிடையாகக் கூறியே அல்லாஹ் பேசுகின்றான். அப்போது மூஸா நபியின் கையில் இருந்த தடியைக் கீழே போடுமாறு அல்லாஹ் கூறுகின்றான். அவர் கீழே போட்டார். அந்தத் தடி பாம்பு போல் நெளிவதைக் கண்டதும்;

திரும்பிப் பார்க்காமல் புறமுதுகிட்டு ஓடினார். அதன் பின் அல்லாஹ்வே, “மூஸாவே! முன்னோக்கி வாரும்! பயப்படாதீர்! நிச்சயமாக நீர் அச்சமற்றவர்களில் உள்ளவர்” என்று கூறிய பின்னர்தான் வருகிறார்.
(பார்க்க: 28:29-31, 20:11-21)

இந்தச் சம்பவத்தை நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள்! மூஸா நபி உயிருக்கு எவ்வளவு பயந்துள்ளார் என்று சிந்தித்துப் பாருங்கள்! அல்லாஹ்வே நேரடியாகப் பேசிக்கொண்டிருக்கும் போது அந்தப் பாக்கியம் மிக்க உரையாடலையும் உடைத்துக் கொண்டு ஒரு பாம்புக்குப் பயந்து ஓடுவதாக இந்த ஆயத்துக்கள் கூறுகின்றனவே! இது சரியாக இருக்குமா? அப்படியே பயப்பட்டால் கூட தன்னுடன் நேரடியாக அல்லாஹ் உரையாடிக்கொண்டிருக்கின்றான்; அந்த அல்லாஹ்விடமே முறையிடலாமல்லவா? இவ்வாறுதான் மூஸா நபியும் மலக்குல் மவ்த்தும் சம்பந்தப்பட்ட ஹதீஸ் குறித்துப் பீஜே வாதிப்பது போல் வாதிட்டால் இந்த ஆயத்துக்களையும் நிராகரிக்க நேரிடுமல்லவா?

மேற்படி ஹதீஸை மறுக்கும் விதத்தில் பீஜே அவர்கள் எழுதும் போது;

“மலக்குல் மவ்த் அல்லாஹ்வின் கட்டளையைக் கூறிய போது ஒரு நபி என்ன செய்திருப்பார்? உடனே அதற்குத் தலை சாய்த்திருப்பதைத் தவிர வேறு வழி அவருக்கு இல்லை. (நபிமாருக்குத்தான் மரணத்தைத் தேர்ந்தெடுக்கும் வேறு வழி இருக்கிறது என்ற அடிப்படைக்கு முரணான கூற்று இது.) இதோ நான் அல்லாஹ்வின் கட்டளையைச் செயல்படுத்தத் தயார்! என்று கூறி இருந்தால் ஒரு நபியின் தகுதி அதில் வெளிப்பட்டிருக்கும். அல்லது “இறைவா! இன்னும் கொஞ்சம் ஆயுளை அதிகமாக்கித் தா!” என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்திருந்தால் சராசரி முஃமினின் பண்பு அதில் வெளிப்பட்டிருக்கும். ஆனால், அல்லாஹ் அனுப்பிய தூதரை கண்ணைக் குருடாக்கும் அளவுக்கு அறைவது ஈமானில் சேருமா? இறை மறுப்பில் சேருமா?” என்று வாதிட்டு அந்த ஹதீஸை மறுக்கின்றார்.

இதே போன்று அல்லாஹ் நேரடியாக உரையாடிக்கொண்டிருக்கின்றான். அவன்தான் தடியைப் போடச் சொல்கின்றான். அது பாம்பு போல் நெளிகின்றது. இதைப் பார்த்த ஒரு இறைத் தூதர் என்ன செய்ய வேண்டும்? அச்சம் இல்லாமல் இருக்க வேண்டுமல்லவா?

நபி(ஸல்) அவர்களை எதிரிகள் சூழ்ந்த போது, அபூபக்கர்(ரலி) அவர்களிடம் “பயப்படாதே! அல்லாஹ் எம்முடன் இருக்கின்றான்” என்று (9:40) கூறியது போன்று பயமற்று இருக்க வேண்டும். நம்முடன் அல்லாஹ் உரையாடுகின்றான் என்ற உணர்வுடன் இருந்திருக்க வேண்டும். சரி, சராசரி மனிதனைப் போல் அச்சம் ஏற்பட்டால் கூட அல்லாஹ்விடம் முறையிட வேண்டும். அதை விட்டு விட்டு பாம்புக்குப் பயந்து அல்லாஹ்வையே உதாசீனம் செய்வது போல் திரும்பிப் பார்க்காமல் ஓடுகின்றாரே இது அல்லாஹ்வை நம்புவதில் சேருமா? அல்லாஹ் மீது நம்பிக்கையற்ற தன்மையைக் காட்டுமா? இது அல்லாஹ்வை மதிப்பதைக் காட்டுமா? உதாசீனப்படுத்துவதைக் காட்டுமா? என்ற தொனியில் கேள்விகளைத் தொடுத்து இந்த வசனங்களையும் இவர்கள் நிராகரிக்கப் போகின்றார்களா?

மூஸா(அலை) அவர்கள் பிர்அவ்னிடம் பிரச்சாரம் செய்யும் போது தனது கைத் தடியைப் போடுகின்றார்கள். அது பாம்பாக மாறுகின்றது. இதைப் போல் எம்மாலும் செய்ய முடியும் என்ற அடிப்படையில் அவன் சூனியக்காரர்களுடன் போட்டிக்கு ஏற்பாடு செய்கின்றான். சூனியக்காரர்கள் தமது கைத் தடிகளையும், கயிறுகளையும் போட்ட போது அவர்களது சூனியத்தின் காரணத்தினால் அவை பாம்புகள் போன்று போலித் தோற்றமளிக்கின்றன. இதைப் பார்த்து மூஸா நபி பயப்படுகிறார்கள். இதனைக் குர்ஆன் பல இடங்களில் விபரிக்கின்றது. (பார்க்க: 20:57-69)

தனது தடி குறைந்தது ஏற்கனவே இரண்டு தடவைகளாவது பாம்பாக மாறியுள்ள நிலையிலும் மூஸா நபி சூனியக்காரர்களின் போலிப் பாம்புக்குப் பயப்பட்டுள்ளாரே! உயிருக்கு இவ்வளவு பயந்த ஒருவர் இறைத் தூதராக இருக்க முடியுமா? சூனியக்காரனின் இது போன்ற சேட்டைக்கு நாங்களே அச்சப்பட மாட்டோம் எனும் போது ஒரு நபி அச்சம் கொள்வாரா? சராசரி மனிதன் கூட உண்மையான பாம்பைக் கண்டால் கூடத் தடியைத் தேடி அதை அடிக்க முற்படும் போது ஒரு நபி கையில் தடியை வைத்துக் கொண்டு, பாம்பு போல் போலித் தோற்றத்தை ஏற்படுத்தும் கயிற்றுக்கும், தடிக்கும் அச்சப்பட்டிருப்பீர்களா? சூனியக்காரனால் தடியையும், கயிற்றையும் பாம்பாக மாற்ற முடியாது என்ற உண்மையை நாம் கூட உறுதியாகக் கூறிக்கொண்டிருக்கின்றோம். அப்படி இருக்கும் போது சூனியக்காரனால் தடியைப் பாம்பாக மாற்ற முடியாது என்ற அடிப்படை அரிச்சுவடி அறிவு கூட மூஸா நபிக்கு இல்லாமல் இருந்திருக்குமா? என்று பீஜே தனது பாணியில் கேள்விகளை அடுக்கி இந்தக் குர்ஆன் வசனங்களையும் நிராகரிக்கப் போகின்றாரா? பீஜேயை முழுமையாக நம்பும் சகோதரர்கள் குர்ஆன் வசனங்களையும் மறுக்கத் தம்மைத் தயார்படுத்திக் கொண்டிருக்கின்றனரா?

உயிருக்குப் பயந்து உதவியாளரைக் கேட்டவரா?

அல்லாஹுதஆலா மூஸா நபியுடன் நேரடியாக உரையாடிச் சில அற்புதங்களையும் கொடுத்து ஃபிர்அவ்னிடம் சென்று பிரச்சாரம் செய்யச் சொல்கின்றான்.

அப்போது மூஸா நபி;
அ(தற்க)வர், “எனது இரட்சகனே! நிச்சயமாக நான் அவர்களில் ஒருவனைக் கொலை செய்து விட்டேன். அதனால் அவர்கள் என்னைக் கொலை செய்து விடுவார்கள் என நான் அஞ்சுகின்றேன்” என்று கூறினார். (28:33) என்று கூறுகின்றார்.

அல்லாஹ்வே நேரடியாக உத்தரவிடும் போது என்னை அவர்கள் கொன்று விடுவார்கள் என்ற அச்சத்தை மூஸா நபி வெளிப்படுத்துகின்றார்களே! இது சரியா? சாதாரணமாக எமது இளம் உலமாக்களே ஆபத்து நிறைந்த களங்களுக்குச் சென்று தஃவாச் செய்கின்றனர். ஒரு தீவிரவாதக் குழுத் தலைவனின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டுச் சாதாரண ஒரு தீவிரவாதி வெடிகுண்டுடன் போய் எதிரிகளுடன் மோதி தன்னைத் தானே அஞ்சாமல் அழித்துக்கொள்ளும் போது, அல்லாஹ் கூறும் போது என்னைக் கொன்று விடுவார்கள் என்று தனது அச்சத்தை வெளிப்படுத்துகின்றாரே! அது சரியாக இருக்குமா? அப்படியே கொல்லப்பட்டால் கூடச் சுவனம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இவருக்கு இல்லையா? அல்லாஹ்வின் பாதையில் உயிரைத் தியாகம் செய்ய ஏன் ஒரு நபி தயங்க வேண்டும்? என்றெல்லாம் கேள்வி எழுப்பி, இந்தக் குர்ஆன் கூறும் சம்பவத்தையும் நிராகரிக்கப் போகின்றனரா?

இவர்கள் ஹதீஸ்களை மறுக்கும் இதே பாணியில் சிந்தித்தால், ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மட்டுமல்ல; குர்ஆன் கூறும் பல சம்பவங்களையும் மறுக்கும் மனநிலைதான் சாதாரண மக்களிடம் ஏற்படும். வழிகெட்ட முறையில் அணுகி, ஆதாரபூர்வமான ஹதீஸ்களையும் நிராகரித்து, குர்ஆனையும் நிராகரிக்கும் நிலைக்குச் செல்வதா? குர்ஆனையும், ஹதீஸையும் நிராகரிக்காமல் இணக்கப்பாட்டைக் கண்டு இரண்டையும் ஏற்கும் வழியில் செல்வதா? முரட்டுப் பிடிவாதமும், போலி சுய கௌரவமும் பார்த்து தனி நபர் மோகத்தில் வழிகேட்டைத் தேர்ந்தெடுப்பதா?

கடந்த கால ஹதீஸ் கலை மேதைகள் இந்த ஹதீஸை நியாயமான காரணங்களால் ஏற்றது போல் நாமும் ஏற்று நல்வழி செல்வதா? எனப் பொது மக்கள் நிதானமாகச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

மூஸா நபி மரணத்தை வெறுத்தால் கூட இந்த ஹதீஸை மறுக்க முடியாது என்பதை இதிலிருந்து அறியலாம். எனினும் மூஸா நபி மரணத்தை வெறுக்கவில்லை என்றுதான் இந்த ஹதீஸ் கூறுகின்றது. இது குறித்து அடுத்த இதழில் இன்னும் வரும்.

இன்ஷா அல்லாஹ்!

Saturday, November 21, 2009

மூஸா நபியும், மலக்குல் மௌத்தும் (தொடர்-1)

எழுதியவர்: மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

குறிப்பு: சகோதரர் பீஜே அவர்கள் தனது தர்ஜமாவில் மறுத்துள்ள நான்கு ஹதீஸ்கள் தொடர்பான உண்மை நிலையை விளக்கும் எண்ணத்துடன்தான் ‘மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள்’ தொடரை நாம் எழுதினோம். அதன் முதல் கட்டமாக எழுதப்பட்ட சூனியம் தொடர்பான ஹதீஸ் குறித்த எமது தொடர்தான் முற்றுப் பெற்றது. அடுத்த பகுதியை நாம் இப்போது ஆரம்பித்துள்ளோம்.

சகோதரர் பீஜே அவர்கள் இது வரை தான் செய்த தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்க்கப் போவதாக அறிவித்துள்ளார். இந்த முடிவு வரவேற்கத்தக்கது. எனினும், எனது பெயரையும் குறிப்பிட்டு நாம் தனிப்பட்ட விமர்சனம் செய்ததால்தான் அவரும் தனி நபர் தாக்குதலில் ஈடுபடும் நிலை ஏற்பட்டதாகக் கூறுவதில் நமக்கு உடன்பாடு இல்லை. என்னைப் பொறுத்தவரை நான் தனிப்பட்ட விமர்சனம் செய்யவில்லை. கருத்து விமர்சனம்தான் செய்துள்ளேன். தனிப்பட்ட விமர்சனத்தில் நான் ஆர்வம் காட்டவும் இல்லை. அவரது ‘இஸ்மாயில் ஸலபிக்கு மறுப்பு தொடர் மூன்று, நான்கு என்பவற்றுக்கு நான் எழுதிய மறுப்பைக் கூட இணையத்திற்கு அனுப்பவில்லை. தொடர்ந்தும் நாகரிகமான முறையில் கருத்து விமர்சனம் செய்யப்படுவதை நான் வரவேற்கின்றேன். இந்த அடிப்படையில் ‘மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள்’ பகுதி இரண்டை உங்கள் முன் வைக்கின்றோம். இன்ஷா அல்லாஹ் ஏற்கனவே அவர் முன் வைத்துள்ள பால்குடி ஹதீஸ் உட்பட அனைத்துக்கும் விரிவான விளக்கமளிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மூஸா நபியும், மலக்குல் மௌத்தும் (தொடர்-1)

இது வரை நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதாக வரும் ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்பட்டதல்ல என்பது குறித்து விபரித்தோம். இதே போன்று மற்றும் பல ஹதீஸ்களும் பல்வேறுபட்ட தவறான காரணங்களைக் காட்டி மறுக்கப்படுகின்றன. அவ்வாறு மறுக்கப்படும் அறிவிப்புக்களில் மூஸா நபியும், மலக்குல் மௌத்தும் சம்பந்தப்பட்ட ஹதீஸும் ஒன்றாகும்.

ஹதீஸும் கவாரிஜ்களும்:
இந்த ஹதீஸ் குறித்த சர்ச்சைக்குள் நாம் நுழையும் முன்னர் மற்றுமொறு விடயத்தை நினைவூட்டுவது நல்லது எனக் கருதுகின்றேன். வழிகெட்ட பல பிரிவினரும் ஹதீஸ்களை மறுத்துள்ளனர். அவர்கள் ஹதீஸை மறுப்பதற்குக் கூட குர்ஆனின் சில வசனங்களையும், பகுத்தறிவு வாதங்களையும் முன்வைத்தே மறுத்தனர். வெறுமனே காரண-காரியம் எதையும் காட்டாமல் அவர்கள் மறுக்கவில்லை.

கவாரிஜ்கள், “நரகம் சென்ற முஸ்லிம்கள் மீண்டும் சுவனம் நுழைவிக்கப்படுவர்” என்ற கருத்தில் வரும் ஹதீஸ்களை மறுத்தனர். இவற்றைச் சும்மா அவர்கள் மறுக்கவில்லை, குர்ஆன் வசனங்கள் சிலவற்றைத் தவறாக விளங்கித்தான் மறுத்தார்கள். இதனை ஸஹீஹ் முஸ்லிமில் இடம்பெறும் பின்வரும் அறிவிப்பு உறுதி செய்கின்றது.

‘நான் கவாரிஜிகளின் கருத்தால் தாக்கப்பட்டிருந்தேன். நாங்கள் சிலர் ஹஜ்ஜுக்காகப் புறப்பட்டோம். நாம் மதீனாவைக் கடந்து செல்லும் போது ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் மக்களுக்கு ஹதீஸ்களைக் கூறிக்கொண்டிருந்தார். அவர் (நரகத்திலிருந்து வெளியேற்றப்படும்) நரகவாதிகள் குறித்து நினைவூட்டிய போது நான் அவரைப் பார்த்து, ‘அல்லாஹ்வின் தூதரின் தோழரே! யாரை நீ நரகில் நுழைவித்தாயோ, அவரை நிச்சயமாக நீ கேவலப்படுத்தி விட்டாய் என அல்லாஹ் கூறுகின்றான். அதே போன்று ‘நரகவாதிகள் அதிலிருந்து வெளியேற முயற்சிக்கும் போதெல்லாம் மீண்டும் அதில் போடப்படுவார்கள்’ என்றும் குர்ஆனில் கூறுகின்றான். அதற்கு மாற்றமாக நீங்கள் என்ன கூறிக்கொண்டிருக்கின்றீர்கள்?’ எனக் கேட்டேன். அதற்கவர், ‘நீ குர்ஆனை ஓதுகின்றாயா?’ எனக் கேட்டார். நான், ‘ஆம்!’ என்று கூறினேன். அதற்கவர், ‘நீ மகாமும் மஹ்மூத்’ பற்றி அதில் ஓதியுள்ளாயா?’ எனக் கேட்டார். நான் ‘ஓதியுள்ளேன்’ என்றேன். புகழத் தக்க அந்த இடத்தால் நரகிலிருந்து அல்லாஹ் வெளியாக்க நாடுபவர்களை வெளியேற்றுவான்…’ என்று விளக்கமளித்தார்கள். (யஸீதுல் பகீர், ஸஹீஹ் முஸ்லிம்)

‘நீ யாரை நரகில் நுழைவித்தாயோ அவர்களை நீ இழிவுபடுத்தி விட்டாய்’ என்ற குர்ஆன் வசனத்திற்கு “நரகம் சென்றவர்கள் மீண்டும் சுவனம் நுழைவிக்கப்படுவார்கள்’ என்ற ஹதீஸ் முரண்படுகின்றது. எனினும் அவர்களது அந்த அணுகுமுறை வழிகெட்ட அணுகுமுறையாக இருந்ததே தவிர ‘ அஹ்லுஸ் ஸுன்னா’வின் நிலைப்பாடாக இருக்கவில்லை.

இவ்வாறே, ‘நாம் நபிமார்கள்; நாம் யாருக்கும் வாரிசுகளாகவும் மாட்டோம்; நமது சொத்து வாரிசு சொத்தாகப் பங்கிடப்படவும் மாட்டாது’ என்ற கருத்தில் நபி(ஸல்) அவர்களின் பல அறிவிப்புக்கள் அமைந்திருக்கின்றன.

ஃபாத்திமா(ரலி)அவர்கள், நபி(ஸல்) அவர்கள் விட்டுச் சென்ற சொத்தில் பங்கு கேட்ட போது, இந்த ஹதீஸைக் கூறித்தான் ஃபாத்திமா(ரலி)அவர்களுக்குப் பங்கு கொடுக்க அபூபக்கர்(ரலி) அவர்கள் மறுத்து விட்டார்கள்.

எனினும் ஷீஆக்கள், இந்த ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி மறுத்தனர். (அவர்கள் இதை மட்டுமல்ல, மற்றும் பல்லாயிரம் ஹதீஸ்களைக் காரணம் கூறாமலேயே மறுக்கின்றனர்.)

”அவர் எனக்கு வாரிசாகவும், யஃகூபின் சந்ததியினருக்கு வாரிசாகவும் இருப்பார். எனது இரட்சகனே! அவரைப் பொருந்திக் கொள்ளப்பட்டவராக நீ ஆக்குவாயாக!” (என்றும் பிரார்த்தித்தார்.)’ (19:6)

என்ற வசனங்களை ஆதாரங் காட்டி நபிமார்களின் குடும்பத்திற்கும் வாரிசுரிமை உள்ளது. அபூபக்கர்(ரலி) அவர்கள் ஃபாத்திமா(ரலி)அவர்கள் மீது கொண்ட வெறுப்புக் காரணமாகத்தான் இந்தக் குர்ஆன் வசனங்களுக்கு முரணான ஹதீஸை இட்டுக் கட்டினார் என்றும் அவதூறு கூறினர்.

இவ்வாறே, கவாரிஜ்கள் எனும் வழிகேடர்கள் பகுத்தறிவு வாதத்தை முன்வைத்துப் பல ஹதீஸ்களை மறுத்துள்ளனர். மாதத் தீட்டுடன் உள்ள பெண்கள் அக்காலத்தில் விடுபடும் நோன்பைக் கழா செய்ய வேண்டும், தொழுகையைக் கழாச் செய்ய வேண்டியதில்லை. இதுதான் சட்டம். இது குறித்துப் பல ஹதீஸ்கள் பேசுகின்றன. ஆனால் கவாரிஜ்கள், ‘நோன்பை விடத் தொழுகை முக்கியமான வணக்கம். நோன்பைக் கழாச் செய்ய வேண்டும் என்றால் அதை விட முக்கியமான தொழுகையைக் கழாச் செய்யாமல் விட முடியுமா?’ என்ற பகுத்தறிவுக் கேள்வி மூலம் ஹதீஸை மறுத்தனர்.

இதனைப் பின்வரும் அறிவிப்பு உணர்த்துகின்றது:
ஒரு பெண்மணி ஆயிஷா(ரலி) அவர்களிடம் ‘மாதத் தீட்டுடைய பெண் நோன்பைக் கழாச் செய்கிறாள். தொழுகையைக் கழாச் செய்யக் கூடாது. இது ஏன்?’ என்று கேட்டாள். அதற்கு ஆயிஷா(ரலி)அவர்கள், ‘நீ ஒரு கவாரிஜீயப் பெண்ணா?’ எனக் கேட்டார்கள். அதற்கவள் ‘அப்படி இல்லை. இருப்பினும் (அறிந்துகொள்வதற்காகக்) கேட்கிறேன்’ என்றாள். அதற்கு ஆயிஷா(ரலி)அவர்கள், நபி(ஸல்) அவர்கள் காலத்தில் அது எமக்கும் ஏற்பட்டது. நாம் நோன்பைக் கழாச் செய்ய ஏவப்பட்டோம். தொழுகையைக் கழாச் செய்ய ஏவப்படவில்லை’ என்று கூறினார்கள்.

மேற்படி அறிவிப்பு புகாரி, முஸ்லிம் உட்படப் பல்வேறு கிரந்தங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, ‘ஹதீஸை மறுத்தல்’ என்ற இந்த வழிகேடு சமூகத்தில் ஊடுருவி வளர்ந்து விடக் கூடாது. இந்தக் கோணத்தில் ஆய்வு செய்தால் ஹதீஸ்களை மட்டுமல்ல, எதிர்காலத்தில் குர்ஆன் வசனங்களைக் கூட விஞ்ஞானத்திற்கு முரண்படுகிறது, பகுத்தறிவுக்கு முரண்படுகிறது என்று மறுக்கும் நிலைக்குக் கொண்டு சென்று விடும் என்பதால், இது குறித்து விவரிக்க வேண்டியுள்ளது. அதிலும் குறிப்பாக தமிழுலகில் தவ்ஹீத் வட்டாரத்தில்தான் இந்த நோய் பரவி வருகிறது. இந்த வகையில் தவ்ஹீத் வட்டாரத்தைச் சென்றடையும் ஊடகத்தின் மூலமே இந்தத் தெளிவை வழங்கும் தேவை உள்ளது. இந்தத் தவறான கருத்து தமிழுலகில் அறிஞர் பிஜே அவர்கள் மூலமாகத்தான் முன்வைக்கப்பட்டது. அவர் முன்வைக்கும் வாதத்தை அவரது நூலிலிருந்தே எடுத்துக் காட்டி விளக்கம் அளிக்கும் தேவை இருப்பதால் அவரது பெயரையும், வாதங்களையும் அதிலுள்ள முரண்பாடுகளையும், அவர் ஹதீஸ்களில் சில இடைச் செறுகல்-நீக்கம் செய்திருப்பதையும் சுட்டிக் காட்டி விளக்குவது அவசியமாகின்றது என்பதை வாசகர்கள் கவனத்திற்கொள்ளவும்.

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் குறித்து அவர் தனது தர்ஜமாவில் 1304 (நான்காம் பதிப்பு) இல் குறிப்பிடும் போது, ‘ஒரு ஹதீஸ் எந்த வகையிலும் குர்ஆனுடன் அறவே ஒத்துப் போகவில்லை. திருக்குர்ஆனுடன் நேரடியாக மோதுவது போல் அமைந்துள்ளது. இரண்டையும் எந்த வகையிலும் இணைத்து விளக்கம் கூற முடியாது என்றால் அது போன்ற சந்தர்ப்பங்களில் ஹதீஸை ஏற்றுக் குர்ஆனை மறுத்து விடாமல், குர்ஆனை ஏற்று அந்த ஹதீஸை மட்டும் நிறுத்தி வைப்பதுதான் நேர்மையான பார்வையாகும். இந்த நேரத்தில் மட்டும் இது போன்ற ஹதீஸ்களை மட்டும் நாம் விட்டுவிட வேண்டும் ‘ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதில் பல விடயங்களை ஒப்புக்கொள்கிறார் :

** குர்ஆனுக்கு ஹதீஸ் நேரடியாக முரண்பட வேண்டும். நாமாகச் சுற்றி வளைத்து முரண் கற்பிக்கும் நிலை இருக்கக் கூடாது.

** எந்த வகையிலும் குர்ஆனையும், குறித்த ஹதீஸையும் இணைத்து விளக்கம் கூற முடியாமல் இருக்க வேண்டும். (இந்த வகையில் இவர் மறுக்கும் ஹதீஸ்களுக்கு எந்த வகையிலும் விளக்கம் கூற முடியாத நிலையில்தான் உள்ளதா என்பது நோக்கத்தக்கது)

** இந்த நிலை இருந்தால், அந்த ஹதீஸை மட்டும் நிறுத்தி வைக்க வேண்டும். (மறுக்க வேண்டும் என்பது அல்ல. அது குறித்து மௌனம் காக்க வேண்டும்.)

இவர், தான் எழுதியதற்கு மாற்றமாக குறித்த ஹதீஸை மறுக்கிறார்; ஏற்பவர்கள் வழிகேட்டில் இருப்பதாகக் கூறுகிறார்; விவாதத்திற்கு அழைக்கிறார் என்றால், இதுதான் நிறுத்தி வைக்கும் நேர்மையான பார்வையா? என நடுநிலையாகச் சிந்தித்துப் பாருங்கள்!

மூஸா நபியும், மலக்குல் மௌத்தும்:

صحيح البخاري ت – 3 / 310
1339
حَدَّثَنَا مَحْمُودٌ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ ابْنِ طَاوُسٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ أُرْسِلَ مَلَكُ الْمَوْتِ إِلَى مُوسَى عَلَيْهِمَا السَّلَام فَلَمَّا جَاءَهُ صَكَّهُ فَرَجَعَ إِلَى رَبِّهِ فَقَالَ أَرْسَلْتَنِي إِلَى عَبْدٍ لَا يُرِيدُ الْمَوْتَ فَرَدَّ اللَّهُ عَلَيْهِ عَيْنَهُ وَقَالَ ارْجِعْ فَقُلْ لَهُ يَضَعُ يَدَهُ عَلَى مَتْنِ ثَوْرٍ فَلَهُ بِكُلِّ مَا غَطَّتْ بِهِ يَدُهُ بِكُلِّ شَعْرَةٍ سَنَةٌ قَالَ أَيْ رَبِّ ثُمَّ مَاذَا قَالَ ثُمَّ الْمَوْتُ قَالَ فَالْآنَ فَسَأَلَ اللَّهَ أَنْ يُدْنِيَهُ مِنْ الْأَرْضِ الْمُقَدَّسَةِ رَمْيَةً بِحَجَرٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَوْ كُنْتُ ثَمَّ لَأَرَيْتُكُمْ قَبْرَهُ إِلَى جَانِبِ الطَّرِيقِ عِنْدَ الْكَثِيبِ الْأَحْمَرِ


pj-tharjama

( பக் 1307-1308 , பீ.ஜே வின் திருக்குர்ஆன் தர்ஜுமா, நான்காம் பதிப்பு )

மேற்படி அறிவிப்பில் முக்கியமான ஒரு பகுதியை மறைத்து விட்டே அவர் மொழியாக்கம் செய்துள்ளார். வேண்டுமென்றே மறைத்து விட்டுத்தான் செய்தார் என்று இனித் துணிந்து கூறலாம். ஏனெனில், ஜம்இய்யா வெளியிட்ட ‘இதுதான் தவ்ஹீத்’ என்ற நூலின் 129 பக்கத்தில் ஒரு ஹதீஸை முபாறக் (ஸலபி) மொழி பெயர்க்கும் போது, சில பகுதிகளை விட்டு விட்டு மொழி பெயர்த்துள்ளார். அதில் தெளிவாகவே ‘ …’ என்று கூறினார் என்று போடப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் ஹதீஸில் இன்னும் சில பகுதிகள் இருக்கின்றன என்பதுதான். அப்படியிருந்தும் திட்டமிட்டு ஹதீஸின் ஒரு பகுதியை மறைத்து விட்டதாக பீஜே எம் மீது குற்றம் சாட்டினார். இப்போது இவர் மொழி பெயர்த்த ஹதீஸில் இன்னும் இருக்கின்றது என்ற குறியீடு இல்லாமலேயே அவர் இருட்டடிப்புச் செய்த பகுதியைப் பாருங்கள்!

‘…அப்படியானால் இப்பொழுதே தயார் எனக் கூறி விட்டு அல்லாஹ்விடம் (பைத்துல் முகத்தஸ் எனும்) புனிதத் தலத்திலிருந்து கல்லெறியும் தூரத்திலுள்ள இடத்தில் தம் உயிரைக் கைப்பற்றுமாறு வேண்டிக் கொண்டார்கள். மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறும் போது, ‘நான் மட்டும் இப்போது அங்கு (பைத்துல் முகத்தஸில்) இருந்தால் உங்களுக்கு அந்தச் செம்மண் குன்றுக்கருகில் உள்ள பாதையிலிருக்கும் மூஸா(அலை) அவர்களது கப்ரைக் காட்டியிருப்பேன்’ என்று குறிப்பிட்டார்கள்.’

மேற்படி ஹதீஸின் முக்கிய பகுதியை மூடி மறைத்து விட்டு, இந்த ஹதீஸை மறுக்கும் மனநிலைக்கு மக்களைக் கொண்டு வர முயற்சிக்கின்றார். இந்த ஹதீஸில் ஏற்படுத்தப்படும் முக்கிய சந்தேகத்திற்குத் தீர்வாக அமையும் ஹதீஸின் முக்கிய செய்தியை இருட்டடிப்புச் செய்து இந்த ஹதீஸை மறுக்க முனைந்துள்ளார் என்பது இதிலிருந்து உறுதியாகின்றது.

குறிப்பு: தற்பொழுது அவரது வெப்தளத்தில், அவர் இந்த ஹதீஸை முழுமையாக மொழிப்பெயர்த்து வெளியிட்டிருந்தாலும், முன்பு அவர் தனது தர்ஜுமாவில் முக்கிய பகுதியை மறைத்து அதைப் படித்தவர்களின் மனதில், இந்த ஹதீஸை மறுக்கும் மனோ நிலையை உருவாக்கியுள்ளார்.

மரணமும், நபிமார்களுக்குரிய சட்டமும்:
பொதுவாக ஹதீஸ்களை மறுப்போர் அடிப்படையான ஒரு விடயத்தில் முதல் தவறு விடுவர். அந்தத் தவறில் இருந்து நியாயமான சில வாதங்கள் முன்வைப்பர். அந்த வாதங்களால் மக்கள் மயக்கப்படுவர். பொதுவான ஒரு சட்டத்தைக் குறிப்பிட்ட ஒரு சாராருக்குரிய அல்லது நபருக்குரிய சட்டத்துடன் மோத விட்டுத் தமது நியாயத்தை நிறுவ முற்படுவர். உதாரணமாகச் செத்தவைகள் உண்ணத் தடை விதிக்கப்பட்டுள்ளன என்பது பொதுவான சட்டம். மீன் இறந்தாலும் சாப்பிடலாம் என்பது தனியான சட்டம். செத்தவற்றை உண்ணக் கூடாது என்ற பொதுச் சட்டத்திலிருந்து நீர் வாழ் உயிரினங்கள் விதிவிலக்களிக்கப்பட்டுள்ளன என இதைப் புரிந்துகொள்ளாவிட்டால் குர்ஆனும், ஹதீஸும் முரண்படுவதாகத்தான் தென்படும். இந்த அடிப்படையை மனதில் கொண்டு பின்வரும் செய்தியை வாசிக்கவும்.

மரணம் வந்தால் ஒரு நிமிடம் முற்படுத்தப்படவும் மாட்டாது, பிற்படுத்தப்படவும் மாட்டாது என்பது பொதுச் சட்டம். ஆயினும், நபிமார்கள் மரணத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெற்றுள்ளனர்.

மரணமும், நபிமார்களுக்குரிய சட்டமும்

‘இம்மை-மறுமை (இரண்டுக்கும்) இடையில் (மறுமையைத்) தேர்ந்தெடுக்காத வரையில் எந்த நபியும் மரணிப்பதில்லை என்பதை நான் செவியுற்றிருந்தேன். நபி(ஸல்) அவர்கள், தான் மரணித்த அவர்களது அந்த நோயின் போது, ‘அல்லாஹ் அருள் புரிந்தவர்களுடன்…’ என்ற ஆயத்தை ஓதினார்கள். அப்போது, நபி(ஸல்) அவர்கள் மரணத்தைத் தேர்ந்தெடுத்து விட்டார்கள் என நான் நினைத்தேன்’ என ஆயிஷா(ரலி)அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஸஹீஹ் புகாரி)

முஅதா

‘(மரணத்தைத்) தானாகத் தேர்ந்தெடுக்காத வரையில் எந்த நபியும் மரணிப்பதில்லை’ என நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்.’ (முஅதா)

நபி(ஸல்) அவர்கள், தான் மரணத்தைத் தேர்ந்தெடுத்தது குறித்துக் கூறும் போது ‘ஒரு அடியாரிடம் இம்மையும், அதன் அலங்காரமும் காட்டப்பட்டது. அவரோ மறுமையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்’ எனக் கூறினார்கள். (ஹாகிம்)

ஹாகிம்

இந்தச் செய்தியை நபி(ஸல்) அவர்கள் கூறிய போது நபி(ஸல்) அவர்கள் தனது நிலை குறித்துத்தான் கூறுகின்றார்கள் என்பதை அபூபக்கர்(ரலி)அவர்கள் மட்டுமே உடனே புரிந்து கொண்டார்கள்.

எனவே நபிமார்களின் மரணத்திற்கும், பொதுவானவர்களின் மரணத்திற்குமிடையில் வேறுபாடு உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்! அவர்கள் மரணத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெற்றுள்ளனர்.

மனித உருவில் மலக்குகள்:

அடுத்ததாக, மலக்குகள் சில போது மனித உருவில் வருவார்கள். வந்தவர் தன்னை மலக்கு என்று கூறும் வரை அவர் வானவர் என்ற உண்மை பார்ப்பவருக்குத் தெரியாமல் இருக்கலாம் என்பதைக் குர்ஆன் உறுதி செய்கின்றது.

(1) மர்யம்(அலை) அவர்களிடம், ஜிப்ரீல்(அலை) அவர்கள் மனித உருவில் வருகின்றார்கள். கன்னிப் பெண்ணான அவர்கள், வந்தவர் வானவர் என்று அறியாமல் கெட்ட நோக்கத்தில் ஒரு ஆண் தன்னை அணுகுவதாக எண்ணிப் பாதுகாவல் தேடுகின்றார்கள். அதன் பின்னர்தான் வந்தவர், தான் ஒரு வானவர் என்ற உண்மையைக் கூறுகின்றார்.
பார்க்க: (அல்குர்ஆன் 19:17-22)

(2) இப்றாஹீம்(அலை) நபியிடம் மலக்குகள் மனித வடிவில் வருகின்றனர். அவர் அவர்களுக்காக கொழுத்த காளைக் கன்றை அறுத்து விருந்து வைக்கிறார். அவர்கள் உண்ணாமல் இருப்பதைக் கண்டு அச்சமுறுகின்றார். அதன் பின்னர்தான் வந்தவர்கள், தாம் வானவர்கள் என்ற உண்மையைக் கூறுகின்றனர்.
பார்க்க: அல்குர்ஆன் 51:24-30, 15:51-56, 11:69-76, 39:31-32.

(3) இதே வானவர்கள், லூத்(அலை)நபியின் வீட்டிற்குச் செல்கின்றனர். அவரது சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள், மலக்குகளை மனிதர்கள் என எண்ணி தன்னினச் சேர்க்கைக்கு அவர்களைப் பயன்படுத்தப் பலவந்தப்படுத்துகின்றனர். லூத்(அலை)நபி அந்தக் கெட்டவர்களிடம் கெஞ்சிக் கேட்டும், அவர்கள் தமது தவறை விடுவதாக இல்லை.

எனவே, விருந்தாளிகளை விட்டு விட்டுத் தமது மகள்களைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்கின்றனர். அவர்கள் அதற்கும் இணங்காத போது அவரது மனவேதனையை அல்லாஹ்விடம் முறையிடுகின்றார்கள். அதன் பின்னர்தான் வந்தவர்கள் தாம் வானவர்கள் என்றும், இந்த சமுதாயத்தை அல்லாஹ்வின் உத்தரவுப் படி அழிக்க வந்திருப்பதாகவும் கூறுகின்றனர்.

பார்க்க – அல்குர்ஆன் 15:67-74, 11:77-82, 29:33-34.

இறுதிக் கட்டத்தில் அவர்களாகக் கூறும் வரை மேற்குறிப்பிட்ட நபிமார்களுக்கே வந்தவர்கள் வானவர்கள் என்பது தெரியாமல் இருந்துள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.

இந்த வகையில் மூஸா(அலை)நபியிடம் மனித உருவில் வந்த வானவரை அவர் வானவர் என்று தெரிந்தோ அல்லது தெரியாமலோ மூஸா(அலை) தாக்கினார் என்பது மறுக்கக் கூடிய அம்சம் இல்லை என்பதை அறியலாம்.

அடுத்து ‘அனுமதியின்றி ஒருவர் வீட்டிற்குள் உற்றுப் பார்த்தால், அவரது கண்ணைக் குத்துங்கள்!’ எனக் கூறி, உற்றுப் பார்ப்பதன் தீமையை நபி(ஸல்) அவர்கள் உணர்த்துகின்றார்கள். இந்த வகையில் தனது வீட்டிற்குள் அனுமதியின்றி வந்தவர் மீது மூஸா (அலை) கடுமையாக நடந்துகொண்டுள்ளார்கள். அத்துடன் தனது உயிரைப் பாதுகாப்பதற்காகப் போராடுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. வந்தவர் வானவர் என்று அறியாமல் தன் உயிரைக் காத்துக்கொள்வதற்காக மூஸா(அலை)நபி வந்தவருக்கு அடித்தால், அது மார்க்க ரீதியில் மறுக்கப்படக் கூடிய அம்சம் அல்ல என்பதை அறியலாம்.

இந்த அடிப்படையைக் கருத்திற்கொள்ளாமல் இந்த ஹதீஸைப் பல்வேறுபட்ட கேள்விகள் மூலம் மறுக்க முனைகின்றார் பீஜே அவர்கள். இவரது வாதங்களை ஏற்றால் குர்ஆன் கூறும் பல சம்பவங்களையும் இதே வாதத்தின் அடிப்படையில் நிராகரிக்க நேரிடும். இது குறித்து அடுத்த தொடரில் விரிவாக நோக்குவோம். இன்ஷா அல்லாஹ்!


Sunday, November 15, 2009

துல்ஹஜ் – 10, 11, 12, 13 ஆம் தினங்களில் வழங்கப்பட வேண்டிய உழ்ஹிய்யா ஒரு விளக்கம்

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

நபி இப்ராஹீம்(அலை) அவர்களின் மகன் இஸ்மாயில்(அலை) அவர்களை அறுத்துப் பலியிடுமாறு அல்லாஹ் கனவின் மூலம் இப்ராஹீம்(அலை) அவர்களுக்குக் கட்டளையிட்டான். இறைவனின் இக்கட்டளையை நிறைவேற்ற முற்பட்டபோது அல்லாஹ் அதனைத் தடுத்து ஓர் ஆட்டைப் பலியிடுமாறு கட்டளையிட்டான். இவர்களின் இந்தத் தியாகத்தை நினைவு கூறும் வண்ணம் மற்றவர்களும் ஈதுல் அழ்ஹா தினத்தில் பிராணியைப் பலியிட வேண்டுமென அல்லாஹ் கட்டளையிடுகிறான். அல்குர்ஆனில் பின்வருமாறு இந்த விபரங்கள் கூறப்பட்டுள்ளன.

“எனவே, சகிப்புத்தன்மை மிக்க ஒரு மகன் குறித்து அவருக்கு நாம் நன்மாராயம் கூறினோம்.

அவருடன் இணைந்து செயற்படும் பருவத்தை (இஸ்மாயீலாகிய) அவர் அடைந்த போது, “என்னருமை மகனே! உன்னை நான் அறுப்பதாக நிச்சயமாகக் கனவில் கண்டேன். உனது அபிப்பிராயம் என்ன?” எனக் கேட்டார். அ(தற்க)வர், “என்னருமைத் தந்தையே! உங்களுக்கு ஏவப்பட்டதை நீங்கள் செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) என்னைப் பொறுமையாளர்களில் நீங்கள் கண்டுகொள்வீர்கள்!” என்று கூறினார்.

அவ்விருவரும் (அல்லாஹ்வுக்குக்) கட்டுப்பட்டனர். இன்னும் அவர் (மகனாகிய) இவரை நெற்றி நிலத்தில் படக் கிடத்திய போது,

இப்றாஹீமே! நிச்சயமாக நீர் கனவை உண்மைப்படுத்திவிட்டீர் என நாம் அவரை அழைத்தோம். நிச்சயமாக நாம் இவ்வாறே நன்மை செய்வோருக்குக் கூலி வழங்குவோம்.

நிச்சயமாக இது ஒரு தெளிவான சோதனையேயாகும்.

இவருக்குப் பகரமாக, மகத்தான ஒரு பலிப் பிராணியை ஆக்கினோம்.

பின்வருவோரில் அவர் மீது (புகழை) விட்டு வைத்தோம்”. (37:101-108)

குர்பானியின் நோக்கம் இறையச்சம் என்பதைத்தவிர வேறில்லை என்பதைப் பின்வரும் அல்குர்ஆன் வசனங்கள்; தெளிவு படுத்துகின்றன.

“குர்பானியின் மாமிசமோ, அவற்றின் இரத்தமோ அல்லாஹ்வை அடைவதில்லை. எனினும், உங்களின் இறையச்சமே அவனை அடைகிறது”. (22:37)

உயர்ந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட உழ்ஹிய்யாவை நிறைவேற்றுவதன் அவசியத்தை மற்றுமொரு திருமறை வசனம் எடுத்துக் கூறுவதுடன் நபி(ஸல்) அவர்களைக் குர்பானி கொடுக்குமாறும் கட்டளையிடுகிறது.

“உமது இறைவனைத் தொழுது குர்பானி கொடுப்பீராக” (108:02)

நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் இக்கட்டளைக்கு அடிபணிந்து தமது வாழ்வில் குர்பானி எனும் அமலை நிறைவேற்றி யுள்ளார்கள்.

“நபி(ஸல்) அவர்கள் கொம்புள்ள கறுப்புக் கலந்த இரண்டு வெள்ளை நிற ஆடுகளைத் தன் கரத்தால் அறுத்துப் பலியிட்டார்கள்”.
(அனஸ்(ரலி) – புகாரி, முஸ்லிம்)

இந்த வகையில் நபி(ஸல்) அவர்களின் உம்மத்தினரும் இக்கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

குர்பானி கொடுப்பவர் செய்யக் கூடாதவை:
ஒருவர் குர்பானி கொடுப்பதாக முடிவு செய்துவிட்டால் அவர் துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை கண்டது முதல் குர்பானி கொடுக்கும்வரை நகம், முடி ஆகியவைகளை நீக்கக்கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்;
“உங்களில் ஒருவர் உழ்ஹிய்யாவை நிறைவேற்ற விரும்பினால் துல் ஹஜ் மாதம் தலைப்பிறை முதல் அதனை நிறைவேற்றும் வரை தனது முடி, நகம் என்பவற்றைக் களைவதைத் தவிர்த்துக்கொள்ளட்டும்.
(உம்மு ஸல்மா(ரலி), முஸ்லிம்)

குர்பானிப் பிராணிகள்:
ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய பிராணிகளையே அறுத்துப் பலியிட வேண்டும். இவை அல்லாத ஏனைய பிராணிகளை அறுத்துப் பலியிட்டால் “உழ்ஹிய்யா” நிறைவேறாது.

“ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் (ஆடு, மாடு, ஒட்டகம்) நாற்கால் பிராணிகளிலிருந்து அவர்களுக்கு அவன் உணவாக கொடுத்தவற்றின் மீது (அவற்றை அறுக்கும்போது) அல்லாஹ்வின் திருப்பெயரை அவர்கள் கூறுவதற்காக குர்பானியை நாம் ஏற்படுத்தினோம்”. (22:34)

பிராணியின் வயதெல்லை :
குர்பானி கொடுக்கப்பட வேண்டிய பிராணிகளில் ஒட்டகத்திற்கு ஐந்து வயதும், ஆடு, மாடுகளுக்கு இரண்டு வயதும் பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

“முஸின்னா”வைத் தவிர வேறு எதனையும் அறுக்காதீர்கள். அது கிடைக்க வில்லையானால் ஆறுமாதக் குட்டியைக் கொடுங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்”.
(ஜாபிர்(ரலி) – முஸ்லிம், அபூதாவூத், நஸஈ, இப்னுமாஜா, அஹ்மத் )

இங்கு “முஸின்னா” என்று கூறப்படும் வார்த்தை ஆடு மாட்டில் இரண்டு பல் முளைத்த பிராணிகளுக்கு பயன்படுத்தப் படுகின்றது. ஒட்டகம் ஐந்து வயது முடிந்தவுடனும், ஆடு, மாடு இரண்டு வயது முடிந்தவுடனும் இரண்டு பற்கள் வருவதால், ஒட்டகம் ஐந்து வயது, ஆடு, மாடு இரண்டு வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டுமெனக் கூறப்படுகின்றது.

“முஸின்னா” கிடைக்காவிட்டால் ஆறுமாதக் குட்டியாட்டை அறுப்பது இந்த ஹதீஸில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் பிறிதொரு ஹதீஸின் மூலம் அது ஒரு தோழருக்கு மாத்திரம் வழங்கப்பட்ட சலுகை என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது.

“இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்கு) திரும்பிச்சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்துகொள்வாரோ அவர் நமது வழியில் நடந்துகொண்டார். யார் (தொழுமுன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்தினருக்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியின் நன்மை எதுவும் கிடையாது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூபுர்தா(ரலி) அவர்கள் (தொழு முன்) அறுத்துவிட்டார். அவர் (நபி(ஸல்) அவர்களிடம்) என்னிடத்தில் முஸின்னாவை விட சிறந்த ஆறுமாதக் குட்டியுள்ளது (அதைக் குர்பானி கொடுக்கலாமா) என்றார். முன் அறுத்ததிற்கு இதைப் பகரமாக்குவீராக (அறுப்பீராக). எனினும், உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இதை (குர்பானிகொடுக்க) அனுமதியில்லை” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (பரா(ரலி) – புகாரி, முஸ்லிம்)

இந்த ஹதீஸில் நபித்தோழர் “முஸின்னா”வை விட சிறந்த ஆறுமாதக்குட்டி உள்ளது என்ற கூற்று நபி(ஸல்) அவர்கள் “முஸின்னா”வைத்தான் குர்பானி கொடுக்க கட்டளையிட்டுள்ளார்கள் என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. உமக்குத்தவிர வேறு எவருக்கும் இது அனுமதியில்லை என்ற நபி(ஸல்) அவர்களின் கட்டளையும் முஸின்னாவைத் தான் கொடுக்கவேண்டும் என்பதை மிகத்தெளிவாக விளக்குகின்றது.

அறுத்துப் பலியிடத் தகாதவைகள்:
உழ்ஹிய்யாக் கொடுக்கப்படும் பிராணி குறையற்றுக் காணப்படல் வேண்டும்.

1) வெளிப்படையாகத் தெரியக்கூடிய நோய்
2) வெளிப்படையாகத் தெரியக்கூடிய குருடு
3) வெளிப்படையாகத் தெரியக்கூடிய ஊனம்
4) மிகவும் மோசமாக மெலிந்திருத்தல் போன்ற குறைகள் இருத்தல் கூடாது. (திர்மிதி)

அறுத்துப் பலியிடும் நேரம்:
ஹஜ்ஜுப் பெருநாள் சூரியன் உதயமாகி, பெருநாள் தொழுகையை நிறைவேற்றி முடித்தது முதல் அய்யாமுத் தஷ்ரீகின் கடைசி நாள் (துல்ஹஜ் மாதம் பதின்மூன்றாம் நாள்) வரை “உழ்ஹிய்யாவை” நிறைவேற்றலாம். பெருநாள் தொழுகைக்கு முன்னர் அறுக்கப்படுவது உழ்ஹிய்யாவாகக் கணிக்கப்பட மாட்டாது.

“நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில் “யார் இத்தொழுகையை நிறைவேற்றி விட்டுக் குர்பானி கொடுக்கின்றாரோ, அவர்தான் அக்கடமையை நிறைவேற்றியவராவார். யார் தொழுகைக்கு முன்னால் அறுக்கிறாரோ, அவர் கடமையை நிறைவேற்றியவராக மாட்டார்” என்று குறிப்பிட்டார்கள். (பரா(ரலி) – புகாரி)

குர்பானிப் பிராணிகளில் ஆணும், பெண்ணும்:
பெட்டை ஆடுகளையும், பசுக்களையும், கிடாய்களையும் முஸ்லிம்கள் வித்தியாசமாகவே பார்க்கின்றனர். சிலபகுதிகளில் பெட்டை ஆடுகள் சாப்பிடுவது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டது போன்று கருதுகின்றனர். சாதாரண நேரத்தில் பெட்டை ஆடுகளைச் சாப்பிடக் கூடாது எனக் கருதக் கூடியவர்கள் குர்பானி கொடுப்பதற்கு பெட்டை ஆடுகள் அறவே தகுதியற்றவை என்று நினைக்கின்றனர்.

இது பற்றி மார்க்கம் என்ன கூறுகிறது என்பதையும் நாம் அறிந்து கொள்வது அவசியம்.

உண்பதற்கு அனுமதிக்கப் பட்டவைகளில் கிடாயும், பெண்ணாடும், காளையும் பசுவும், சேவலும் கோழியும் சமமானவைதான் என்பதை முஸ்லிம்கள் முதலில் நம்ப வேண்டும். பறவைகளில் இதை ஏற்கக் கூடியவர்கள் கால்நடைகளில் மட்டும் ஏற்கத் தயங்குகின்றனர். குர்பானி கொடுப்பதற்குக் காளையும் கிடாயும்தான் தகுதியானவை என்று திருக்குர்ஆனிலும் கூறப்படவில்லை; நபி(ஸல்) அவர்களின் பொன்மொழிகளிலும் கூறப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், “ஜத்உ” (கன்று) என்று ஆண் பாலில் கூறப்பட்டுள்ளது போன்றே, “ஜத்அத்” என்று பெண் பாலிலும் கூறப்பட்டுள்ளது. எனவே, ஆண் கால்நடைகளைத்தான் உழ்ஹிய்யாக் கொடுக்க வேண்டும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

கூட்டுச் சேர்ந்து கொடுத்தல்:
உழ்ஹிய்யாவுக்காக அறுத்துப் பலியிடப்படும் பிராணி ஒட்டகம் அல்லது மாடாக இருப்பின் ஏழு நபர்கள் கூட்டாகச் சேர்ந்து கொடுக்க முடியும். என்பதைப் பின்வரும் நபிமொழி விளக்குகின்றது.

“ஹுதைபியா என்ற இடத்தில் நபி(ஸல்) அவர்களுடன் ஏழு பேர் சேர்ந்து ஓர் ஒட்டகத்தையும், ஏழு பேர் சேர்ந்து ஒரு மாட்டையும் நாங்கள் அறுத்துப் பலியிட்டோம்”
(ஜாபிர்(ரலி) – முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி)

குர்பானிப் பிராணி ஆடாக இருப்பின் ஒருவர் தமக்காகவும், தமது குடும்பத்தினருக்காகவும் ஓர் ஆட்டை அறுத்துப் பலியிட முடியும்.

“நபி(ஸல்) அவர்கள் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டு வந்தது என்று அபூ அய்யூப்(ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள், ஒருவர் தமக்கும் தமது குடும்பத்திற்கும் சேர்த்து ஒர் ஆட்டையே குர்பானி கொடுப்பார்.
(அதாஃ பின் யஸார்(ரலி) – திர்மிதி, இப்னு மாஜா முவத்தா)

அறுக்கும் முறை:
1) ஆடு-மாடுகளை ஒருக்கணித்து படுக்க வைத்து அறுக்க வேண்டும். (முஸ்லிம்)
2) ஒட்டகங்களை நிற்க வைத்து அறுக்க வேண்டும். (முஸ்லிம்)
3) அறுக்கும் போது “பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்” என்று கூறவேண்டும். (புகாரி)

தாமே அறுப்பது நபிவழி:
உழ்ஹிய்யாக் கொடுப்பவர் அறுக்கத் தெரிந்தவராய் இருந்தால் – தனது பிராணியைத் தானே அறுத்தல் சுன்னத்தாகும்.

நபியவர்கள் – அல்லாஹ்விற்காக அல்லாஹ்வின் பெயர் கூறித் தக்பீர் மொழிந்து “இறைவா! எனக்காகவும், உழ்ஹிய்யாக் கொடுக்காத என் உம்மத்தினர்களுக்காகவும்” என்று கூறி ஓர் ஆட்டை அறுத்தார்கள். (அபூதாவூத், திர்மிதீ)

உழ்ஹிய்யா மாமிசத்தைப் பங்கிடல்:
“உழ்ஹிய்யாக் கொடுப்பவர் தனது உழ்ஹிய்யாவிலிருந்து தானும் சாப்பிட்டு தனது உறவினர்களுக்கும் அன்பளிப்புச் செய்து ஏழைகளுக்கு தர்மமாகக் கொடுத்தல் சுன்னத்தாகும்.

“அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்: வறிய ஏழைகளுக்கும் வழங்குங்கள்”. (22:28)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்;
“மாமிசத்தை நீங்களும் சாப்பிட்டுப் பிறருக்கும் உண்ணக் கொடுங்கள், உங்களுக்காகச் சேமித்தும் வையுங்கள்”. (புகாரி, முஸ்லிம், நஸாயி)

குர்பானி மாமிசத்தை காபிர்களுக்குக் கொடுக்க எந்தத் தடையுமில்லை.

“(குர்பானிக்கான) ஒட்டகங்களை அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாக உங்களுக்கு நாம் ஆக்கியுள்ளோம். அவற்றில் உங்களுக்கு நன்மை உண்டு. எனவே, (அது உரிய முறையில்) நிற்கும் போது அதன் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறி (அறுத்து) விடுங்கள். அது தனது விலாப் புறங்களின் மீது சாய்ந்து விட்டால் அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள். உள்ளதைக் கொண்டு திருப்தியடைபவனுக்கும், யாசிப்பவனுக்கும் உணவளியுங்கள். நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு இவ்வாறே அவற்றை உங்களுக்கு நாம் வசப்படுத்தியுள்ளோம்”. (22:36)

இந்த அல்குர்ஆன் வசனத்தில் பொதுவாக ஏழைகள் என்றும், யாசிப்பவர்கள் என்றும் தான் அல்லாஹ் குறிப்பிடுகிறான். எனினும், ஹஜ்ஜுப் பெருநாள் முஸ்லிம்களின் பெருநாளாக இருப்பதால் அவர்கள் அன்றைய நாளில் பசியின்றி இருப்பது அவசியம். இந்த அடிப்படையில் தான் குர்பானி கொடுக்கப்படுகிறது. எனவே, முதலிடம் முஸ்லிம்களுக்குக் கொடுப்பது முக்கியமாகும். கூடுதலாக இருக்கும்போது காபிர்களுக்குக் கொடுத்தால் எந்தத் தவறுமில்லை.

மரணித்தவர்கள் சார்பாக குர்பானி:
மரணித்தவர்கள் சார்பாக குர்பானி கொடுப்பதற்குச் சரியான ஹதீஸ் எதுவும் காணக்கிடைக்கவில்லை. இதற்கு சிலரால் எடுத்துக் காட்டப்படும் ஆதாரம் சரியற்றதாகவும், பலவீனமாகவும் உள்ளது.

“ஆதமின் மகன் இறந்து விட்டால் மூன்று விடயங்களைத் தவிர மற்ற எல்லாத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. அவை, நிரந்தர தர்மம், பயன் தரும் கல்வி, தன் தந்தைக்காக துஆச் செய்யும் நல்ல குழந்தை என்று” நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அபூஹுரைரா(ரலி) – முஸ்லிம்)

மரணித்தவர்களுக்கு நன்மை சேர்க்கும் வழி இந்து மூன்றும்தான். இது அல்லாத வேறு வழிகளில் நன்மை சேரும் என்றால் அதை நபி(ஸல்) அவர்கள் தெளிவாகச் சொல்லியிருக்க வேண்டும். குர்பானி விடயத்தில் நபி(ஸல்) அவர்கள் இறந்தவர்கள் சார்பாக குர்பானி கொடுக்கும் படி கூறவில்லை. ஸஹாபாக்களும் கொடுத்ததில்லை.

இறந்தவர்கள் சார்பாகக் குர்பான் கொடுக்கலாம் என்று கூறக் கூடியவர்கள் எடுத்து வைக்கும் ஹதீஸும் ஆதாரபூர்வமானது அல்ல.

அலி(ரலி) அவர்கள் இரண்டு ஆடுகளைக் குர்பானி கொடுத்தார்கள். ஒன்றைத் தனக்காகவும், இன்னொன்றை நபி(ஸல்) அவர்களுக்காகவும் கொடுத்தார்கள். இது பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள். எனவே, அதை ஒருபோதும் விடமாட்டேன் என்றார்கள்.
(ஹன்ஷ் – திர்மிதி, அபூதாவூத்)

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் ஷரீக் இப்னு அப்துல்லாஹ், அபுல் ஹன்ஸா, ஹன்ஷ் இப்னு முஃதமர் ஆகிய மூன்று பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம் பெறுவதால் இந்தச் செய்தி ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல.

குர்பானியின் மூலம் அல்லாஹ் எதிர்பார்ப்பது இறையச்சம் மட்டுமே! இந்த இறையச்சம் அவரவர் கொடுக்கும் போதுதான் வெளிப்படும். இறந்தவருக்காக நாம் கொடுப்பது அவரின் இறையச்சத்தை வெளிப்படுத்தாது.

எனவே, உழ்ஹிய்யா எனும் வழி முறையை நபிவழி பேணி நாமும் கொடுக்க எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக.!

ஹஜ்-உம்ரா பெண்களுக்கான சட்டங்கள்

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

ஒவ்வொரு வருடமும் ஹஜ் கடமை நிறைவேற்றப்படுவது இஸ்லாமிய உம்மாவின் மீது விதியாக்கப்பட்ட கடமையாகும். உம்மத்தின் அங்கத்தவனான வசதி படைத்த ஒரு முஸ்லிம், ஆயுளில் ஒரு முறையேனும் ஹஜ்ஜை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளான்.

இஸ்லாத்தின் அர்கான்கான்களில் ஒன்றான ‘ஹஜ்’ கிரிகை பெண்களுக்கான ‘ஜிஹாத்’ என்ற அந்தஸ்துப் பெற்றதொரு கடமையாக இருக்கின்றது.

ஒரு முறை ஆயிஷா(ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் தூதரே! பெண்களுக்கும் ஜிஹாத் உண்டா?’ எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், ‘ஆம்! போராட்டமற்ற ஜிஹாத் அவர்களுக்குண்டு. அதுதான் ஹஜ்ஜும், உம்ராவும்’ என்றார்கள். (அஹ்மத் இப்னுமாஜா)

புகாரி கிரந்தத்தில் பின்வரும் அறிவிப்பொன்றுள்ளது.

ஆயிஷா(ரலி) அவர்கள் நபியவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதரே! அமல்களில் சிறந்ததாக நாம் ஜிஹாதைக் காண்கிறோம். நாமும் ஜிஹாத் செய்ய வேண்டாமா?’ எனக் கேட்ட போது, நபியவர்கள் ‘ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜே சிறந்தது’ என விடையளித்தார்கள். (புகாரி)

இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாக இருப்பினும், பெண்களுக்கான ஜிஹாதுக்கான பிரதியீடாக நபியவர்கள் சுட்டிக் காட்டியிருப்பது பெண்களுக்குஹஜ் செய்வதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றது.

ஆண்கள் ஹஜ் செய்வது கடமை. அதனை நிறைவேற்றினால் அவர்களுக்கு அக்கடமை நீங்குவதோடு, அதற்கான கூலியும் கிடைக்கும். ஆனால், பெண்கள் ஹஜ்ஜை நிறைவேற்றினால் இரண்டு கடமைகள் நீங்குவதோடு, இரண்டு கடமைகளின் கூலிகளும் கிடைக்கும் என நபியவர்கள் கூறியிருப்பதால் பெண்கள்ஹஜ் செய்வதில் அதிக நாட்டம் கொள்வது சாலச் சிறந்தது.

இந்த வகையில், பெண்களோடு மட்டும் தொடர்புபட்ட சில சட்டதிட்டங்களை விளக்கலாம் என நினைக்கிறோம்.

(1) மஹ்ரம்:
ஹஜ் கடமை நிறைவேறுவதற்கு ஆண்களுக்கும், பெண்களுக்குமான பொதுவான சில ஷர்த்துக்கள்-நிபந்தனைகள் காணப்படுகின்றன. முஸ்லிமாயிருத்தல், புத்தி சுவாதீனம், அடிமையற்ற நிலை, பருவ வயது, பொருளாதார சக்தி என்பனவே அவை.

இவற்றோடு பெண்களுக்குப் பிரத்தியேகமாக, மஹ்ரமான-திருமணம் செய்துகொள்ளத் தடுக்கப்பட்ட ஆண்களின் பிரயாணத் துணை நிபந்தனையாக விதிக்கப்பட்டுள்ளது.

(கணவன், தந்தை, மகன், சகோதரன், பால் குடிச் சகோதரன், தாயின் கணவன், கணவனின் மகன் என்பவரே பயணத்தில் கூட்டிச் செல்ல அனுமதிக்கப்பட்ட துணைகளாவர்.)

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் அறிவிப்பைப் பாருங்கள்!

‘எந்தவொரு ஆணும் மஹ்ரமில்லாமல் இருக்கும் பெண்களோடு தனிமையில் இருக்க வேண்டாம்! எந்தவொரு பெண்ணும் மஹ்ரமில்லாமல் பிரயாணிக்க வேண்டாம்!’ என நபியவர்கள் கூறிய போது, ஒரு மனிதர் ‘அல்லாஹ்வின் தூதரே! எனது மனைவி ஹஜ்ஜுக்காகச் சென்று விட்டார். நான் சில யுத்தங்களுக்காகப் பெயர் கொடுத்துள்ளேன். (நான் என்ன செய்வது?) எனக் கேட்டார். அதற்கு, நபி(ஸல்) அவர்கள் ‘நீரும் உமது மனைவியோடு சென்று ஹஜ்ஜை நிறைவேற்றுவீராக!’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

இப்னு உமர்(ரலி) அவர்களின் பின்வரும் அறிவிப்பை அவதானியுங்கள்!
‘எந்தவொரு பெண்ணும் தன்னுடன் மஹ்ரம் துணையில்லாமல் மூன்று நாட்களுக்குப் பயணிக்க வேண்டாம்.’ (புகாரி, முஸ்லிம்)

மஹ்ரமின்றி ஒரு நாள் கூட பயணிக்கக் கூடாது என்ற தடையைக் கொண்டுள்ள பல ஹதீஸ்கள் புகாரி, முஸ்லிம் கிரந்தங்களில் காணப்படுகின்றன.

ஒரு பெண்ணின் ஹஜ் பிரயாணத்திற்குத் துணையாகச் செல்பவர் பின்வரும் தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும். புத்தி சுவாதீனம்-சீரிய சிந்தனை, பருவ வயது, இஸ்லாம்.

பொருளாதார ரீதியான வசதிகள் கிடைக்கப் பெற்ற ஒரு பெண் மஹ்ரமில்லாவிட்டால் எவ்வாறு ஹஜ் செய்வது? என்ற கேள்வி எழலாம்.

இந்தக் கேள்விக்கு இன்றைய ஹஜ் முகவர்கள் வித்தியாசமான விளக்கங்கள் கொடுத்து, பெண்களை ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்று விடுகின்றனர். ஒரு இபாதத் நிறைவேறுவதற்கு அதன் ஒழுங்கு விதிகள் சரியாகப் பின்பற்றப்பட வேண்டும். நிபந்தனைகள்-ஷர்த்துக்கள் முழுமையடைய வேண்டும். இல்லாவிடில் அந்த இபாதத் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அது ஒரு புறமிருக்க, நபியவர்களின் தடையை மீறிய குற்றத்திற்கு ஆளாக நேரிடும் என்பதையும் கவனத்திற்கொள்ள வேண்டும். குளிக்கப் போய்ச் சேறு பூசிக் கொண்ட கதையாய் எமது இபாதத் அமைந்து விடக் கூடாது.

அப்படியாயின், மஹ்ரம் துணையற்ற பெண்களது ஹஜ்ஜின் நிலைப்பாடு என்ன? இஸ்லாம் அதற்கும் வழிகாட்டியே உள்ளது. குறிப்பிட்ட அந்தப் பெண்கள்தமக்காகப் பிரதிநிதிகளை நியமித்து அவர்களினூடாக ஹஜ் செய்துகொள்ளலாம்.

பெண்ணின் பிரயாணத்தில் மஹ்ரம் துணை இருப்பது ஜிஹாதுக்குச் செல்வதை விட முதன்மையானது என்பதனை முன்னர் நாம் பார்த்த இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் தெளிவாகவே எடுத்துரைக்கின்றது. நபியவர்களின் அந்த முடிவுக்கு மேலாக முடிவெடுப்பதற்கு எமக்கு எந்த அதிகாரமும் கிடையாது.

(2) கணவனின் அனுமதி:
ஆயுளில் ஒரு ஹஜ்ஜே கடமையானது. அதற்கு மேலதிகமாகச் செய்வது நஃபிலானது-விரும்பத்தக்கது. இவ்வாறு நஃபிலான ஹஜ் செய்ய விரும்புகின்ற ஒரு பெண் தனது கணவனின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஹக்குஸ் ஸவ்ஜ்-கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஒரு மனைவிக்கு வாஜிபாகும். எனவே, நஃபிலானதை விட வாஜிபான செயலே முற்படுத்தப்படல் வேண்டும் என இப்னுல் முன்திர் போன்ற இமாம்கள் விளக்கமளிக்கின்றனர்.

(3) ஆண்களுக்குப் பிரதிநிதியாகச் சென்று பெண்கள் ஹஜ் நிறைவேற்றல்:
ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்கள், மஜ்மூஉ பதாவா என்ற தனது நூலில், ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்காகப் பிரதிநிதி என்ற வகையில் ஹஜ் செய்ய முடியும் எனக் குறிப்பிடுகின்றார். இவ்வாறு பிரதிநிதியாக நியமிக்கப்படுபவர் மகளாகவோ, ஏனைய பெண்களாகவோ இருக்க முடியும் என்கிறார். அத்தோடு ஒரு ஆணுக்காகவும் பெண் ஹஜ் செய்ய முடியும் என நான்கு இமாம்கள், மற்றும் பெரும்பாலான அறிஞர்களும் கருதுகின்றனர்.

இமாம்களின் இக்கருத்துக்கு வலுவூட்டும் ஹதீஸும் ஆதாரமாக முன்வைக்கப்படுகிறது.

‘ஹத்அமிய்யா என்ற பெண்ணின் கேள்விக்கு விடையளிக்கும் போது அவளது தந்தைக்காக ஹஜ் செய்ய நபியவர்கள் அனுமதியளித்தார்கள்.’
(புகாரி, நஸஈ)

(4) இஹ்ராம் கட்டத் தயாராகும் போது பெருந்தொடக்கு ஏற்படல்:
ஹஜ்ஜுக்காகப் பயணித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண், வழியில் ஹைழ்-மாதவிடாய், நிபாஸ்-பேறு காலத் தீட்டு போன்ற உபாதைக்குள்ளானால் ஏனைய சுத்தமான பெண்களைப் போன்று இவள் இஹ்ராம் கட்டிக்கொள்ளலாம். இஹ்ராம் ஆடை உடுத்துவதற்குச் ‘சுத்தம்’ ஒரு நிபந்தனையாகக்கொள்ளப்படவில்லை.

இமாம் இப்னு குதாமா அவர்கள்: ‘இஹ்ராம் அணியும் போது ஆண்களைப் போலவே பெண்களும் குளித்துக்கொள்ள வேண்டும். ஹைழ், நிபாஸ் போன்ற உபாதைக்குள்ளான பெண்களுக்கும் விதிக்கப்பட்ட கடமையே ஹஜ்ஜாகும்.’

இது பற்றி ஜாபிர்(ரலி) அவர்களது பின்வரும் அறிவிப்பு விளக்குகிறது.
‘…நாங்கள் துல்ஹுலையாவை அடைந்த போது அஸ்மா பின்த் அமீஸ், முஹம்மத் இப்னு அபீபக்ர் அவர்களைப் பெற்றெடுத்தார்கள். உடனே, தான் என்ன செய்வது எனக் கேட்டு நபியவர்களிடம் தூதனுப்பினார்கள். அதற்கு நபியவர்கள், ‘குளித்துக் கொள்வீராக! ஆடையை மாற்றிக் கொண்டு, இஹ்ராம் அணிந்துகொள்வீராக!’ எனக் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம் 2334)

இது சம்பந்தமாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி இவ்வாறு கூறுகிறது:

‘பிரசவத் தீட்டு மற்றும் மாதவிடாய் உபாதைக்குள்ளான பெண்கள் கஃபாவைத் தவாப் செய்வதை மட்டும் விடுத்து ஏனைய அனைத்து கிரியைகளையும் இஹ்ராம் கட்டிக் கொண்டு நிறைவேற்றுவார்கள்.’
(அபூதாவூத், முஃனி 3/293-294, முஸ்லிம் 2307)

இங்கு ஹைழ்-நிபாஸ் உபாதைக்கு உள்ளானோரைக் குளிக்கச் சொல்லியிருப்பது சாதாரண சுத்தத்தையும், கெட்ட வாடைகளற்ற நிலையையும், நஜீஸின் தன்மையைக் குறைத்துக் கொள்ளவும்தான் என விளங்கிக்கொள்ளலாம்.

எனவே, இவ்விரு உபாதைக்குள்ளான பெண்களின் இஹ்ராமுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை. இஹ்ராம் நிலையிலேயே அவர்கள் தொடர்ந்திருப்பார்கள். இஹ்ராம் கட்டியவர்களுக்குத் தடை விதிக்கப்பட்ட எச்செயலிலும் ஈடுபடக் கூடாது. தொடக்கிலிருந்து சுத்தமாகிக் குளிக்கும் வரை அவர்கள் கஃபாவைத் தவாப் செய்யக் கூடாது.

ஒரு வேளை அரஃபா தினம் வரை அவர்களால் சுத்தமாக முடியவில்லை என்றிருக்குமானால், உம்ராவுக்காக அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்தால், அதிலிருந்து விடுபட்டு ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக்கொள்வார்கள். பின்னர் உம்ராவைச் செய்துகொள்ளல் வேண்டும். இதனால் இவர்கள் ‘காரின்’ என்ற நிலையை அடைவார்கள்.

இமாம் இப்னுல் கையிம்(ரஹ்) அவர்கள் இக்கருத்தை ஆதரித்துள்ளார்கள்:

இது பற்றிப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது:

ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாவது:
‘நாங்கள் (ஹஜ்ஜுக்காக) நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். அப்போது நாங்கள் ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்றும் எண்ணத்துடன் சென்றோம். நாங்கள் ‘சரிஃப்’ எனுமிடத்தில் அல்லது அதற்கு அருகில் இருந்த போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. நபி(ஸல்) அவர்கள் நானிருந்த இடத்திற்கு வந்தார்கள். அழுதுகொண்டிருந்த என்னிடம், ‘உனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டதா?’ என்று கேட்டார்கள். நான் ‘ஆம்!’ என்றேன். அதற்கு அவர்கள், ‘இந்த மாதவிடாய்ப் பெண்கள் மீது அல்லாஹ் விதியாக்கிய (இயற்கையான) ஒன்றாகும். எனவே, நீ குளிக்கும் வரை இறையில்லத்தைச் சுற்றித் (தவாஃப்) வருவதைத் தவிர, ஹாஜிகள் செய்கின்ற மற்றெல்லாக் கிரியைகளையும் செய்துகொள்!’ என்றார்கள். மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியர் சார்பாக மாட்டைக் குர்பானி கொடுத்தார்கள்.’

(5) இஹ்ராம் அணியும் போது செய்ய முடியுமானவை:
ஆண்கள் போன்றே பெண்களும் குளித்துச் சுத்தமாக இருந்துகொள்ள வேண்டும். களைய வேண்டிய முடிகளைக் களைந்துக் கொள்ளல், நகம் வெட்டுதல், கெட்ட வாடைகளை நீக்குதல் போன்ற விடயங்களைச் செய்துகொள்ளலாம். இஹ்ராம் கட்டிய நிலையில் செய்யக் கூடாதவைகளைச் செய்யாதிருக்க முற்கூட்டியே அவற்றைச் செய்துகொள்ளல் வேண்டும். இத்தேவைகள் இல்லாவிட்டால் அதனை இஹ்ராமுக்கான ஏற்பாட்டுக் காரியமாக நிறைவேற்றத் தேவையில்லை. இஹ்ராமுக்கான செயற்பாடுகளில் அவை உள்ளடங்க மாட்டாது. வாசம் வெளிப்படாத வகையில் மணம் பூசிக்கொள்வதும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

‘நாம் நபி(ஸல்) அவர்களோடு ஹஜ்ஜுக்காகச் சென்ற போது எமது நெற்றியில் கஸ்தூரியைப் பூசியிருந்தோம். எமக்கு முகம், வியர்த்து வடிந்த போது அதனை நபியவர்கள் கண்டார்கள். எனினும் அதனைத் தடுக்கவில்லை’. (ஆயிஷா(ரலி), அபூதாவூத்)

(6) முகம் மறைக்கக் கூடாது:
இஹ்ராம் கட்டியதும் பெண்கள் முகம் மறைக்கக் கூடாது. வழமையாக முகத்தை மறைத்து ஆடை அணியும் வழக்கமுள்ளவர்களாக இருந்தாலும் முகத்தைத் திறக்க வேண்டும்.

பெண்கள் (ஹஜ்ஜின் போது) முகத்தை மறைத்துக்கொள்ள வேண்டாம்!’ (புகாரி)

கைகள், கால்கள், முகம் ஆகிய உறுப்புக்களோடு ஒட்டிய நிலையில் Gloves, Socks, Burka (Face Cover) என்பன அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. எனினும், சாதாரண ஆடைகள் மூலம் அவை அன்னிய ஆண்களின் பார்வைக்குப் படாதவாறு ஆடை அணிவதில் குற்றமில்லை என்பது இமாம்களின் கருத்தாகும்.

(7) விரும்பிய ஆடையை அணிந்துகொள்ளல்:
இஹ்ராமின் போது கவர்ச்சியற்ற தாம் விரும்பிய ஆடைகளை அணிந்துகொள்ளப் பெண்களுக்கு அனுமதியுண்டு. குறிப்பாகப் பெண்களுக்குரிய ஆடைகளாக அவை இருக்க வேண்டும். ஆண்களின் ஆடைகளுக்கு ஒப்பானவையாக இருக்கக் கூடாது. உடல் உறுப்புக்களின் அமைப்புக்கள் விளங்குமாறு இறுக்கமானதாய் அமையக் கூடாது. உடலுறுப்புக்களை மறைக்காத மெல்லியதாய் இருக்கக் கூடாது. கைகள், கால்கள் தெளிவாக வெளிப்படும் தன்மை கொண்ட கட்டை ஆடைகளாக இருக்கக் கூடாது. பொதுவாகப் பெண்களின் ஆடைகள் விசாலமானதாகவும், தடித்ததாகவும், தாராளமானதாகவும் அமைந்திருக்க வேண்டும்.

பெண்களுக்கென்று தனியானதொரு நிற ஆடை அணிய வேண்டும் என்று எந்த விதியும் இஸ்லாத்தில் கூறப்படவில்லை. ஒவ்வொருவரும் தமக்கு விருப்பமான நிற ஆடைகளை அணிந்துகொள்ளலாம்.

(8) தனக்குள் மட்டும் தல்பியா சொல்தல்:
ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து கொண்டவர்கள் ‘தல்பியா’ சொல்வது கடமையாக்கப்பட்டுள்ளது. எனினும், தனது சத்தம் தனக்கு மட்டும் கேட்குமாறு தல்பியாவை மொழிவது சுன்னத்தாகும். எனவே, பெண்கள் தமது குரல்கள் வெளிப்படுத்தப்பட்டு அதனால் ஏனைய ஆண்களின் கவனம் ஈர்க்கப்படாதிருப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

(9) தவாப் செய்யும் போது:
தவாப் செய்யும் போது பெண்கள் தம்மை முழுமையாக மறைத்துக்கொள்ள வேண்டும்; சத்தத்தைத் தாழ்த்திக்கொள்ள வேண்டும்; பார்வையைத் தாழ்த்திக்கொள்வதோடு, ஆண்களோடு முட்டி மோதும் நிலையைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

கஃபாவில் ஆண்கள்-பெண்கள் வேறுபாடின்றிக் கலந்துகொள்ளும் நிலை காணப்படுவதால், இவ்விடயத்தில் பெண்கள் கவனமாக நடந்துகொள்ள வேண்டும்.
ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ போன்ற இடங்களில் ஆண்களோடு முட்டி, மோதி நெருக்கடிக்கப்பட்டு அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்ற கடமை கிடையாது. தவாபுக்காகவும் நெருக்கடிக்குள் செல்ல வேண்டிய தேவையில்லை. தவாபின் ஓடுபாதையில் ஓரங்களில் ஒடுவது நல்லது. ‘ஹஜருல் அஸ்வத்’ கல்லை முத்தமிடுவது ஒரு ஸுன்னா. ஆனால், ஆண்களோடு பெண்கள் நெருக்கடிக்கப்படுவது ஹராம். எனவே, ஸுன்னாவை விட ஹராம் பெரியது என்பதைக் கவனத்திற்கொள்ளல் வேண்டும். இமாம் நவவி(ரஹ்), இப்னு குதாமா போன்ற இமாம்கள் இக்கருத்தையே முன்வைக்கின்றனர்.

(10) தவாப் செய்யும் முறை:
பெண்கள் க’அபாவைத் ‘தவாப்’ செய்யும் போதும், ஸஃபா-மர்வாவுக்கிடையில் ‘ஸஈ’ செய்யும் போதும் நடந்தே செல்ல வேண்டும். ஆண்கள் ஓடும் இடங்களில் இவர்கள் ஓடத் தேவையில்லை.

(11) மாதவிடாய் பெண் செய்யக் கூடியவை:
மாதவிடாய்க்குட்பட்ட இஹ்ராம் அணிந்த பெண்கள் சுத்தமாகும் வரை எவற்றைச் செய்யலாம்? எவற்றைச் செய்யக் கூடாது? என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஹஜ்ஜோடு சம்பந்தப்பட்ட அனைத்துக் கிரியைகளையும் செய்யலாம். (இஹ்ராம், அரஃபாவில் தரித்தல், முஸ்தலிஃபாவில் தரித்தல், கல்லெறிதல்)

ஆனால், கஃஅபாவைத் ‘தவாப்’ செய்வது கூடாது.

இங்கு இன்னொரு விடயத்தைக் கவனத்திற்கொள்ள வேண்டும். அதாவது, தவாப் செய்த பின் ஸஈயின் போது மாதவிடாய் ஏற்பட்டு விட்டால், அவள் தொடர்ந்து ஸஈ செய்யலாம். தவாப் முடிவதற்கு முன்னர் மாதவிடாய் ஏற்பட்டு விட்டால் ஸஈ செய்ய முடியாது. ஏனெனில், தவாபுக்குப் பின்னரே ஸஈ செய்ய வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது.

கஃஅபாவைத் தவாப் செய்வதற்குப் போன்று ‘ஸஈ’ செய்வதற்குச் சுத்தம் நிபந்தனையாகக் கொள்ளப்படவில்லை.

(12) தலைமுடி கத்தரித்தல்:
ஹஜ்ஜையும், உம்ராவையும் நிறைவேற்றி விட்ட பெண்கள் ஆண்களைப் போன்று தலைமுடியை மழிக்க வேண்டிய கடமை கிடையாது. ஆண்கள் தமது தலைமுடியை முழுமையாக மழிக்க, பெண்கள் தமது கொண்டையின் கூந்தலில் சிறு பகுதியைக் கத்தரித்தால் போதுமானது.

பெண்கள் தலைமுடியை மழிப்பதை நபியவர்கள் தடை செய்துள்ளார்கள்.

இது பற்றி இப்னு அப்பாஸ்(ரலி) பின்வருமாறு அறிவிக்கிறார்கள்:

‘பெண்களுக்கு முடி மழிப்பது கடமையில்லை. அவர்கள் கத்தரித்தால் மட்டும் போதுமானது’ என நபியவர்கள் கூறினார்கள். (அபூ தாவூத்)

அலி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
‘பெண்கள் தலையை முழுமையாக மழிப்பதை நபியவர்கள் தடை செய்தார்கள்’. (திர்மிதி)

(13) தவாபுல் இபாழாவுக்குப் பின்னர் மாதவிடாய் ஏற்பட்டால்:
‘தவாபுல் இபாழா’ என்பது ஹஜ்ஜுக்காக நிறைவேற்றப்படும் கடமையாகும். இதன் பின்னர் மாதவிடாய் ஏற்பட்டு விட்டால், அவள் ‘தவாபுல் வதா’ (பிரியாவிடை தவாப்) நிறைவேற்ற வேண்டிய தேவை இல்லை.

இது பற்றி அயிஷா(ரலி) இனால் அறிவிக்கப்பட்டுள்ள பல செய்தி விளக்குகிறது. (புகாரி, முஸ்லிம், அஹ்மத்)

(14) மஸ்ஜிதுன் நபவியைத் தரிசித்தல்:
ஹஜ்ஜுக்குச் சென்ற பெண்கள் கடமை முடிந்த பிறகு விரும்பினால் மதீனாவில் அமைந்துள்ள மஸ்ஜிதுன் நபவிக்குச் சென்று தொழலாம். எனினும், கபுறுகளைத் தரிசிப்பதற்கென்றே பயணிப்பதற்கு அனுமதி கிடையாது. நபியவர்கள் கபுறடிக்குச் சென்று ‘பரகத்’ தேட நினைக்கக் கூடாது. அவ்வாறு எண்ணுவது முழு ஹஜ்ஜையும் பாழாக்கி விடும். மஸ்ஜிதுன் நபவிக்குச் சென்று அதன்பின் நபியவர்களதோ, ஏனைய நல்லடியார்களினதோ கபுறுகளை ஸியாரத் செய்வதற்கும், அதன் மூலம் மரணத்தை நினைவு கூர்ந்து அவர்களுக்காக துஆச் செய்வதற்கும் அனுமதியுண்டு.

இது வரை விளக்கிய விடயங்களைக் கவனத்திற்கொண்டு எமது ஹஜ்ஜை நிறைவேற்றி அன்று பிறந்த பாலகனைப் போன்று வீடு திரும்ப எம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் பாலிப்பானாக!